22 வயது இளைஞர் ஹர்திக் படேலின் தலைமையில் படேல் ஜாதியை ஓ.பி.சி பட்டியலில் சேர்க்கக் கோரி இரு நாட்களாக நடந்து வரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் நேற்று போலீசார் சுட்டதில் 6 பேர் வரை இறந்து போயினர். ஜூலை மாதத்தில் படிதார் அனாமத் அந்தோலம் என்கிற படேல் ஜாதியினருக்கான அமைப்பை ஆரம்பித்த அவர் உள்ளாட்சித் தேர்தல் சமயமான இப்போது போராட்டத்தில் குதித்திருப்பதன் மூலம் ஆளும் கட்சியினரையும், எதிர்க்கட்சியினரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

குஜராத்தில் பெரும் பதவிகளில் இருப்பவர்களில், பெரும் தொழிலதிபர்களில் பெரும்பாலோர் படேல் ஜாதியினர் தான். அரசின் பெரும் பதவிகளில் இருப்பவர்களும், ஆளும் கட்சியினரும் பெரும்பாலோர் படேல் சாதியினர் தான். அமெரிக்காவில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் படேல் ஜாதியினர் குடியேறியிருக்கிறார்கள். அவ்வளவு வாய்ப்புகளும் முன்னேற்றங்களும் அடைந்த சமூகம் படேல் சமூகம். குஜராத்தின் வைரத் தொழில் படேல் ஜாதியினரின் கைவசம் தான் உள்ளது.

இந்நிலையில் ஹர்திக் படேல் சாதியினருக்கு ஒதுக்கீடு செய்தால் வேலை வாய்ப்பு பெருகும் என்கிற பொய்யான வாதத்தை முன் வைத்து போராட்டத்தைத் துவக்கினார். அமைப்பு ரீதியாகவும், அதிகார ரீதியாகவும் தனது சாதியினர் சாதகமாக இருப்பதால் இவரால் இவ்வளவு பெரிய கூட்டத்தைத் திரட்டி ஒரு போராட்டத்தை நடத்திவிட முடிந்தது. கோரிக்கை என்னவோ மிகவும் உப்புச் சப்பானது என்றாலும் அதில் இருக்கும் சாதிய ஒருங்கிணைப்பு குஜராத்தை கலக்கிவிட்டது. எங்கள் போராட்டத்தை நசுக்கினால் மக்களுக்கு பால் சப்ளை, காய்கறி உள்ளிட்ட அன்றாடப் பொருட்கள் சப்ளை ஆகியவற்றை முடக்குவோம் என்று தைரியமாக அரசுக்கு ஹர்திக் படேல் சவால் விடுகிறார். காரணம் அமுல் நிறுவனம் உட்பட பால் நிறுவனங்கள் படேல் சாதியினரின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதுபோல அத்தியாவசியத் தொழில்கள் பலவும் அவர்கள் வசமே. 104 எம்.எல்.ஏக்கள் கொண்ட சட்டசபையில் 32 பேர் படேல்கள். குஜராத்தின் முதலமைச்சர் பென் படேலும் ஒரு படேல்.

இவ்வளவு முன்னேற்றமடைந்த ஜாதியான இவர்கள் திடீரென இப்படிப் போராட ஏதும் பின்னணி இருக்கலாமா ? மாநிலத்தில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம், வாழ்க்கையின் அடிப்படை தேவைகள் பிரச்சனைகளுக்குக் கூட வழியில்லாத நிலை பெரும்பாலான நடுத்தர இளைஞர்களை ரோட்டில் நிறுத்தியிருக்கிறது. சமீபத்தில் இந்திய அரசு எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் முன்னே பின்னே மற்ற தகவல்களையெல்லாம் வெளியிடாமல் நேராக இந்துக்களின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் முஸ்லீம்களின் மக்கள் தொகை வளர்ச்சி வீதத்தை விட குறைவு என்ற தகவலை வெளியிடுகிறது. அதன் மூலம் முஸ்லீம்களின் மேல் வெறுப்புணர்ச்சி தோன்றும் அரசியலை நடத்துகிறது. அதே போலத் தான்

