இந்திய ராணுவத்தில் பெண்கள் வந்து ரொம்ப வருடங்களாகிறது. பொதுமக்கள் செல்லும் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் பைலட்டுகளாக பெண்கள் அதற்கும் முன்பே நியமிக்கப்பட்டுவிட்டனர். தற்போது புதிதாக, இந்திய விமானப் படையில் குண்டுகளை வீசும் விமானங்களை இயக்கும் விமானிகளாகவும் பெண்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் .
இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், “விமானப் படையில் உள்ள பெண்களை ஊக்குவிக்கும் விதமாக, போர் விமானங்களை இயக்கும் பணியில் பெண் பைலட்கள் சேர்க்கப்படுவார்கள். இந்திய விமானப் படையில் ஹெலிகாப்டர்களை இயக்கும் பணியில் உள்ள பெண்களின் பங்களிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது. இதன் தொடர்ச்சியாகவே, போர் விமானங்களை இயக்கும் பணியிலும் பெண்களை தேர்வு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, டெல்லியில் நடைபெற்ற இந்திய விமானப் படையின் 83-வது ஆண்டு விழாவில் விமானப் படை தலைமை தளபதி அருப் ரஹா பேசும்போது,
“”இது ஒரு முற்போக்கு நடவடிக்கை. அதேநேரம், இவர்கள் இப்போதைக்கு வான்வழி பாதுகாப்பு, பயிற்சி உள்ளிட்ட உள்நாட்டு பணிகளில் மட்டுமே ஈடுபடுத்தப்படுவர். எல்லை தாண்டிய போரில் பணியாற்ற வேண்டிய தேவை இருக்காது. ஒருவேளை போரில் ஈடுபடுவதற்கான சூழல் ஏற்பட்டாலும் அதில் அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது’ என்று அவர் கூறியிருந்ததார்.
விமானப்படையில் நிர்வாகம், சரக்கு போக்குவரத்து, கல்வி, விமானப் பொறியியல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் 1,300-க்கும் மேற்பட்ட பெண்கள் இப்போது பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 94 பேர் பைலட்கள். அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பெண்கள் போர் விமானங்களில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளிலும் பெண்கள் பணியமர்த்தப்பட்டுள்ள போதிலும், இதுவரை அவர்களை நேரடியாக போரில் ஈடுபடுத்தியதில்லை. தற்போது பெண்களை புதிதாக ஈடுபடுத்துவது பெண்களுக்கு கொல்லுவதிலும் சம உரிமை கொடுக்கப்படவேண்டும் என்கிற அரசின் முற்போக்கு சிந்தனையைக் காட்டுகிறது. மேலும் நமது நாட்டில் மக்கள் தொகை மிக மிகக் குறைவாக இருப்பதாலும், எல்லோரும் வேலை வெட்டியோடு படு பிஸியாக இருப்பதால், ராணுவத்தில் சேர ஆள் பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுக்க பெண்களைச் சேர்ப்பது சிறந்த தீர்வாகவும் அமையும் என்று கூறுகிறார்கள்.