ஸ்வேதா மேனனுக்கு கடந்த வியாழனன்று மாலை பம்பாய் நானாவதி ஹாஸ்பிட்டலில் பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலம். நார்மல் டெலிவரி.
இதில் என்னா சாதனை என்று டென்ஷனாக ஆரம்பிப்பவர்கள் இதைக் கேளுங்க. குழந்தை பிறந்ததை நேரடியாக சினிமா கேமராக்கள் வைத்து ஷூட் பண்ணியிருக்கிறார்கள். அவருக்கு பிரசவ வலி எடுக்க ஆரம்பித்த கணம் முதல், டாக்டர்கள் சேர்ந்து குழந்தையை பிரசவிக்க வைத்தது வரை மூன்று கேமராக்களில் ஷூட் பண்ணியிருக்கிறார்கள். கடைசியாக பிறந்த குழந்தையை டாக்டர்கள் ஸ்வேதா மேனனின் கையில் கொடுக்க அவர் குழந்தையை முத்தமிடும் காட்சியோடு காட்சி முடிகிறது.
கலிமன்னு என்கிற மலையாளப்படத்தில் கர்ப்பவதியாக கடந்த சில மாதங்களாகவே நடித்து வருகிறார். இயக்குனர் ப்ளஸ்ஸி ஸ்வேதா மேனனிடமும் அவரது கணவர் ஸ்ரிவத்சன் மேனனிடமும் கலந்து பேசி நிஜ கர்ப்பவதியான அவரை நடிக்கவைத்தோடல்லாமல் ஸ்வேதா மேனன் ஆப்பரேஷன் இல்லாமல் குழந்தை பெற்றதை படமாகவும் ஆக்கியுள்ளார். படமாக்கிய சமயத்தில் ஸ்வேதாவின் கணவர், மருத்துவர்களுடன் கேமரா மேன்களும், இயக்குனரும் பிரசவ அறையில் இருந்து படமாக்கியுள்ளனர்.
குழந்தை பிரசவிப்பது கிட்டத்தட்ட ஒரு இயந்திரத்தனமான விஷயாமாகிவிட்ட இந்தக் காலத்தில் கலிமன்னு படம் ஒரு தாய்க்கும் அவளது வயிற்றில் வளரும் குழந்தைக்குமிடையேயான பந்தத்தை சித்தரிக்கும் படம் என்கிறார் இயக்குனர்.
குழந்தையை இயற்கையாகப் பிரசவிப்பது நேரடியாக நிறைய ஆங்கிலப் படங்களில் மருத்துவரீதியாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தியப் படங்களில் பிரபல நடிகையொருவர் பிரசவிப்பதை எடுத்திருப்பது இந்திய சினிமாவில் பெரும் முயற்சியாகும்.
சமீபத்தில் அமெரிக்காவில் எம் டிவியின் ரியலிட்டி ஷோவான ‘ஜெர்ஸி ஷோர்’ ல் அதன் நடிகை நைகோல் எலிஸெபெத்(Nicole Elizabeth) பிரசவிப்பதை படமாக்கியுள்ளார்கள். அதிலும் குழந்தை தாயின் வயிற்றிலிருந்து வெளியேறியதை வீடியோ கேமராவில் படமாக்கிவிடவில்லை.
குழந்தை பிறப்பதை மருத்துவ ரீதியாக எத்தனையோ படங்கள் எடுத்திருக்கிறார்கள். சமீபத்தில் கடந்த நவம்பர் மாதம் குழந்தை பிறக்கும் நிகழ்வின் போது அதை முழுக்க எம்ஆர்ஐ(MRI) ஸ்கேன் செய்து பல புதிய விஷயங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். குழந்தை பிறப்புப் பாதை வழியே வெளிவராமல் போவதால் தான் 15 சதவீத ஆப்பரேஷன்கள் சிசேரியன்களாக ஆகிவிடுகின்றன. இதைத் தடுக்க இந்த ஆராய்ச்சி உதவும் என்கிறார்கள்.
இக்காலத்தில் நிஜ சினிமா எனப்படும் சினிமாக்கள் அரசியல் ரீதியாக மக்களை ஒரு குறிப்பிட்ட விஷயத்தை நோக்கி திருப்பும் வகை சினிமாக்களாகத்தான் எடுக்கப்பட்டு வருகின்றன. அவை பெரும்பாலும் ஆளும் கார்ப்பரேட் அரசுகளால் மக்களை சில விஷயங்களை நிஜமென்று நம்ப வைக்கவே எடுக்கப்படுகின்றன. உதாரணமாக 2009ல் ஆஸ்கார் வாங்கிய ஹர்ட் லாக்கர் என்கிற படத்தைச் சொல்லலாம். அது அமெரிக்கா ஈராக்கைப் பிடித்ததை நியாயப்படுத்தும் அநியாயமான செயலை செய்த நிஜ சினிமா.
இது தவிர ஸ்வேதா மேனனின் இந்த அதிரடியான முயற்சி இந்திய சினிமாவில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தும்? இதற்கு முன்பு தனது அதிரடி கவர்ச்சி நடிப்பால் ரசிகர்களை அதிர்ச்சியடையவைத்தவர் தான் ஸ்வேதா. அவரது இந்தப் புது முயற்சி பெரும்பாலும் பொதுமக்கள் கவனத்தை படத்தின் மீது திருப்பும், விளம்பரப்படுத்தும் விஷயமாகவே இருக்கிறது. அதைத் தாண்டி கலிமன்னு சினிமாவை நிஜ சினிமாவாகவாக எவ்வளவு தூரம் மாற்றும்?
அது படம் டெலிவரியாகும் போது தான் தெரியும்.