கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடுகளுக்கு பெயர் போன அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் உள்ள அரோராவில் வெள்ளிக் கிழமை ரிலீஸான ‘பாட் மேன்’ கதாபாத்திரத்தின் படமான ‘டார்க் நைட் ரைஸஸ்’ படத்தை முதல் ஷோ மிட் நைட் ஷோவாக
‘செஞ்சுரி 16’ என்கிற மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டரில் திரையிட்டிருந்தார்கள்.
படம் ஓடிக்கொண்டிருந்த போது நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் தியேட்டரின் வாசலுக்கு கமாண்டோ போல் உடையணிந்து கையிலிருந்த நீண்ட ரைபிளை உயர்த்தியபடி வந்த ஒரு இளைஞன் கையிலிருந்த கண்ணீர்ப் புகைக் குண்டை படம் பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்களின் மேல் வீசியெறிந்தான்.
தியேட்டரினுள் ஒரே புகைமண்டலம் சூழ்ந்தது. பல பேர் இது டார்க் நைட் படத்தின் விளம்பர யுத்தி போலும் என்று நினைத்தபடி வேடிக்கை பார்த்தபடியே இருந்திருக்க அவன் துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தான். யார் யார் கண் முன்னே எழுந்து ஓடுகிறார்களோ அவர்களை எல்லாம் சுட்டான். நடு நடுவே துப்பாக்கியில் குண்டு தீர்ந்ததும் குண்டு நிரப்புவதற்காக மட்டும் சுடுவதை நிறுத்திய அவன் பின் தொடர்ந்து சுட்டுக் கொண்டேயிருந்தான்.
இருளிலும், புகையிலும் அவன் எங்கிருக்கிறான் ? யாரைச் சுடுகிறான் ?. சுடுவது அவன் ஒருவனா ? வேறு யாரும் உடன் இருக்கிறார்களா? என்று எதுவும் புரிபடாமல் மக்கள் சிதறி ஓடினர். அப்படி இருந்தும் 15 பேர் அவனது குண்டுகளுக்கு இரையாகி அங்கேயே செத்து மடிந்தனர்.
இது தவிர சுமார் 50 பேர் காயமடைந்தனர். விரைந்து வந்த போலீஸ் அவனை கார் பார்க்கிங்கில் வைத்து வளைத்துப் பிடித்தனர்.
குற்றவாளியாகக் கருதப்படும் ஜேம்ஸ் ஹோல்ம்ஸ் என்கிற அந்த இளைஞன் அப்போது கையில் ரைபிள் உட்பட மூன்று துப்பாக்கிகள் வைத்திருந்தான். அவன் ஏன் சுட்டான் என்கிற காரணம் இன்னும் தெரியவில்லை. எந்தத் தீவிரவாத இயக்கத்துடனும் அவன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் தகவல் இல்லை.
இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு ஜனாதிபதி ஒபாமா கண்டனம் தெரிவித்து தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்துள்ளார். பல ஹாலிவுட் நட்சத்திரங்களும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர். பாரீசில் நடக்க இருந்த டார்க் நைட் படத்தின் ‘ரெட் கார்ப்பெட்’ ஷோ இதனால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் இதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனுதாபங்களைச் சொல்லியது. மேற்கொண்டு படத்திற்கு விளம்பரங்கள் செய்தால் அது படத்தின் வசூலைப் பாதிக்குமோ என்று வார்னர் நிறுவனம் தயங்குகிறது.
குற்றவாளியாகக் கருதப்படுகிற 24 வயதான ஜேம்ஸ் ஹோல்ம்ஸ் கொலராடோ மருத்துவக் கல்லூரியில் நரம்பியல் துறையில் (Neurology) பி.எச்.டி(PhD) பட்டப் படிப்பு கடந்த ஆண்டு வரை பயின்று கொண்டிருந்திருக்கிறார். படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளார். கொலராடோவில் ஜேம்ஸ் ஹோல்ம்ஸ் தங்கியிருந்த அபார்ட்மெண்டிற்குச் சென்ற போலீஸ் அவரது வீட்டில் மிகச் சக்தி வாய்ந்த வெடி மருந்துகள் இருப்பதைக் கண்டுள்ளனர். மேலும் விசாரணை நடைபெறுகிறது.
க்ரிஸ்டோபர் நோலனின் இயக்கத்தில் வந்துள்ள இந்தப் படம் போலவே இதன் இரண்டாம் பாகம் 2008ல் வெளியிடப்பட்டபோது அப்படத்தில் ஜோக்கர் வேடத்தில் முக்கிய துணை பாத்திரமாக நடித்த லெட்ஜர் என்பவர் தவறுதலாக அதிக அளவு தூக்க மாத்திரைகளை உண்டு இறந்து போனார்.
டார்க் நைட்டுக்கும், இருளான விஷயங்களுக்கும் அப்படி என்ன தொடர்போ தெரியவில்லை.