டல்லாஸ்(யு.எஸ்): அமெரிக்கத் தமிழர்களின் தமிழ் மற்றும் சமூகப் பணிகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் கொண்டு சேர்க்கும் பணிக்காக தமிழ் ஒன் இந்தியா தளத்தின் செய்தியாளர் டாக்டர் எஸ்.ஷங்கருக்கு ‘மக்கள் பத்திரிகையாளர்’ விருது வழங்கப்பட்டது.
டல்லாஸில் செயல்பட்டு வரும் சாஸ்தா தமிழ் அறக்கட்டளை இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் இயக்குனர் வேலுராமன், டாக்டர் எஸ்.ஷங்கருக்கு ‘மக்கள் பத்திரிக்கையாளர்’ விருதை வழங்கினார்.
மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கால்டுவெல் வேள்நம்பி, தமிழ் ஒன் இந்தியா இணையதளத்திற்கு ‘மக்கள் ஊடகம்’ விருதை டாக்டர் எஸ்.ஷங்கரிடம் வழங்கினார்.
வாழ்த்துரை
சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் ராமு வேலு அனைவரையும் வரவேற்றார்.
வாழ்த்துரை வழங்கி பேசிய வேலு ராமன், “டாக்டர் ஷங்கர் தனிப்பட்ட கவனத்துடன் அமெரிக்கத் தமிழர்களின் தமிழ் மற்றும் சமுதாயப் பணிகளை உலகம் முழுவதும் எடுத்துச் செல்வதில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார்.
அமெரிக்கா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் நலன் சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அமெரிக்கத் தமிழ் அமைப்புகளுக்கு தமிழகத்துடன் தொடர்புப் பணிகளையும் மகிழ்ச்சியுடன் செய்து வருகிறார். பழகுவதற்கு எளிமையானவர்,” என்றார்.
கால்டுவெல் வேள்நம்பி தனது வாழ்த்துரையில், “டாக்டர். ஷங்கர் பற்றி தெரிந்து கொள்வதற்காக அவரை முந்தய நாள் சந்தித்து பேசினேன். ஆசிரியப் பணிக்காக ஆராய்ச்சி பட்டம் பெற்ற அவர் பத்திரிக்கைப் பணியை மனமுவந்து ஏற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்துப் பெருமை கொள்கிறேன்.
நூறு மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதற்கு பதில், பல லட்சம் பேரைச் சென்றடையும் பத்திரிக்கைப் பணி மேலானது என்று ஷங்கர் குறிப்பிட்டார். சந்தித்த குறைந்த நேரத்திலேயே அவருடைய தமிழ் மற்றும் தமிழர்கள் மீதான அளப்பறிய பற்றையும் தெரிந்து கொண்டேன்.
ஒன் இந்தியாவுக்கு பாராட்டு
டாக்டர் ஷங்கரைப் போன்ற பத்திரிக்கையாளர்களுக்கு முழுச் சுதந்திரம் அளித்து அனைத்து செய்திகளையும் மக்கள் பார்வைக்கு கொண்டு வரும் ‘ஒன் இந்தியா இணைய தளத்திற்கும், நிறுவனர் பிஜி.மகேஷ் அவர்களுக்கும் பாராட்டுகளை தெரிவிக்கிறேன். ஒன் இந்தியா தமிழ் தொடர்ந்து அமெரிக்க தமிழர்களுக்கு ஆதரவளிக்கும் மக்கள் ஊடகமாக செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கிறேன்,” என்றார்.
மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் செயலாளார் புகழ் பேசும் போது, டாக்டர் ஷங்கரின் துணிச்சலான பத்திரிக்கைப் பணிகளை குறிப்பிட்டார். மென்மேலும் அவர் தொடர்ந்து உலகத் தமிழ்ச் சமுதாயத்திற்கு உறுதுணையாக செயல்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
டாக்டர் ஷங்கரின் முயற்சியால், அமெரிக்கா முழுவதும் உள்ள தமிழ் அமைப்புகள், தமிழர்கள் பற்றிய செய்திகள் உலகம் முழுவதும் சென்றடைவதால், உலகத் தமிழர்களுடன் அமெரிக்கத் தமிழர்களுக்கு பாலமாக ஒன் இந்தியா விளங்குகிறது என்று விசாலாட்சி வேலு குறிப்பிட்டார்.
சாஸ்தா தமிழ் அறக்கட்டளையும் புகைப்படக்குழுவின் சார்பில் பேசிய முத்தையா, ஒன் இந்தியா தளத்தில் புகைப்படங்களுடன் செய்திகள் வருவதால், தங்கள் பணிக்கு கூடுதல் அங்கீகாரம் கிடைப்பதாக தெரிவித்தார்.
ரஜினி ரசிகர்
ரஜினி ரசிகராகவும் டாக்டர் ஷங்கரை அறிந்து வைத்திருக்கும் மோனி, அவரும் ரஜினியைப் போல் எளிமையாகயும் தன்னடக்கதுடனும் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
ரவி பழனி பேசுகையில் ஷங்கர் மிகவும் நேர்மையானவர். எதையும் நேரிடையாகயும் வெளிப்படையாகவும் சொல்லக்கூடியவர் என்றார்.
முனைவர் சித்ரா மகேஷ் பேசுகையில், “பணம் பொருளை விட பெரிய நண்பர்கள் கூட்டத்தை சேர்த்து வைத்திருக்கிறார். பத்திரிக்கையாளார் என்றாலும் இலக்கியத்திலும் ஆழ்ந்த ஞானம் கொண்டவர்.
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்
செய்யக் கூடாததை செய்தால் தவறு, செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டால் அது மிகவும் தவறு என்ற வள்ளுவரின் வாக்குக்கேற்ப செயல்படுகிறார்,” என்று கூறினார்.
பழநிசாமி பேசும் போது இன்றையக் காலக்கட்டத்தில் டாக்டர் ஷங்கர் மற்றும் ஒன் இந்தியா தமிழ் இணைய தளம் போன்றவர்கள் தான் தமிழ் வளர்வதற்கு உறுதுணையாக இருக்கிறார்கள்,” என்றார்.
செய்தியாளராக மட்டுமல்லாமல் தவறுகளைச் சுட்டிக்காட்டும் பொறுப்பையும் டாக்டர் ஷங்கரின் எழுத்துக்களில் பார்த்து வருகிறேன். பத்திரிக்கையாளராகவும் கூடவே தமிழ் உணர்வாளராகவும் அவரைக் காண்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று முருகானந்தன் குறிப்பிட்டார்.
ஒன் இந்தியா இணைய தளத்தின் டெக்னாலஜி மற்றும் அணுகுமுறை, அமெரிக்க ஊடகங்களுக்கு இணையாக இருப்பதாக அருண் பொன்னுசாமி பாராட்டினார்.
ஆசிரியரின் ஏற்புரை
விருதுகளைப் பெற்றுக் கொண்ட டாக்டர் ஷங்கர், “இது தனக்கு மிகவும் மகிழ்வான தருணம். பல்கலைக் கழகத்தில் ஆசிரியர் பணியை மறுத்து பத்திரிக்கைப் பணியில் தொடர்ந்த முடிவுக்கு, இதை விட பெரிய பரிசு கிடையாது. இந்த விருது சற்று முன்னதாக கிடைத்து விட்டதோ என்று கருதுகிறேன்.
நான் பாராட்டுக்குரியவன் என்றால் அந்தப் பெருமை, இன்று வரையிலும் என்னை வழி நடத்தும் எனது ஆசான்கள் ’மாலை முரசு’ பா.ராமச்சந்திர ஆதித்தன், எடிட்டர் கதிர்வேல், ’தினமணி’ ஆர்எம்டி சம்மந்தம் ஆகிய பத்திரிக்கைத் துறையின் ஜாம்பவன்களையேச் சாரும்.
ஒன் இந்தியா தளத்தில் நண்பர்கள் கான் மற்றும் அறிவழகனுடன் பணியாற்றத் தொடங்கினேன். நாங்கள் ஒரே நேரத்தில் பத்திரிக்கைப் பணியில் பயணம் செய்து கொண்டிருப்பவர்கள்.
ஒன் இந்தியா இணையதள நிறுவனமும், நிறுவனர் – நிர்வாக இயக்குநர் பிஜி மகேஷ் அவர்களும், எங்களுக்கு முழு சுதந்திரத்தை கொடுத்துள்ளனர். அதனால் தான் எங்களால் எந்த இடையூறும் இல்லாமல் அனைத்து தரப்பு செய்திகளையும் தர முடிகிறது.
அமெரிக்கத் தமிழர்கள் செய்திகளை அதிகம் வெளியிடுவதற்கான இந்தபு் பாராட்டு எனக்கு மட்டும் சொந்தமில்லை. எங்கள் நிறுவனர் மகேஷ், முதன்மை ஆசிரியர் கான், அறிவழகன் ஆகியோருக்கும் இதில் பங்கிருக்கிறது. அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன். எங்களால் இயன்ற வரையிலும் அமெரிக்கத் தமிழர்களுக்கும், தமிழ் அமைப்புகளுக்கும் தொடர்ந்து ஆதரவளிப்போம்,” என்றார்.
இறுதியாக பார்வையாளார்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. அடுத்த நாள் ப்ளேனோ தமிழ்ப் பள்ளி மாணவர்களையும் , ஆசிரியர்களையும் சந்தித்து ஷங்கர் உரையாடினார்.
சாஸ்தா தமிழ் அறக்கட்டளை
டல்லாஸ் நகரில் செயல்பட்டு வரும் சாஸ்தா தமிழ் அறக்கட்டளை, ப்ளேனோ தமிழ்ப் பள்ளியை நிர்வகித்து வருவதுடன், தமிழகம் மற்றும் அமெரிக்காவில் உள்ள தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து சமுதாயப் பணிகளும் செய்து வருகிறார்கள்.
கடந்த ஐந்தாண்டுகளில், நிகழ்ச்சிகள் மூலம் சுமார் 350 ஆயிரம் டாலர்கள் நிதி திரட்டி, உதவும் கரங்கள், சக்தி கலைக்குழு, பயிர் உள்ளிட்ட அமைப்புகள் மூலம் அறப்பணிகள் செய்துள்ளார்கள்.
ப்ளேனோ தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் தன்னார்வத்துடன் பணியாற்றி வருகிறார்கள். மேலும் விவரங்களுக்கு http://stfnonprofit.org என்ற இணையதளத்தில் காணலாம்.
சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் சாதனைத் தமிழர்களை அழைத்து சிறப்பித்து வருகிறார்கள். அறக்கட்டளையினர், டாக்டர் ஷங்கரின் அமெரிக்க வருகையையொட்டி சிறப்பு நிகழ்ச்சியாக இந்த விருது விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.
https://www.youtube.com/watch?v=wvlXvdKprM8