’’கடந்த இரு தினங்களுக்கு முன்பு மறைந்துபோன, பிரபல தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி யின் இறுதிக்காலங்கள் குறித்து சொல்லவே அச்சமாக இருக்கிறது. பல பெரிய தயாரிப்பாளர்களாலும், நடிகர்களாலும் ‘முதலாளி’ என்று வாய் நிறைய அழைக்கப்பட்ட அவரிடம், தனது இறுதிக்காலத்தில் சொந்தமாக ஒரு கார் கூட இல்லை. அவ்வளவு வறுமையில் அவர் இறந்தார்’’ என்று நிகழ்ச்சியில் ஆதங்கப்பட்டார் பிரபல விநியோகஸ்தர்
கலைப்புலி ஜி.சேகரன்.
‘’மிட்டாய் பொம்மைகள்’ என்ற படத்துடன் தனது படத்தயாரிப்பு வேலையை துவங்கிய கே.ஆர்.ஜி. எம்.ஜி.ஆரைத் தவிர்த்து அனைத்து முன்னணி நடிகர்களையும் வைத்து படம் தயாரித்திருக்கிறார்.
ரஜினியின் ‘துடிக்கும் கரங்கள்’ மற்றும் ‘ஜானி’ கமலின் ‘கடல் மீன்கள்’ மற்றும் ‘சிகப்பு ரோஜாக்கள்’ போன்ற மிகப்பிரபலமான படங்களைத்தயாரித்த கே.ஆர்.ஜி.யின் கடைசித்தயாரிப்பு, செல்வா இயக்கத்தில்,மாதவன்,அப்பாஸ் நடித்த ‘குரு என் ஆளு’. 2009 ஏப்ரலில் வெளிவந்த இப்படத்துக்கு அடுத்து, படம் தயாரிப்பதற்காக கால்ஷீட் கேட்டு, கே.ஆர்.ஜி. அணுகாத நடிகர்கள் இல்லை.
பழசை நினைத்துப்பார்க்கும் பண்பு இல்லாதவர்களிடம், வாடகை டாக்ஸி அல்லது ஆட்டோவில் வந்து கால்ஷீட் கேட்கும் பழைய முதலாளிக்கு அவர் எதிர்பார்த்தது எப்படி கிடைக்கும்? எனவே மனதளவில் மிகவும் துவண்டு போயிருந்தார் கே.ஆர்,ஜி.
கே.ஆர்.ஜி. ஒரு சமீபத்திய உதாரணம் தான். பல சில்வர் ஜூப்ளி படங்களைத்தயாரித்துவிட்டு, சொந்த வீடு கூட இல்லாமல், ஆட்டோவிலும்,டவுன் பஸ்ஸிலும் பயணம் செய்யும் பல பழைய முதலாளிகள் கோடம்பாக்கம் ஏரியாவில் இன்னும் நடைப்பிணமாக நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.