குஜராத் அரசு முற்பட்ட சாதியினராக இருக்கும் படேல் சாதியினரை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க இயலாது என்று கூறிவிட்டது. இவர்களுடைய கோரிக்கை நியாயமில்லாதது. இவர்களைப் போல் உ.பி.யில் ஜாட் இனத்தவரும், ராஜஸ்தானில் குஜ்ஜார் இனத்தவரும் இதே பிரச்சனையை கையில் எடுத்திருக்கின்றனர். ஹர்திக் படேலின் கோரிக்கைகளை நிறைவேற்ற இயலாது என்று அரசும் தெரிவித்துவிட்டது. சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஹர்திக் படேலுக்கு திடீரென ஒரு மாதத்தில் லட்சக்கணக்கானோரை திரட்டும் பலமும், பல கோடி ரூபாய்கள் பணமும், பலமான அமைப்புகளும் எப்படி வந்தன ? இதன் பிண்ணணியில் இருப்பது யார் என்பது கேள்வியாக இருக்கிறது. ஹர்திக் படேலுக்கு ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி போன்ற ஹிந்துத்துவ தலைவர்களுடன் தொடர்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதை அவர்கள் வழக்கம் போல மறுத்துள்ளனர்.

இந்நிலையில் இடஒதுக்கீடு குறித்த தங்களது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தி என் அப்பன் குதிருக்குள் இல்லை என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு காண்பித்திருக்கிறது. விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் இணை பொதுச் செயலாலர் சுரேந்திரா ஜெயின் அளித்த பேட்டியில், “இடஒதுக்கீடு பிரச்சினையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஒரு நிலையான கொள்கையைக் கொண்டுள்ளது. சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே எங்கள் நீண்ட கால கோரிக்கை.
இந்திய அரசியலமைப்பை கட்டமைத்தவர்களுக்கும் இடஒத்துக்கீடு குறித்து இதே நிலைப்பாட்டுடன் தான் இருந்திருக்கின்றனர். முதலில் சில ஆண்டுகளுக்கு இட ஒதுக்கீடு அளித்துவிட்டு பின்னர் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே அவர்கள் வழிகாட்டுதலாக இருந்தது. தற்போது, குஜராத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தை உற்று நோக்கும்போது, உச்ச நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் ஒரு ஆணையம் அமைத்து இடஒதுக்கீடு ஏன் தேவை எங்கு தேவை என்பன குறித்து பகுப்பாய்வு செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவே தோன்றுகிறது. இடஒதுக்கீடு என்பதை பொருளாதாரத்தின் பின் தங்கியவர்களுக்கு மட்டும் வழங்கும் வகையில் வடிவமைக்கலாம். இட ஒதுக்கீடு கோரி ஓரிடத்தில் நடைபெறும் போராட்டம் மற்றொரு இடத்துக்கும் பரவும். உ.பி.யில் ஜாட் சமூகத்தினரும், ராஜஸ்தானில் குஜ்ஜார் இனத்தவரும் போராட்ட களத்தில் குதிப்பர். இடஒதுக்கீடு சர்ச்சையை அதிகப்படியான சமூகத்தினர் கிளப்பும்போது, அதை தீவிரமாக பரிசீலிப்பது அவசியம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இடஒதுக்கீடு போராட்டங்கள் மீது தான் நம் நாட்டின் கட்சிகள் அரசியலை வளர்க்கின்றன” என்றார்.

தாழ்ந்த சாதியினர் சமுதாயத்தில் தங்கள் நிலை, மரியாதை மற்றும் இருப்புக்காகப் போராடுவதையும் , முன்னோக்கிய சாதியினர் தங்களையும் பிற்படுத்தப்பட்டவராகச் சேருங்கள் என்று தினவெடுத்துப் போராடுவதையும் ஒன்றாக்கி அதன் மூலம் ஜாதிய வேறுபாடுகள் பொருளாதார வேறுபாட்டுக்குக் காரணமில்லை என்கிற ரீதியில் சாதி வாரி இட ஒதுக்கீட்டை ரத்து செய்யும் கோரிக்கையை வைக்கிறது வி.ஹெச்.பி. உண்மையில் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி இருப்பதும், கார்ப்பரேட்டுகளுக்கு விவசாயம் உட்பட எல்லாத் தொழில்களையும் திறந்து விட்டிருப்பதும் இந்த நெருக்கடி நிலைகளுக்குக் காரணம்.

Related Images: