இன்றைய நாளிதழ்களில் வசூல் முருகன் என்கிற ஆரவாரத்தோடு வந்த ரஜினி முருகனின் 50 வது நாள் விளம்பரத்தைப் பார்த்திருப்பீர்கள். விளம்பரம் தான் ஆரவாரமாக இருக்கிறதே ஒழிய லிங்கு பிரதர்ஸின் நிலை கலவரமாகவே இருக்கிறதாம். படத்தில் பணியாற்றிய பலருக்கு சம்பளம் இன்னும் செட்டில் பண்ணப்படாத நிலையில் விளம்பரம் தரப்பட்ட மீடியாவுக்கும் நயா பைசா வரவில்லையாம்.
‘ரஜினி முருகன்’ படத்திற்கு அநேக முன்னணி இணையதளங்கள், நாளிதழ்கள், மற்றும் தொலைக்காட்சிகளுக்கு விளம்பரம் அளிக்கப்பட்டது. பெரும் பணச் சிக்கலுக்கு பிறகு வருகிற படம் என்பதால், ‘கொடுக்கறதை கொடுங்க’ என்று பலரும், ‘நல்லாயிருக்கட்டும் மக்கா’ என்று நினைத்த சிலரும் அவரவர் பங்குக்கு சகாய விலையில் விளம்பரங்களை வெளியிட்டார்கள். பொதுவாகவே சினிமா விளம்பரங்கள் வாங்குகிற நிறுவனங்கள், துட்டு கைக்கு வந்தாலொழிய ஸ்டாம்ப் சைசுக்கு கூட அவற்றை வெளியிட மாட்டார்கள். ஏனென்றால் சினிமா என்பது அந்தளவுக்கு நம்பிக்கையும் நாணயமும் விளைகிற புழுத்துப் போன பூமி.
கன்னத்தை செல்லமாக கிள்ளுகிறேன் பேர்வழி என்று கழுத்தை அறுத்துக் கொண்டு போகிற நல்லவர்கள் திரியும் ஏரியா என்பதால், “முதல்ல துட்டு, அப்புறம்தான் அட்வர்டைஸ்மென்ட்டு” என்பார்கள். ஆனால் ரஜினி முருகன் விஷயத்தில் வந்துரும்ப்பா என்று நம்பி விளம்பரத்தை வெளியிட்ட எவருக்கும் இன்னும் பணம் வந்து சேரவில்லை. போன் மேல் போன் அடித்து ஓய்ந்து போனவர்கள் என்ன செய்யலாம் என்று மோட்டு வளையை பார்த்து சிந்தித்துக் கொண்டிருக்கும் போதுதான் இந்த 50 வது நாள் விளம்பரம்!
பெயர் அமைந்தது போல் பிரதர்ஸ் மீடியாவுக்கு போடும் மொட்டை தான் இப்போதைக்கு ஹாட் டாபிக்.