பொண்ணு பாக்கக்கூட கிளம்பாமல், பொறக்கப்போகும் குழந்தைக்கு பேர் வைப்பதுதான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் ட்ரெண்ட்.
சில பெரிய பட நிறுவனங்களும் ,கார்ப்பரேட் கம்பெனிகளும் தமிழ்சினிமாவில் பணத்தைக்கொட்ட முன் வந்துள்ளதால் முன்னணி நடிகர்களும், இயக்குனர்களும் இன்னொரு பக்கம் காம்பினேஷன் பைத்தியம் பிடித்து அலைகிறார்கள்.
முன்பெல்லாம் பிரபல இயக்குனர்களைக்கண்டாலே ஓட்டமெடுத்த விஜய்,அஜீத் போன்றவர்கள் முருகதாஸ் படத்தில் இருக்கும்போதே கவுதமை மடக்கிப்போடுகிறார்கள். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ ஹிட் என்றவுடம் அந்த டைரக்டருடன் காம்பினேஷன் துண்டு விரித்துப் போடுவதற்கு அத்தனை முன்னணி ஹீரோக்களிடமிருந்தும் அழைப்பு வருகிறது.
லேட்டஸ்டாக இயக்குனர் கவுதம் மேனன் அலுவலகத்திலிருந்து வந்த பத்திரிகை குறிப்பை பாருங்கள்.
கவுதம் மேனனும் சூர்யாவும் இணைந்து’ துப்பறியும்ஆனந்தன்’ என்ற பெயரில் ஒரு படம் பண்ணப்போகிறார்களாம். இதில் துப்பறியும் ஆனந்தனாக சூர்யா நடிக்கப்போகிறாராம். 2013-ல் இதன் படப்பிடிப்பு துவங்குமாம்.
கவுதம், இப்போது ஜீவாவை ஹீரோவாக வைத்து இயக்கும் ‘நீ தானே என் பொன் வசந்தம்’ படமே இன்னும் முடிந்த பாடில்லை. அடுத்து அவர் விஜையை வைத்து இயக்கப்போகும் ’ யோஹன் அத்தியாயம் ஒன்று’ படத்தின் தலைப்பு தவிர்த்து, சுடப்போவது எந்த டி.வி.டி,யை என்பது உட்பட எதுவும் முடிவாகவில்லை.
அப்படியே எதிர்திசைக்குப்போனால், சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘மாற்றான்’ல் மாட்டி எப்படா வெளிய விடுவாங்க என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருக்கிறார். அடுத்ததாக அவருக்கு, நீண்ட நாள் கூண்டில் அடைபட்டுள்ள ஹரியின் ‘சிங்கம்2’ உறுமலுடனும், பெரும்பொறுமலுடனும் காத்திருக்கிறது. அதற்கு அடுத்து அறிவிக்கப்பட்டுள்ள லிங்குசாமி காம்பினேஷன், செல்வராகவன் காம்பினேஷன்கள் கியூ கட்டி நிற்கின்றன.
மேற்படி நான்கில் மூன்றை முடிக்கவே சூர்யாவுக்கு இரண்டு வருடங்களாவது ஆகும் எனும்போது, எதற்கு இப்படி துப்பறிய இறங்குகிறார்கள் என்று விசாரித்தபோது, இப்படிப்பட்ட காம்பினேஷன் அறிவிப்புகள் வந்தவுடனே பெரும் தொகையை ‘குனி’வதற்கு சில கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாராக இருப்பதாகவும், அவர்களிடம் புராஜக்டின் முன்பணமாக பாதிக்கும் மேல் அட்வான்ஸாக வாங்கிவிட்டு காம்பினேஷன்காரர்கள் ஹாயாக தங்கள் பழைய வேலையை பார்க்கக் கிளம்பிவிடுகிறார்களாம்.