பருப்பு விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து கிலோ 200 ரூபாய்க்கு போன வாரம் வந்தது. உடனே மத்திய அரசு தனியார் இறக்குமதியாளர்கள் மூலம் 2 லட்சம் டன் பருப்பை இறக்குமதி செய்யப் போவதாக அறிவித்தது. உலக சந்தையில் கிலோ 50 ரூபாய்க்கு விற்கும் பருப்பை தனியார் இறக்குமதியாளர்கள் வாங்கி அரசிடம் 130 ரூபாய்க்கு விற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தூங்கிக் கொண்டிருந்த அரசு இயந்திரம் திடீரென் விழித்துக் கொண்டது போல ஒரே வாரத்தில் இந்தியா முழுவதும் மத்திய மாநில அரசுகள் நடத்திய சோதனையில் 75 ஆயிரம் டன் பதுக்கல் பருப்புகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மீடியாக்களில் செய்திகள் பரப்பரப்பாக வெளிவருகின்றன. அந்தப் பட்டியலைப் பார்ப்போம்.

இந்தியா முழுவதும், 13 மாநிலங்களில், 6077 இடங்களில் அரசுகள் சோதனை செய்தன. அதில் மஹாராஷ்ட்ராவில் மட்டும் 46 ஆயிரம் டன்னும், கர்நாடகத்தில் 8755 டன்னும், பீகாரில் 4933 டன்னும், சத்தீஸ்கரில் 4500, தெலங்கானாவில் 2546, மத்தியப் பிரதேசத்தில் 2295, ராஜஸ்தானில் 2222 டன் என்று ஆயிரக்கணக்கில் பருப்பு வகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று அரசு வெளியிட்டுள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தப் பதுக்கல் கைப்பற்றல் செய்திகளின் பின்னால் வேறு எதுவும் இருக்கிறதா என்று ‘தனி ஒருவன்’ படத்தில் ஜெயம் ரவி சொல்வது போல நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது. சேம்பிளுக்கு சில கேள்விகள்.

ஒரே வாரத்தில் பரபரப்பாக செயல்பட்ட அரசு இயந்திரம் 75 ஆயிரம் டன் பருப்பு வகைகளை பிடித்துள்ளது. அப்போ இவ்வளவு நாள் அரசு செயல்படாமலேயே இருந்ததா ? அல்லது பதுக்கல்களை கண்டுகொள்ளாமல் இருந்ததா ?

பதுக்கல் சோதனைகளில் ஏன் பருப்பு தவிர, அரிசி, கோதுமை போன்ற எந்தப் பொருட்களும் பிடிபடவில்லை ? பருப்பு பதுக்கல்காரர்களை மட்டும் குறிவைத்து சோதனை நடத்தினார்களா ? பதுக்குபவர்களில் பருப்பு மட்டும் கடத்துபவர், வேறு எதையும் கடத்தவே மாட்டாரா ?

6 ஆயிரம் இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் எத்தனை பேர் பிடிபட்டனர். ஏன் ஒருவரது புகைப்படம் கூட செய்தித் தாளிலோ அல்லது சேனல்களிலோ காட்டப்படவில்லை? ஒருவேளை இந்தப் பதுக்கல் பிடிப்புக் கணக்கு மக்களுக்கு காட்டப்படும் பொய்க்கணக்கா ? ஒரு சாதாரண பைக் திருடனை, செயின் திருடனை பத்திரிக்கையில் போட்டோ போட்டு, சேனல்களில் சுற்றிச் சுற்றிக் காட்டும் மீடியாக்களுக்கு மக்களின் வாழ்வாதாரத்தையே அசைக்கும் இந்தக் கேடிகளில் ஒருத்தருடைய போட்டோ கூடவா கிடைக்கவில்லை ?

பதுக்கியவர்கள் எல்லோரும் தனிப்பட்ட ஆட்களா ? நிறுவனங்களே இல்லையா ? சில பல டன்களை தனியாக ஒரு ஆள் கடத்தி விட முடியுமா ? தனியார் நிறுவனங்கள் தான் கடத்தலில் ஈடுபட்டிருக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் உணவுப் பதுக்கலில் ஈடுபட்டால் அது குற்றமாக கருதப்படாதா ? அல்லது ஏன் பதுக்கலில் ஈடுபட்டது என்று ஒரு நிறுவனத்தின் பெயரையும் பேப்பரில் போடவில்லை அரசு ?

இது பற்றி ஏன் ஒரு மாநில அரசு கூட வாய் திறக்கவில்லை ? 45 ஆயிரம் டன் பதுக்கலை கண்டு பிடித்த மஹாராஷ்டிரா முதல்வர் கூட இது பற்றி வாய் திறக்கவில்லை. மோடி வாய் திறக்கவில்லை. ஆனால் அரசு பிடித்தது என்று செய்தி மட்டும் வருகிறது. அப்போ உண்மையிலேயே இதெல்லாம் பதுக்கல் கைப்பற்றல் கணக்கா ? இல்லை, நாங்களும் செயல்படுகிறோம் பாருங்கள் என்று மக்களுக்குக் காட்ட அரசு சும்மா வெளிவிடும் செய்தியா ?

யாருக்காவது தெரிந்தால் பதில் சொல்லுங்கள்.

Related Images: