வட இந்தியாவில் மாட்டிறைச்சிப் பிரச்சனை, கல்புர்கி கொலை என்று பல்வேறு மதச்சகிப்பின்மை விஷயங்கள் நடைபெற்ற போது அமீர்கான் ஒரு பேட்டியில் “இந்தியாவில் நடைபெறும் சகிப்புத்தன்மையற்ற விஷயங்களைப் பார்த்து என் மனைவி இந்தியாவை விட்டு வெளியேறிவிடலாமா என்று கேட்டு வருத்தப்பட்டார்” என்று கூறினார்.
உடனே ஊடகங்கள் அனைத்தும் அமீர்கான் இந்தியாவை விட்டு வெளியேறுவேன் என்கிறார் என்று ஊதிப் பெருக்கி பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ் என்று பலரும் அமீர்கானை காய்ச்சி எடுத்தார்கள். இந்தியாவின் விளம்பரத்தூதராக இருந்த அமீர்கானைத் தூக்கிவிட்டு அவ்விடத்தில் அமிதாப் மற்றும் ப்ரியங்கா சோப்ராவைப் போட்டுவிட்டார்கள்.
இந்நிலையில் 2006ல் வந்த அமீர்கானின் ‘ரங் தே பசந்தி’ என்கிற படம் தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஓடியுள்ளதையொட்டி மும்பையில் நடந்த விழாவில் கலந்துகொண்ட அமீர்கான் பேட்டியளித்துப் பேசினார்.
“இந்தியா சகிப்புத்தன்மையற்ற நாடு என்றோ அல்லது நாட்டை விட்டு நான் வெளியேறுகிறேன் என்றோ ஒருபோதும் நான் கூறியது கிடையாது. என்னுடைய கருத்து தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டிருக்கிறது. இதற்கு சில ஊடகங்கள் தான் பொறுப்பு. இந்த நாட்டில் பிறந்த நான் இந்த நாட்டிலேயே இறக்க விரும்புகிறேன்.நமது நாடு பல தரப்பட்ட மொழிகள், கலாசாரம் என பன்முகத்தன்மை கொண்ட நாடு. இதுபோன்று வேறு எந்தவொரு நாடும் கிடையாது. நான் வெளிநாடுகளுக்கு செல்லும் போது எல்லாம், என்னால் 2 வாரத்துக்குள் அங்கு தங்க முடியாது. வீட்டு ஏக்கத்தால் பாதிக்கப்பட்டு விடுவேன்.”
இவ்வாறு அமீர்கான் தெரிவித்தார். இந்திய ஊடகங்கள் முதுகெலும்பற்ற பிராணிகளாக மாறிவருவதோடு அமீர்கானை தலைகுனியவும் வைத்திருக்கின்றன. மீடியாக்களின் பாவத்திற்காக நாங்கள் உங்களிடம் மன்னிப்பு கோருகிறோம் அமீர்கான்.