’யோக்கியனுக வர்றாங்க ‘ஸ்கிரிப்டை’ எடுத்து உள்ள வை’

‘தாண்டவம்’ கதைப்பஞ்சாயத்தில் நாட்டாமை பண்ணிய விவகாரத்தில், இயக்குனர் சங்கம், இதையும் விட கேவலப்பட இனி எதுவும் மிச்சமில்லை என்று ஆனபிறகு, படம் ரிலீஸான நேற்று மாலை, ஏற்பட்ட களங்கத்தை எப்படி துடைத்தெறிவது என்று கலந்துபேசுவதற்காக, இயக்குனர் பாரதிராஜா தலைமையில், இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் கலந்துகொண்ட கூட்டம் ஒன்று நடந்தது.

’படம் ரிலீஸாகி, தியேட்டரை விட்டே துக்கப்போறப்பயும், இவங்க பஞ்சாயத்து முடியலையா?’ என்று அலுத்துக்கொள்ளத்தோன்றும். ஆனால் அந்தக்கூட்டத்தில் நடந்த சுவாரசியங்கள் படம் போல் போரடிப்பவை அல்ல.

கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவின்படி, யூடிவி தனஞ்செயன், உதவி இயக்குனர் பொன்னுச்சாமியின் கதையைத் திருடிய முதன்மைக் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். ஆனால் அதற்கான தண்டனை அறிவிக்கப்படவில்லை.

உடல் ஊனமுற்ற ஒரு உதவி இயக்குனரின் கதையைத் திருடி, கோடிகளில் சம்பளம் வாங்கிய இயக்குனர் விஜய் செய்த செயல் பாவச்செயல் என்றும், அந்தப்பாவத்துக்கு பரிகாரம் தேடவேண்டுமெனில், விஜய் தனது பேனரில், பொன்னுச்சாமியை இயக்குனராக வைத்து ஒரு படம் தயாரிக்கவேண்டும் என்று ஜெபம் செய்யப்பட்டது.

அடுத்த முக்கிய குற்றவாளிகளாக, உதவி இயக்குனர்களை நம்ப வைத்து கழுத்தை அறுத்ததாக அமீரும், கரு.[ங்காலி] பழனியப்பனும் அறிவிக்கப்பட்டனர்.

இவர்களில் அமீர், தனது தவறை ஒப்புக்கொண்டு பகிரங்கமாக மன்னிப்புக்கேட்க, பழனியப்பனோ, தனது வழக்கமான வாய் சாமர்த்தியத்தால், ‘’ விஜய் கதையைத் திருடியிருக்க மாட்டார்னு தேவையில்லாம நம்பிட்டேன்.

அவர் முதல் படம் எடுக்க வர்றப்பவே, ‘பொய் சொல்லபோறோம்’னு வந்தார். ரெண்டாவது மலையாளப் படத்தை ரீ-மேக் பண்ணிட்டு தன் சொந்தப்படம் போல ‘கிரீடம்’ சூட்டிக்கிட்டார். மூனாவதா ‘டைட்டானிக்’கை காப்பி அடிச்சி ‘மதராஸப்பட்டினம்’ எடுத்தார். நாலாவதா, ‘ஐ யாம் சாம்’ இங்கிலீஸ் டிவிடியைச் சுட்டு’ தெய்வத்திருமகள்’ எடுத்தார். ஆக இந்தக்கதையும் பொன்னுச்சாமிகிட்ட இருந்து காப்பி அடிச்சிருக்க வாய்ப்பு இருக்கு’ என்று பல்டி அடிக்க, அப்பன் பழனியின் அந்தர் பல்டி பொறுக்கமுடியாமல் உதவி இயக்குனர் ஒருவர் அவரை அடிக்கப் பாய்ந்தார்.

மொத்ததில் கூட்டம் ‘கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சாம்’ என்ற பழமொழிக்கு அர்த்தம் சொல்லுவதுபோல் நடந்து முடிந்தது.