சில வருடங்களாக படம் எதுவும் வெளியாகாத நிலையிலும் தன்மீது அன்பு குறையாத ரசிகர்கள்; ஒருவழியாக ரிலீசான ‘வாலு’ எதிர்பார்த்த அளவு போகாவிட்டாலும் அவரது ரசிகர்கள் சிம்புவை உற்சாகப்படுத்தத் தவறவில்லை. வாலுவிடம் வாலு சம்பந்தமாகப் பேசியபோது..
‘வாலு’ படத்திற்கு ரசிகர்களிடம் எப்படி வரவேற்பு இருந்தது ?
எதிர்பார்த்த அளவு வெற்றிப் படம் இல்லை தான். ஆனாலும் அதை தோல்விப் படமாக்காத ரசிகர்களின் அன்பு எனக்கு ஒரு ஆச்சரியம். சிலர் 10 ஹிட் படங்கள் கூடக் கொடுக்கிறார்கள். ஆக்டர், ஸ்டார் இருவருக்குமிடையே வித்தியாசம் உள்ளது. படம் நன்றாயிருந்தால்தான் ஆக்டரின் நடிப்பைப் பார்ப்பார்கள். இதைப் புரிந்துகொள்ளாமல் ஆட்டம் போட்டால் கீழே இறக்கிவிடுவார்கள். படம் ரிலீஸான முதல் நாள் யாருக்கு நல்ல ஓப்பனிங் இருக்கிறதோ அவர் தான் ஸ்டார். நான் ஸ்டார் என்று தலைக்கனத்தில் ஆடுவதும் இல்லை. தோல்வி வந்தால் இடிந்து போவதும் இல்லை. ரசிகர்களின் அன்பும், ஆதரவும் எனக்குக் கிடைத்த கொடுப்பினை. இறைவன் தந்த வரம். இப்போதும் திமிரும், திறமையுமே என் சொத்து. ஒருவனின் பலவீனத்தையும் ரசிக்க ஆரம்பித்துவிட்டால் அவனைச் சுலபமாக ஏற்றுக் கொள்ளமுடியும். என் ரசிகர்கள் என்னை என் பலவீனத்துடனே சேர்த்து ரசிக்கிறார்கள் என நினைக்கிறேன்.
சிறுவயதிலிருந்தே உங்களின் திரைவாழ்க்கையை உருவாக்கியது உங்கள் அப்பாதான். இப்போது வாலுபடம் கூட அவரில்லாமல் வெளிவந்திருக்காது. இல்லையா?
உண்மை. வாழ்க்கையின் எந்த இடத்திலும் இதுதான் என் இடம் என்று நின்றுவிடக்கூடாது என்று அப்பா பலமுறை என்னிடம் சொல்லியிருக்கிறார். அந்தா வார்த்தைகளை மதிக்கிறேனோ இல்லையோ என் அப்பாவை நான் மதிக்கிறேன். என் வாழ்வில் வெற்றிகளும் தோல்விகளும் மாறி மாறி வந்துகொண்டே இருக்கின்றன. வெற்றியின் கணங்களில் நான் அப்பாவைத் தேடுவதில்லை என்றாலும் என் தோல்வியின் கணங்களில் என்னுடன் தோள் சேர்ந்து நிற்பவர் அவரே. இப்போது வாலு பட ரிலீஸில் ஏற்பட்ட பிரச்சனைகள் கூட எனக்குப் பாடம் தான். பத்து பைனான்சியர்களுக்குப் பதில் சொல்லி ஒரு படத்தை வெளிக்கொண்டு வருவது எளிதான விஷயம் அல்ல. இக்கணத்தில் அப்பாவுக்கு பக்கபலமாக நின்ற அனைவருக்கும் என் நன்றிகள்..
உங்களது அடுத்த படங்கள் பற்றி..
