சில செய்திகளைப் படிக்கும்போதே அதற்கு தீ வைத்து கொளுத்தவேண்டும் போல இருக்கும். இன்று அப்படி வெளியாகியிருக்கும் செய்தி, ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷங்கர்-விக்ரம் கூட்டணியில் உருவாக இருக்கும் ‘ஐ’ படம் பற்றியது.
இந்தப்படத்தின் பட்ஜெட் 140 கோடியாம். இது தமிழ்சினிமா இதுவரை
காணாத பட்ஜெட்டாம். ஷங்கர் சம்பளம் ,ஏ.ஆர்.ரகுமான், விக்ரம், ஒளிப்பதிவுக்கு பி.சி.ஸ்ரீராம் என்று டீமே பெரிய லெவலில் இருப்பதால் இவ்வளவு பெரிய பட்ஜெட் ஆகிறதாம்.
சரி இதுகுறித்து, ஒரு விநியோகஸ்தரிடம் பேசுவோமே என்று தகவலைச்சொன்னபோது, ‘இந்த நியூஸுக்கு எதால சிரிக்கிறதுன்னே தெரியலை.’’ என்று ஆரம்பித்தார் அவர்.
’’ ஆஸ்கார் ரவி ‘நண்பன்’ ரிலீஸுக்கு அப்புறம் ஷங்கரை கையில வச்சிக்கிட்டு ஒரு பெரிய காம்பினேஷன் புடிக்கனுமுன்னு ரஜினி,கமல்ல துவங்கி எத்தனையோ குட்டிக்கரணம் அடிச்சிப்பாத்தார். ஒண்ணும் செட் ஆகலை.
அதுலயும் சூர்யா குடுத்த நோஸ்கட் ‘ஸாரி கொஞ்சம் ஓவர் ரகம்.இந்த காம்பினேஷனுக்கு சூர்யாவோட சம்பளம் என்னன்னு ஆஸ்கார் ரவி கேட்டனுப்புனப்ப, முதல்ல 25 கோடி கேட்டார் சூர்யா. உடனே ரவி,’’ஆஸ்கார் பிலிம்ஸ் ஷங்கர் காம்பினேஷன்ல நடிக்க சூர்யா குடுத்து வச்சிருக்கனும்.அதை மறந்துட்டு இவ்வளவு சம்பளம் கேக்கலாமா’’ என்று சொல்லியனுப்ப, சற்றும் யோசிக்காமல் தனது சம்பளத்தை ’ங்கொய்யால 35 கோடி’ என்று அறிவித்தார் சூர்யா.
இதை சற்றும் எதிர்பாராத ஆஸ்கார் ரவி, கைவசம் இருக்கிற ஒரே நடிகரையும் விட்டுவிட்டால், பின்னர் கைசூப்பிக் கொண்டுதான் அலைய வேண்டும் என்று முடிவு செய்தே வேறு வழியில்லாமல் விக்ரம்- ஷங்கர் என்று ஒரு தொத்தலான காம்பினேஷனை முடிவு செய்தார்.
இப்போதுள்ள நிலவரப்படி, இந்த காம்பினேஷனுக்கு 25லிருந்து 30 கோடிக்கு பிசினஸ் ஆனாலே பெரிய ஆச்சரியம் என்கிறபோது ஆஸ்கார் ரவி 140 கோடி பட்ஜெட்டில் படமெடுக்கிறார் என்றால் ஒன்று அது பச்சைப் புளுகாக இருக்கவேண்டும்,இல்லையெனில் அவர் வசம் நோட்டடிக்கிற மெஷின் இருக்க வேண்டும். இரண்டுல எது உண்மைன்னு எனக்கு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க பாஸ்’’ என்று முடித்தார் அந்த முன்னணி விநியோகஸ்தர்.