தமிழ்ச் சினிமாவின் பெரும் நடிகைகளில் ஒருவரான மனோரமா இன்று திடீரென்று வந்த மாரடைப்பால் சென்னையில் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 78.
மனோரமாவின் இயற்பெயர் கோபிசாந்தா. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் 1937ல் பிறந்தார். 12 வயதிலேயே அந்தக் காலங்களில் மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். அவரது நடிப்பு வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்தவர் அவரது தாய் ரமாமிர்தம் ஆவார்.
எஸ்.எஸ்.ராஜேந்திரனின் எஸ்.எஸ்.ஆர் நாடக மன்றத்தில் அவர் சேர்ந்தபின்புதான் அவரது நாடக வாழ்க்கை பிரகாசித்தது. அந்தக் குழு சார்பில் நடத்தப்பட்ட மணிமகுடம் என்கிற நாடகத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் அவரது நடிப்புத் திறன் கலை உலகில் வெளிச்சத்துக்கு வந்தது.
1958ல் மாலையிட்ட மங்கை படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார் மனோரமா. 1963ல் வந்த கொஞ்சும் குமரியில் அவர்தான் ஹீரோயின். இதுவரை ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இது ஒரு கின்னஸ் உலக சாதனையாகும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். முன்னூறுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னக மொழிகள் எல்லாவற்றிலும் மனோரமாவின் கால்தடம் பதிந்திருக்கிறது.
1964ல் தனது நாடகக் கம்பெனியின் மானேஜர் எஸ்.எம்.ராமனாதனை காதலித்து மணந்தார் மனோரமா. அவர்களுக்கு பூபதி என்கிற மகன் உண்டு. ஆனால் இரு வருடங்களிலேயே அவரிடமிருந்து விவாகரத்துப் பெற்று பிரிந்துவிட்டார்.
தமிழ் திரைப்பட வரலாற்றின் மைல்கல்களில் ஒன்றாக அறியப்படும் தில்லான மோகனாம்பாள் படத்தில் ஜில்ஜில் ரமாமணி என்கிற பாத்திரத்தில் அவர் சிவாஜி, பத்மினி போன்றவர்களுக்கு இணையாக நடித்துப் புகழ் பெற்றார். அவர் நடித்ததில் தனக்கே சவாலாக அமைந்த பாத்திரமாக அவர் கருதிய பாத்திரங்களில் ஒன்று ‘நடிகன்’ படத்தில் சத்யராஜூக்கு ஜோடியாக வயதான பாத்திரத்தில் நடித்தது என்கிறார்.
பத்திரிக்கையாளரும் நடிகருமான ‘சோ’ வுடன் மனோரமா பல படங்களில் நடித்திருக்கிறார். அவரது நடிப்புத் திறனைக் கண்ட சோ அவரை ‘பெண் சிவாஜி கணேசன்’ என்று பாராட்டினார்.
பத்ம ஸ்ரீ, கலைமாமணி உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்ற மனோரமா உண்மையிலேயே ஒரு பெண் சிவாஜி கணேசன் தான். அவரது இயல்பான நடிப்புத் திறமையை வெளிக்கொணர ஒரு யதார்த்த சினிமாகாரரும் அவரிடம் செல்லவில்லை. காரணம் அவர் ஏற்கனவே கமர்ஷியல் சினிமாவில் பெற்று விட்ட பெயர்.
அதனாலேயே இந்தப் பெண் சிவாஜிகணேசன் ஒரு உலக அளவில் கவனம் பெறும் படத்தில் நடிக்க முடியாமலே போய்விட்டார். அவருக்காக கலை உலகம் கலங்கி நிற்கும்.