தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள உலக முதலீட்டாளர்களின் 2 நாள் மாநாட்டை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சர்வதேச வர்த்தக மைய அரங்கில் முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை காலை 11 மணியளவில் தொடங்கி வைத்தார்.
மாநாட்டுச் சின்னமான இறக்கைகளுள்ள குதிரையை அறிமுகப்படுத்திய முதல்வர் ஜெயலலிதா பின் மாநாட்டு கண்காட்சியையும் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
முதல்வர் உரையின் முக்கிய விவரங்கள்:
“தமிழகம் தொழில் முதலீட்டுக்கு ஏற்ற இடமாகத் திகழ்கிறது. நாட்டிலேயே அதிக அளவு அந்நிய முதலீட்டை ஈர்ப்பதில் மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்ததாக தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் தனிநபர் வருமானமானது தேசிய சராசரியைவிட 1.5 மடங்கு அதிகமாகவுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் தமிழக மின் துறை மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. 2011-ல் நாங்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற போது மின்பற்றாக்குறை உள்ள மாநிலமாக தமிழகம் இருந்தது. ஆனால், தற்போது தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறும் தருணத்தில் இருக்கிறது(உண்மையில் தமிழ்நாடு மின் வாரியம் 14 ஆயிரம் கோடி ருபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது). தமிழக அரசின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்டங்கள், நீண்ட காலத்துக்கான மின் விநியோகத் திட்டங்கள் மூலம் தமிழகம் மின் மிகையை எட்டும் தருவாயில் உள்ளது. கடந்த 2012-ல் சூரிய மின் உற்பத்திக் கொள்கை வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில், நாட்டிலேயே அதிக சூரிய மின்னுற்பத்தி செய்யும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.
2013-14 இடைப்பட்ட காலத்தில், சிறு, குறு தொழில்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.
முதலீட்டாளர்களுக்கான சூழலை ஏற்படுத்தித் தருவதில் தமிழகம் கடின உழைப்பைச் செலுத்தியுள்ளது. மாநில அரசின் கொள்கைகளை அத்துமீறாமல் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அரசு திட்டங்களை வகுத்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க விரும்புவோர்க்கு 30 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் முதலீடு செய்ய வரிச்சலுகை அளிக்கப்படுகிறது. இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க தேவையான உதவியை மத்திய அரசு சார்பில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்துதர உதவ வேண்டும்.”
இவ்வாறு முதல்வர் பேசினார்.
மாநாட்டில் இன்று வெளியான தொழில் முதலீட்டு அறிவிப்புகள்:
* தென் தமிழகத்தில் 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் தொழில் முதலீடு செய்யப்படும்- ஹெச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார்.
* தமிழகத்தில் மூன்றாவதாக ஒரு தொழிற்சாலை அமைக்கப்படும்- யமஹா நிறுவனம்.
* ஒசூரில் தொழிற்சாலை தொடங்கப்படும் – டிவிஎஸ் மோட்டார் நிறுவனம்
* டைசல் பயோ பார்க் இரண்டாவது கிளையை நிறுவும்
* ரூ.2000 கோடி தமிழகத்தில் முதலீடு செய்யப்படும். 2022-ல் இந்த முதலீடு இருமடங்காகும்- மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம்.