ஆஸ்கருக்கு ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியாவிலிருந்து கலந்துகொள்ளும் படம், “காக்கா முட்டை” தான் என்று எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால், “கோர்ட்’ என்ற மராத்தி மொழி திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுவிட்டது.
புகழ் பெற்ற ஆஸ்கார் திரைப்பட விருதுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் திரைப்படங்கள் அனுப்பப்படுகின்றன. அடுத்த ஆண்டுக்கான விருது போட்டியில் கலந்துகொள்ள இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் படத்துக்கான தேர்வு சமீபத்தில் நடந்தது. இதில், காக்கா முட்டை, பாகுபலி, பிகே, மசான், மேரி கோம், ஹைதர் உள்பட 30 திரைப்படங்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன.
இதிலிருந்து ஒரு படத்தை தேர்வு செய்ய, பிரபல இயக்குநர் அமோல் பாலேகர் தலைமையிலான நடுவர் குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்தக் குழுதான், புதுமுக இயக்குநர் சைதன்யா தமானே இயக்கியுள்ள கோர்ட் என்ற மராத்தி மொழித் திரைப்படத்தை தேர்ந்தெடுத்துள்ளது.
கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கி துப்புரவுத் தொழிலாளி உயிரிழக்கும் அவலத்தை விவரித்தும், இந்திய அரசியல் சட்டத்தை விமர்சித்தும் பாடல் இயற்றுகிறார் வயதான நாட்டுப்புற பாடகர் ஒருவர். இதனால் அவர் மீது வழக்கு தொடுக்கப்படுகிறது. வழக்கை அவர் எதிர்கொள்ளும் விதத்தை மையமாக வைத்து கோர்ட் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டிக்கு, காக்கா முட்டை, குற்றம் கடிதல் போன்ற படங்களும் போட்டியிட்டன. இதில் காக்கா முட்டை நிச்சயம் தேர்வாகும் எனப் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஸ்லம்டாக் மில்லியனர் போல காக்கா முட்டை படமும் ஏழைகளின் வாழ்க்கையை இயல்பாக சித்தரித்துள்ளதால் நிச்சயம் ஆஸ்கருக்குத் தேர்வாகும் என்று பலரும் நம்பினார்கள்.
ஆனால் இந்த பந்தயத்தில் காக்கா முட்டை தோல்வி அடைந்துவிட்டது. காக்கா முட்டை ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டால் நிச்சயம் ஆச்சர்யமான முடிவுகள் கிடைக்கவும் வாய்ப்புண்டு என்றும் கருதப்பட்டது. ஆனால் கோர்ட் படம் காக்கா முட்டையை விடவும் கூடுதல் பலத்துடன் இருந்ததுதான் காக்கா முட்டை வாய்ப்பை இழக்க காரணமாகிவிட்டது.
மம்முட்டி நடித்த மதேமரி என்ற மலையாளப் படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அதுவும் தேர்வாகவில்லை.
ஆஸ்கர் விருதுக்கான டாப் 5 பட்டியலில் இதுவரை இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட மதர் இந்தியா (1957), சலாம் பாம்பே (1988), லகான் (2001) போன்ற படங்களே இடம்பெற்றன. கோர்ட் எந்தளவுக்கு முன்னேறிச் செல்லும் என்பது, ஆஸ்கார் விருது அறிவிக்கப்படும் 2016 பிப்ரவரி 28ம் தேதி தெரியும்.காக்கா முட்டை தேர்வாகாதது பலவித சர்ச்சைகளை கிளப்பி இருக்கிறது.
“தற்போது தேர்வாகியிருக்கும் “கோர்ட்” என்ற மராத்திய படம் சிறப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் அதற்கு சற்றும் குறைவானதல்ல காக்காமுட்டை. இதற்குக் ஆஸ்கார் விருதுக்காக படங்களை பரிந்துரைப்பதில் இருக்கும் குழப்பம்தான் காரணம்.
அதாவது, ஆஸ்கார் விருதில் சிறந்த நடிப்பு, ஒளிப்பதிவு போன்ற தனித்துறைகளுக்கு ஹாலிவுட் படங்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். மற்றபடி பிறமொழி படங்கள் என்றால், “சிறந்த பிறமொழி படம்” என்ற விருதுதான் வழங்கப்படும்.
உதாரணமாக என்னதான் சிறப்பாக வேற்றுமொழி படத்தில் இசை அமைத்தாலும் சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைக்காது. ஏ.ஆர். ரஹ்மானுக்கு கிடைத்தது, அவர் ஆங்கிலப்படத்தில் சிறப்பாக இசை அமைத்ததால்தான்.
ஆனால் நம்மவர்களுக்கு புரிதல் இல்லை. தமிழ் படத்தில் நடிக்கும் கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகர் விருது கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யும் ரசிகர்கள் உண்டு. ஆஸ்கார் விதிப்படி அது சாத்தியமே இல்லை.
பிற மொழிப்படங்கள் என்ற பிரிவில்தான் மற்ற மொழி படங்கள் எல்லாம் போட்டியிட வேண்டும். பிரான்ஸ், இங்கிலாந்து, பாகிஸ்தான் போல ஆகப்பெரும்பாலானவர்கள் ஒரே மொழி பேசுவதால் பிரச்சினை இல்லை. பல்வேறு மொழிகளை பலகோடி பேர் பேசும் இந்தியாவுக்கு இந்த விதி சரிவராது.
ஆகவே அடுத்த ஆண்டில் இருந்து இந்தியாவில் பெரும்பாலோர் பேசும் மொழி அனைத்தில் இருந்தும் தலா ஒரு படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்ப வேண்டும். அப்போதுதான், அனைத்து இந்திய மொழி படங்களுக்கும் சரியான வாய்ப்பு கிடைக்கும். இல்லாவிட்டால் இரு சிறந்த படங்கள் இருக்கும்போது, தேர்வாளர்கள் தங்கள் தாய்மொழியைச் சேர்ந்த படத்தையே தேர்ந்தெடுப்பார்கள்” என்கிறார்கள் திரைப்பட ஆர்வலர்கள்.