‘பசங்க’ பாண்டியராஜின் இயக்கத்தில் ‘இது நம்ம ஆளு’ படம் வெளிவர இருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு வேலைகளும் கிட்டத்தட்ட முடியப் போகிறது. எனது மரியாதைக்குரிய படமாக ‘இது நம்ம ஆளு’ இருக்கும். செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றுவது எப்போதோ நடந்திருக்கவேண்டியது. இப்போது தான் கூடி வந்திருக்கிறது. ஒரு நாள் என்னை அழைத்து ‘உனக்குப் பொருத்தமான கதை இருக்கிறது. உனக்கு நடிக்க விருப்பமா?’ என்று கேட்டார். லாபநோக்கங்களுக்காக மட்டுமே அல்லாமல் சினிமாவை அதன் மேலுள்ள காதலால் உருவாக்கும் கலைஞர் செல்வராகவன். அவருடைய இயக்கத்தில் நான் நடித்து வரும் படம் ‘கான்’. படம் முழுக்க வனப்பகுதிகளில் நடக்கும் கதையாக இருக்கிறது.
நயன்தாரா, ஹன்சிகா எனத் தோல்வியில் முடிந்த உங்கள் காதல்கள் பற்றி..
அழகும், இளமையும் திறமையும் உள்ள பெண்கள் நம் வாழ்வில் வரும்போது சில சமயங்களில் இவருடன் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ளலாம் என்கிற அளவு மனதில் வேகம் தோன்றிக் காதல் வருகிறது. அப்படிப் பெண் வந்தபோது நெருங்கிப் பழகினேன். அவரும் சிரித்துப் பழகி பேசினார். ஆனால் அவரது நெருக்கத்தைக் காதல் எனத் தவறாகப் புரிந்துகொண்டேன். பின் ஒருநாள் எனது காதலைச் சொன்னபோது ‘எனக்கு உன்னைப் பிடிக்கும். ஆனால் அதன் பெயர் காதல் இல்லை” என்று சொன்னார். ‘நாம் இவ்வளவு நாள் பழகியதற்கு என்ன அர்த்தம்?’ என்று கேட்காமல் அவரை விட்டு விலகி வந்துவிட்டேன். நம் காதல் உண்மையானது என்பதற்காக அந்தப் பெண்ணும் நம்மைக் காதலிக்க வேண்டும் என நினைப்பது தவறல்லவா ? அப்படிக் கட்டாயப்படுத்த நினைத்தது தவறு என்பது இப்போது புரிகிறது. பெண்களை அவர்களின் இயல்புகளுடன் ரசிக்க முடியாமல் போனதற்கு எனது பக்குவமின்மையும் மனதில் இருந்த அழுக்குகளுமே காரணம் என்று நினைக்கிறேன். இப்போது என்ன செய்வது ? காலம் நமக்குக் கற்றுத் தரும் பாடத்திற்கு விலையில்லாமல் இருப்பதில்லை.. .
—————————————————————————————————————————
ஒட்டன் சத்திரத்தில் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் வாழ்நத தடயங்கள் !!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைிலுள்ள பச்சைமலையடிவாரத்தில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தலைமையில் செய்யப்பட்டுவரும் ஆய்வில் சுமார் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்கால மனிதன் பயன்படுத்திய கருவிகள் கிடைத்துள்ளன.
பழைய கற்காலத்தின் இறுதிப் பகுதியில் பயன்படுத்தப்பட்ட 6 வேட்டைக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது தவிர புதிய கற்காலத்தைய 58 கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இக்கருவிகளில் 26 செவ்வக வடிவிலும், 19 சதுர வடிவிலும், 10 நீள்செவ்வக வடிவிலும் உள்ளன. இவை எடைபோன்று உபயோகிக்கப்பட்டிருக்கலாம். முதல் சங்ககாலமும், புதிய கற்காலமும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டம் என்பதால் இக்கருவிகள் முதல் தமிழ்ச்சங்கத்து தமிழர்கள் உபயோகப்படுத்தியதா எனவும் ஆராய முற்பட்டுள்ளனர்.
மேலும் இவ்வாராய்ச்சியில் மூன்றாம் சங்ககாலத்தைச் சேர்ந்த பானை, ஒடுகள், ஆட்டுக்கல் போன்றவை உடைந்த நிலையில் கிடைத்துள்ளன. இப்பகுதியில் 12 ஆட்டு உரல்கள் கிடைத்துள்ளன. பண்டைய மக்கள் திணை, சாமை, கேழ்வரகு போன்றவற்றை இடிக்க பயன்படுத்தியிருக்கலாம் எனக் கருதுகிறார்கள். இந்த ஆதாரங்களின் அடிப்படையில் பச்சை மலையில் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் வாழ்ந்ததை உறுதி செய்யலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.