இன்று திரிகோணமலையில் இந்திய ராணுவமும், இலங்கை ராணுவமும் ஜாலியாக ராணுவப் பயிற்சி செய்திருக்கும் நிலையில், மறுபுறம் தமிழக மீனவர்கள் 34 பேரை இலங்கை ராணுவம் பிடித்துச் சென்றிருக்கிறது. 28 ஆம் தேதி ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வதாக இலங்கை தெரிவித்திருந்த நிலையில் இவ்வாறு அது நடந்து கொண்டதற்கு முதல்வர் ஜெயலலிதா அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் இன்று எழுதிய கடிதத்தின் விவரம்:
“நான் பலமுறை வலிறுத்தியதன் பேரில், இலங்கை அரசுடன் மத்திய அரசு பேசி, கடந்த 2 மாதங்களாக கைது செய்யப்பட்ட 86 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அவ்வாறு விடுவிக்கப்பட்ட மீனவர்கள் வீடு திரும்பும் முன், 26-ம் தேதி 2 படகுகளில் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் மற்றும் இன்று 5 படகுகளில் சென்ற புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேரும் என 34 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கையின் தலைமன்னார், காங்கேசன் துறையில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். பாரம்பரிய பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களின் மீதான இந்த கைது நடவடிக்கை நியாயமற்றது. மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் பறிக்கப்படுவதும் அவர்களது வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கிறது.
இந்த விவகாரத்தில் காலம் தாழ்த்தாமல் நிரந்தர தீர்வு காண வேண்டும் என நான் பலமுறை வலிறுத்தியுள்ளேன். ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நான் நேரில் அளித்த மனுக்களிலும் இதை தெரிவித்துள்ளேன்.
இந்தப் பிரச்சினைக்கு, 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில் கச்சத்தீவு தொடர்பாக அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக மேற்கொள்ளப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தமே முக்கிய காரணம் என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தேன்.
மேலும், ஆழ்கடல் மீன்பிடிப்பு மற்றும் கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.1,520 கோடியை விரைவில் ஒதுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தேன். இவை தொடர்பான என் மனுவை 26-ம் தேதி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த தமிழக எம்பிக்கள் குழு, அளித்துள்ளது.
எனவே, நீங்கள் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, வெளியுறவுத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி, 28-ம் தேதி (நாளை) விடுவிக்கப்படும் 86 மீனவர்களுடன், தற்போது கைது செய்யப்பட்ட 34 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இலங்கை வசம் உள்ள 46 படகுகளையும் மீட்டுத்தர வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
கேப்டன் விஜயகாந்த் கமெண்ட் அடித்தது போல், பிரதமர் மோடிக்கு இலங்கைப் பிரச்சனை சம்பந்தமாக ஜெயலலிதா எழுதியிருக்கும் 44வது கடிதம் இது. தமிழ்நாட்டிலிருந்து ஜெயலலிதா என்னதான் கரடியாகக் கத்தினாலும், சட்டசபை தீர்மானங்கள் இயற்றினாலும், மத்திய அரசு அது பாட்டுக்கு இலங்கை அரசுடன் ஜாலியாக கைகோர்த்துத் தான் போய்க்கொண்டிருக்கிறது. அம்மாவும், அய்யாவைப் போலவே லெட்டர் போடுவதையும், சுஷ்மாவைப் போய்ச் சந்தித்ததைத் தவிரவும் வேறு எதுவும் வீரமாகச் செய்துவிடவில்லைதான்.