ஆப்கானிஸ்தானில், அமெரிக்க ராணுவத்தின் சரக்கு போக்குவரத்து விமானம் ஒன்று தலிபான் பயங்கரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. அதில் இருந்த ஆறு அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட, 11 பேர் உயிரிழந்தனர்.
வடக்கு ஆப்கானிஸ்தானில், முக்கியத்துவம் வாய்ந்த நகரான குண்டூசை, தலிபான் பயங்கரவாதிகள், சில நாட்களுக்கு முன் கைப்பற்றினர். குண்டூஸ் நகரை மீட்க அமெரிக்கா, பிரான்ஸ், டென்மார்க் நாடுகளின் கூட்டுப்படையான, ‘நேட்டோ’வைச் சேர்ந்த வீரர்கள், களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் இத்தனை வருடங்களாக அமெரிக்கா, ஐ.நாவின் நேட்டோ வழியே தனது கால் தடம் பதித்து இவ்வளவு வருடங்கள் ஆகியும், அந்நாட்டில் போர் முடிந்த பாடில்லை. அமெரிக்க ராணுவம் உலகிலேயே பலம் வாய்ந்த ராணுவங்களில் ஒன்று. ஆனால் அதனால் ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை இத்தனை வருடங்களாக ஒழிக்க முடியவில்லை என்பது நம்பக்கூடியதா ?
நேற்று அமெரிக்க விமானப்படையைச் சேர்ந்த, சி-130 ரக சரக்கு போக்குவரத்து விமானம் கிழக்கு பாகிஸ்தானில் நொறுங்கி விழுந்தது. விமானத்திலிருந்த, ஆறு அமெரிக்க வீரர்கள் மற்றும் ஐந்து சிவிலியன்கள் மரணம் அடைந்தனர். விபத்துக்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறோம். இவ்வாறு பென்டகன் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இதற்கிடையே, தலிபான் இயக்க செய்தித் தொடர்பாளர் ஸபியுல்லா முஜாகித், ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில், ‘தலிபான் இயக்கத்தை சேர்ந்த முஜாகிதீன்கள், நான்கு இன்ஜின் உள்ள, அமெரிக்க விமானத்தை, ஜலாலாபாத்தில், வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தி உள்ளனர்’ என, தெரிவித்துள்ளார். ஜலாலாபாத் நகரம், பாகிஸ்தான் எல்லை அருகே உள்ளது. இங்கு, பல பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. ‘நேட்டோ’ கூட்டுப் படைகள் இந்த நகரத்தில் தான் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றன.