லங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள்  தாக்கப்படும் பிரச்சனைக்கு சமூக முடிவு காணும் வரை அந்நாட்டு மீனவர்களுக்கு இந்திய அரசு எவ்வித உதவியும் செய்யக்கூடாது என தி.மு.க. தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார் .             தி இந்து ஏப்ரல் 5, 2016.

இம்மாதிரியான கோரிக்கை முதல்முறையாக வரவில்லை.  பல வந்துவிட்டன.  பல வருடங்களாக வெளிவரும் மெகா தொடர்கதையில் இதுதான் முதல் ரேட்டில் உள்ளதை வாசக ரசிகர்களுக்கு (சிறிது ஞாபகம் இருந்தாலும்) நினைவுக்கு வந்துவிடும்.

இந்த கோரிக்கையில் ஒரு ஆச்சரியமான செய்தி உள்ளுறைந்துள்ளது.

அதாவது, இலங்கை கடற்படை , இலங்கை அரசும் ; இலங்கை மீனவர்களும் சமமான அந்தஸ்து உள்ளவர்களாக , சமமானவர்களாக தெரிகிறது .

அதனால் தான் …… “ பிரச்சனைக்கு சுமூக முடிவு காணும் வரை அந்நாட்டு (இலங்கை) மீனவர்களுக்கு இந்திய அரசு எவ்வித உதவியும் செய்யக்கூடாது  ”  என்கிறது அக்கோரிக்கை.

பழிக்குப் பழி , ரத்தத்திற்கு ரத்தம் .  அப்படித்தானே !  இது கலைஞர் வாக்கா ?  அல்லது தமிழ் கூறும் நல்லுலக வாக்கா ??

இலங்கை அரசின் கெடுமதியை , கொடுஞ்செயலை இந்திய நடுவன் அரசு ராஜ்ஜிய உறவு  (diplomacy ) என்னும் பெயரில் கண்டும் காணாமல் இருக்க ஏதுவான தேசிய இனமானம் தமிழன் தானே.  ஒரு பஞ்சாபி , ஒரு பீகாரி , ஒரு வங்காளி என்றால் கதை கந்தலாகி இருக்கும் ; இந்நேரம்.

மனிதாபிமானம் என்னும் பெயரில் தேடப்படும் குற்றவாளிகளுக்கே மன்னிப்பு (லலித்மோடி) கிடைப்பது மாதிரி, இலங்கை ராணுவத்திற்கும் ,அரசுக்கும் மன்னிப்பு வழங்குவது முடியாத காரியமா

தமிழனுக்கு குச்சி ஐஸ் குல்பியை கையில் கொடுத்துவிட்டு , கச்சைதீவை இலங்கைக்கு தாரை வார்த்தபின் , தமிழக மீனவர்களுக்கு வாழ்வாதாரம் கேள்விக்குரியாகி வருகிறது .  எல்லை மீறலையும் “  பசி  ”  செய்யத்தானே செய்யும்.

இதற்கு படகை கைப்பற்றல் , திருப்பித் தருவதில்லை , மீனவர்கள் கைது , படகுகளை சேதப்படுத்துவது , எந்த சட்ட விதிகளுக்கும் உட்படுவது இல்லை  . 

தமிழக மீனவர்கள் என்றால் இலங்கை கடற்படைக்கு கிரிக்கெட் விளையாடுவது போல் .  எப்போதும் பேட்டிங்தான் .  தமிழக மீனவ உடல்கள்தான் கிரிக்கெட் பந்து .

பவுண்டரி என்றால் உடைந்த படகும் , குற்றுயிராக தமிழகம் வந்து சேரும் .  சிக்சர் என்றால் முழுப்படகும் தமிழனும் சிங்கள சிறைக்கு .

இப்படி தினமும் கிரிக்கெட் திருவிழாதான் இலங்கை ராணுவத்திற்கு .

இலங்கை இந்தியாவுக்கு அண்டை நாடு .

இந்த இருவருக்குமிடையில் உள்ள உறவில் மனித தன்னிலைகளின் குணாம்சம் என்ன வடிவில் இருக்கிறது ? ;  உறவு ஏற்கிறது ? ;  தகவமைக்கிறது   (acknowledgment ) ? பார்வையாளராக இருக்கிறது ? ;  பொறுப்புணர்வாக இருக்கிறது  ? இப்படி தனி மனித  / நாடுகளுக்கிடையிலானஉறவுக்கிடையில் உள்ள நெறியை அறிய மன அலசலின் கேள்விதான் மேற்கூறியது .

இந்திய அரசு  L.T.T.E  -யை அடக்க , ஒழுங்குபடுத்த   IPKF – யை அனுப்பியது .  இலங்கை அதை அனுமதித்தது .

தமிழகத்தில் ராஜீவ் கொல்லப்பட்டபின் யாழ் தமிழருடன் , இந்திய அரசுக்கும் ; தமிழக மீனவர்களுடன் இலங்கை அரசுக்கும் ; மனத்தளவில் பகை அம்சம் கூடத்தானே செய்தது .

L.T.T.E -யை ஒழித்துக்கட்ட இந்திய ராணுவம் மறைமுகமாவது தளவாடம் உட்பட உதவி செய்ததுதானே.

இப்படி உறவுகளின் நெறி வேறு வேறாக இருக்கும் போது தமிழக மீனவர்களின் பிரச்சினையை யார் தீர்ப்பது ?

தமிழக நடிகர்களை விட அரசியல் தலைவர்கள் வித்தகர்கள் .  தமிழக மீனவர் பிரச்சினை எப்படி தீரும் ?  யார் தீர்ப்பது ?

அலை எப்போது ஓயும் ?  தமிழக மீனவன் எப்போது மீன் பிடிப்பான்

என்று தமிழ் மனக் கடல் கொதிநீராகி , விளாவ பச்சை தண்ணீர் கிடைக்காத அந்த நேரத்தில் ஒரு வேளை சாத்தியமாகலாம் .

இனியாவது எல்லாவற்றையும் அதிகாரத்திற்கான ஓட்டாக கணக்கிட வேண்டாம்

     இனியாவது அரசு , அரசியல் பற்றி பேசும் போது உறவு பற்றி பேசுவது ; உறவில் கடைப்பிடிக்கும் நெறிகளின் குணாம்சத்தை முதலில் வெளிப்படுத்துவோம்.

க.செ

5-4-2016

நன்றி. மற்றமை இணையதளம். 

Related Images: