சினிமாவில் மற்றவர்களுக்கு எப்படியோ, நடிகைகளுக்கு, அழகையும் திறமையையும் விட அதிர்ஷடம் தான் அவர்களது இடத்தை தீர்மானிக்கிறது. அதிர்ஷ்டம் மட்டும் இருந்தால் ஒரு கழுதைக்குட்டி கூட நம்பர் ஒன் இடத்துக்கு வரமுடியும்’’ என்று அதிர்ச்சித் தத்துவம் பொழிகிறார் கேரளத்துக்குட்டி ரம்யாநம்பீசன்.
தமிழில் சி.எஸ்.அமுதனின் ‘ரெண்டாவது படம்’ என்ற ஒரே படத்தில் நடித்துக் கொண்டிருந்தாலும், கேரளாவில் படு பிஸியான நடிகை ரம்யா. சமீபத்தில், ‘இவன் மெகரூபன்’ என்ற படத்துக்காக ’அண்டே லொண்டே’ என்ற ஒரு பாடலைப்பாடி, பாடகியாகவும் மாறினார்.
‘’குழந்தை நட்சத்திரமாக 2000-த்தில் அறிமுகமாகி 2006-ம் ஆண்டு ‘’ ஆனச்சந்தம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானேன். அப்போதும் நான் அழகிதான். நன்றாகத்தான் நடித்தேன். மலையாளத்தில் ஒரு பத்து படங்களும் ,தமிழில் ‘ஆட்டநாயகன்’ ராமன் தேடிய சீதை’ ‘இளைஞன்’ ஆகிய படங்களிலும் நடித்தும் ஆறு வருடங்களாக ராசியில்லாதவளாகவே இருந்தேன்.
அடுத்து 2011-ல் வெளிவந்த ‘சப்ப குரிஷு’ ட்ராஃபிக்’ ஆகிய இரு படங்களும் என்னை பரபரப்பான நடிகை ஆக்கின. இப்போது, போதும் போதும் என்று சொல்கிற அளவுக்கு என்னைத்தேடி,மலையாள, தெலுங்கு, தமிழ்ப்படங்கள் வருகின்றன. இதை அதிர்ஷட தேவதையின் விளையாட்டு என்று சொல்வதைத்தவிர வேறு என்னசொல்வதென்று எனக்குத்தெரியவில்லை.
சினிமாவில் எனக்குத்தெரிந்து அதிர்ஷ்டம், நமக்கு கிடைக்கிற விளம்பரம் ஆகிய இரண்டும் தான் நம்மை உயர்ந்த இடத்துக்கு கொண்டுசெல்லும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நல்லவேளை எனக்கு விளம்பரம் தேடித்தர என் அருகில் ஒரு பெருங்கூட்டமே இருக்கிறது’’ என்கிறார் ’குள்ளநரிக்கூட்ட’ நாயகி.