ஸ்ருதி சேத் என்கிற இந்தி டி.வி. நடிகை பிரதமர் நரேந்திர மோடியின் ‘செல்பி வித் டாட்டர்’ என்கிற ட்விட்டர் கேம்ப்பெய்னுக்கு பதிலளித்து நொந்து போயிருக்கிறார். பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நரேந்திரமோடி இந்த ட்விட்டர் கேம்பெய்னை ஆரம்பித்திருந்தார்.
அதில் எல்லாரும் தங்களது பெண் குழந்தைகளுடன் ஒரு செல்ப்பி எடுத்து அனுப்ப வேண்டும். சிறந்த புகைப்படத்துக்கு பரிசு என்பன உண்டு. இந்த நரேந்திர மோடியின் ட்விட்டர் செய்திக்கு கடந்த 28ம் தேதி ஸ்ருதி சேத் வாழ்த்துச் சொல்லி போட்டோ அனுப்பியதோடு நில்லாமல் “செல்பிக்கள் மாற்றத்தை கொண்டு வராது. இது போன்ற கேம்பெய்ன்கள் எல்லாம் சும்மா விளம்பரத்துக்கே. வெறும் கண்துடைப்பு நாடகங்களே. பெண்களின் நிலைமையை இவை சமூகத்தில் எந்த விதத்திலும் மாற்றிவிடவில்லை. உண்மையான செயல்பாடுகளே மாற்றத்தை கொண்டுவரும்” என்று கொஞ்சம் காட்டமாக மோடிக்கு பதில் ட்விட்டிவிட்டார்.
அவ்வளவு தான் பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். வெறியர்கள் எல்லாம் நாடெங்கிலுமிருந்து திரண்டு வந்து ஸ்ருதி சேத்தின் ட்விட்டர் பக்கத்தில் அவரையும் அவரது முஸ்லீம் கணவர், பெண் குழந்தை என்று எல்லோரையும் சேர்த்து மிக மிகக் கேவலமாகவும், ஆபாசமாகவும், வைத்து திட்டித் தீர்த்துவிட்டனர். விலை மகள் பட்டம் முதல் பெண் நாய் என்பது வரை எல்லா விதமாகவும் திட்டி தங்கள் ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டனர்.
அவர்கள் எல்லாருக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவர் உருக்கமாய் இன்று ட்விட்டரில் ஒரு நீண்ட கடிதம் எழுதியுள்ளார். அதில் “நான் தவறிழைத்தேனா? அவர் பிரதமர் என்பதற்காக அவருடைய கொள்கைகளை விமர்சிக்கும் தகுதி எனக்கு கிடையாதா ? அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? எனது தந்தையின் பெயர் தெரியுமா என்றும், நான் சிறுவயதில் பாலியல் துன்புறுத்தப்பட்டேனா என்றும், நான் விபச்சாரியா என்றும் என் குழந்தையையும் வைத்து விபச்சாரம் செய்வேனா என்றும் இன்னும் பலவாறாக இழிவு படுத்திப் பேசினார்கள் பலர். அவர்களுக்கெல்லாம் ஒரு கேள்வி. ‘செல்பி வித் டாட்டர்’ என்று நீங்கள் உங்கள் மகள்களுடன் போட்டோ எடுத்துப் போட்டால் மட்டும் அவர்கள் நிலைமை மாறிவிடவில்லை. நான இன்று உணர்வது போல பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கியிருப்பதும் நீங்கள் தான்” என்று மனம் வருந்தி கூறியிருக்கிறார்.
அதே கடிதத்தில் பிரதமர் மோடியை நோக்கி அவர் கூறுகிறார்.. “அன்புள்ள சார், நீங்கள் உண்மையிலேயே பெண்கள் சுய எழுச்சி பெறவேண்டும் எனறு விரும்பினால் என் மீது நிகழ்ந்த இது போன்ற வன்முறை வார்த்தைத் தாக்குதலை கண்டித்திருக்கவேண்டும். என்னுடைய ட்வீட்டுகளை எதிர்ப்புக்களைக் கண்டு நான் அழித்துவிட்டேன். ஆனால் நான் கூறிய அந்த கருத்தில் இப்போதும் உறுதியாக நிற்கிறேன். செல்பிக்கள் மாற்றத்தை நிகழ்த்துவதில்லை. சீர்திருத்தங்களே சமூக மாற்றங்களே கொண்டு வரும். அதனால் போட்டோவை விட்டு விட்டு இன்னும் பெரிதாக முயற்சி செய்யுங்கள். நான் ஆரம்பத்தில் சொன்னது போல இது வெறும் கண்துடைப்பு என்பது இப்போது உறுதியாகிவிட்டது”
வழக்கம் போல நரேந்திர மோடி இதற்கு எதுவும் பதில் ஏதும் சொல்லவில்லை.