தலைவா.. நீங்க அரசியலுக்கு வரீங்களோ இல்லையோ… ஆனால் நிச்சயம் ரசிகர்களுக்காக ஒரு மாநாடு நடத்துங்க’
-இது சமீபத்தில் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களின் கோரிக்கை. சமூக வலைத் தளங்களிலும் செய்தி இணையதளங்களிலும் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
இந்த வேளையில், ரஜினி ரசிகர்கள் ஒரு மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் இந்த மாநாடு அரசியல் பேச அல்ல, மனித நேயம் பேச. ஏழை ரசிகர்களுக்கு ஏராளமான உதவிகள் செய்வதற்காகவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
இந்த மாநாட்டுக்கு தலைப்பே ‘மலரட்டும் மனிதநேயம்’ என்று சூட்டப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் சோளிங்கர் நகரில் நடக்கும் இந்த மாநாட்டுக்காக, 20 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட மேடை மற்றும் மக்கள் அமர வசதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற பொறுப்பாளர் சோளிங்கர் என் ரவி ஏற்பாட்டில் நடக்கும் இந்த மாநாட்டுக்கு ஏராளமான திரைத்துறை விவிஐபிகள் பங்கேற்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி மன்ற பொறுப்பாளர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். சுமார் 30 ஆயிரம் பேர் இந்த விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பர் ராஜ் பகதூர், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குநர் – நடிகர் ராகவா லாரன்ஸ், இயக்குநர் என் லிங்குசாமி, நடிகர்கள் பாபி சிம்ஹா, ஜீவா, ஜோ மல்லூரி, கருணாஸ், கருணாகரன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் 1500 நலிந்த ரசிகர்களுக்கு ரூ 15 லட்சம் உதவித் தொகையாக வழங்கப்படுவதாக சோளிங்கர் ரவி அறிவித்துள்ளார்.
ரஜினி ரசிகர்கள் சார்பில் நடக்கும் இந்த முதல் பெரிய மாநாட்டின் அதிகாரப்பூர்வ மீடியாவாக என்வழி http://www.envazhi.com/ பங்காற்றுவது குறிப்பிடத்தக்கது!