5 தேசிய விருதுகளை வென்ற பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மி ஒரு சமூக ஆர்வலருமாவார். ஒரு முஸ்லீம் அமைப்பு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஃபத்வா விதித்திருப்பதற்கு பலரும் வாய் திறந்து எதிர்ப்பு தெரிவிக்க பயப்பட்ட நிலையில் தனது எதிர்ப்பை கூறியுள்ளார் நடிகை ஷபானா ஆஸ்மி.
ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் முகமது – தி மெஸஞ்சர் ஆப் காட் பட இயக்குநர் மஜித் மஜிதி இருவருக்கும் இஸ்லாமிய மதத்தை தவறாக சித்தரித்து படம் எடுத்துள்ளதாக மும்பையைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய அமைப்பினர் அவருக்கு ஃபத்வா கொடுத்துள்ளனர். ஃபத்வா கொடுத்த இஸ்லாமிய அமைப்பை நோக்கி ஷபானா ஆஸ்மி பகிரங்கக் கேள்விகள் கேட்டுள்ளார்.
“ஃபத்வா கொடுத்த இஸ்லாமிய அமைப்பு சரியான அங்கீகாரம் பெற்ற அமைப்பா? எந்த அடிப்படையில் ஃபத்வா கொடுத்தார்கள்? முக்கியமாக படத்தைப் பார்த்தார்களா அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் ? இவற்றுக்கான பதில், கண்டிப்பாக ‘இல்லை’ தான். ஒரு படத்தைப் பார்க்காமலேயே சும்மா போகிற போக்கில் கருத்து சொல்லும் நபர்களை நம்பி ஒரு படம் இப்படித்தான் இருக்கும் என எந்த நம்பிக்கையில் ஃபத்வா கொடுத்தார்கள்? மேலும் ஃபத்வா என்பது விதிக்கப்படுவது அல்ல; அது முழுமையான வேண்டுகோள் மட்டுமே. இவர்கள் அதையே தவறாகக் கொடுத்துள்ளார்கள். மேலும் தீர விசாரிக்காமல் ஃபத்வா கொடுக்க முடியாது,” என கூறியுள்ளார் ஷபானா ஆஸ்மி.
ஒரு கருத்துக்கு எதிர் கருத்து சொல்லும் உரிமை எல்லோருக்கும் உண்டு. இதுபோல கவனம் பெறுவதற்காக, விஷயம் வெளிவரும் முன்னரே காதில் கேட்ட தகவல்களைக் கொண்டு, பத்வா அறிவிக்கும் அளவுக்குச் செல்லும் இது போன்ற இயக்கங்களை கண்டிக்க ஒரு ஒருங்கிணைந்த அமைப்பு ஏன் முஸ்லீம்களிடையே இல்லை?