இப்படிச் சொல்லியிருப்பது காங்கிரஸோ, கம்யூனிஸ்ட்டுகளோ அல்ல. பா.ஜ.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அருண் ஷோரி.
டெல்லியில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அருண்ஷோரி மோடி அரசை கடுமையாக விமர்சித்தார். நரேந்திரமோடியைப் போல பலவீனமான பிரதமரைப் பார்த்ததில்லை என்ற அவர், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மாநில முதலமைச்சர்கள் உட்பட அனைத்து தரப்பினருடன் மோதல் போக்கை கடைபிடிப்பதாக குற்றம் சாட்டினார். செய்தி தாள்களின் தலைப்புச் செய்தியாக இடம் பெறுவதையே பொருளாதார நிர்வாகம் என மோடி அரசு நம்புவதாக விமர்சித்த அவர் காங்கிரசுடன் பசு சேர்ந்ததே தற்போதைய பாஜக அரசு என்றார்.
மோடி அரசின் இந்த போக்கு ஒரு போதும் பலன் தராது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பொருளாதாரக் கொள்கைகளை அப்படியே பின்பற்றி வரும் மோடி அரசை விட மன்மோகன் சிங் தலைமையிலான அரசே மேலானது என மக்கள் நினைக்க தொடங்கிவிட்டதாகவும் கூறினார். பாரதிய ஜனதா கூட்டணி அரசை ஆமையுடன் ஒப்பிடுவது சரியான ஒன்று என்றும் கூறினார் அவர்.
மத்திய அரசில் தனக்கு இடம் தராததால் அருண் ஷோரி இவ்வாறு பேசுவதாக மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார். அருண் ஷோரி, வாஜ்பாய் பா.ஜ.க கூட்டணி அரசின் பிரதமராக இருந்த போது, தொலை தொடர்பு அமைச்சராக இருந்தவர். மூத்த பத்திரிக்கையாளர்.