மதுரையில் ஆரப்பாளையம் பஸ்ஸ்டாண்ட் பகுதியில் நேற்று இரவு இரு அரசு பஸ்களில், அடுத்தடுத்து நடந்த இரு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. “ரிமோட்’ மூலம் இக்குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
ஆரப்பாளையம் பஸ்ஸ்டாண்டிற்கு நேற்று இரவு 7.45 மணிக்கு ஓசூரில் இருந்தும், சேலத்தில் இருந்தும் வந்த இரு பஸ்கள் இரவு கிளம்ப வேண்டியிருந்தது. பஸ்ஸ்டாண்டிற்குள் நிறுத்த இடமில்லாததால் வைகை ஆற்றின் ஓரமாக பஸ்களை நிறுத்திவிட்டு, ஓசூர் மற்றும் சேலம் பஸ் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் பஸ் மேற்கூரைப்பகுதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.
இரவு 8.40 மணியளவில், ஓசூர் பஸ் பின்பக்க படிக்கட்டுபகுதியில் குண்டு வெடித்து படிக்கட்டு சேதமடைந்தது. பஸ்சின் மேற்பகுதியில் படுத்திருந்த டிரைவரும், கண்டக்டரும், அப்பகுதியில் உள்ளோரும் பதறியடித்து வந்து பார்த்தனர். 5 நிமிடம் கழித்து அருகில் இருந்த சேலம் பஸ்ஸின் முன்புறப் படிக்கட்டில் குண்டு வெடித்தது. அதிக சக்தியில்லாத குண்டு போல இவை தெரிகின்றன. இதனால் யாருக்கும் எதுவும் காயம் ஏற்படவில்லை. பஸ்ஸூம் சிறிய அளவிலேயே சேதமடைந்துள்ளது.
போலீஸ்கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ், துணைகமிஷனர் சமந்த்ரோஹன் மற்றும் ஏராளமான போலீசார் குண்டுகள் வெடித்த பஸ்களை ஆராய்ந்தனர். குண்டுவெடிப்பை குறிப்பிட்ட நேரத்தில் சற்று தள்ளியிருந்து “ரிமோட்’ மூலம் இயக்கி வெடிக்க வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. குண்டு வெடித்த இடத்தில் ரீசார்ஜபிள் பேட்டரி பாகங்கள்,வயர்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த இரு குண்டுவெடிப்புகளும், மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட நாளன்று நடந்துள்ளன. மேலும் புழல் சிறையில் ஏற்பட்ட கலவரம் காரணமாக பன்னா இஸ்மாயில் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். எனவே இந்த நிகழ்வுகளுக்கும் குண்டுவெடிப்புகளுக்கும் தொடர்பா என விசாரித்து வருகின்றனர்.