ilayaraja-inaugurates-tamil-music-research-org

சென்ற வாரம் மதுரை தியாகராஜர் கலைக்கல்லூரியில் தமிழிசை ஆய்வு மையம் தொடங்கப்பட்டது. தொடங்கி வைக்க தொடக்க விழாவுக்கு வருகை தந்திருந்தார் இளையராஜா.

தமிழிசை ஆராய்ச்சி மையம் ஆரம்பிக்க வேண்டும் என்பது இளையராஜாவின் நீண்ட நாள் கனவாகும். அதை தியாகாராஜர் கல்லூரியினர் ஓரளவு பூர்த்தி செய்துள்ளனர்.  கு.ஞான சம்பந்தன் தலைமை தாங்க, தமிழ் ஆராய்ச்சியாளர் தொ.பரமசிவன், திரைப்பட இயக்குனர் சுகா ஆகியோர் கலந்து கொண்ட விழாவில் ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார்.

“இங்கே அதிக அளவில் ரசிகர்கள் கூடியிருப்பதன் காரணம் நானல்ல. இசையே. இசை எனக்குச் சொந்தமானதல்ல. தமிழிசை குறித்து எனக்குப் பெரிதாகத் தெரியாது. ஆனாலும் என்னை இந்த தமிழிசை ஆய்வு மையத்தை துவங்கி வைக்க அழைத்தது பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

இசைச் சொல் அகராதியில் சப்தஸ்வரம், பண் போன்ற சிலவற்றை மட்டுமே என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இசையகராதியை தொகுப்பது மிகச் சிரமமானது. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இங்கு பெரிய இசைக்குழு இருந்திருக்கும். அவர்களாலே இது போன்ற இசைகளை உருவாக்குவது சாத்தியமாயிருந்திருக்கும். அந்தக் கால மறந்த இசையை தேடுவதாக இந்த இசை ஆய்வு மையம் இருக்கும்.

இசையை ஒவ்வொரு பள்ளியிலும் பாடமாக்கினால் நாட்டில் வன்முறை சம்பவங்கள் குறையும். இசையானது மனதுக்கு அமைதி தரும். தூக்கத்தை மட்டுமல்ல விழிப்பையும் கூட இசையால் கொண்டுவர முடியும். இசையால் வன்முறை மறையும். அமைதி தவழும். கோவிலில் கூட மனம் அலைபாயும். ஆனால் இசையை கேட்கும்போது மட்டுமே மனம் அதில் எளிதில் லயிக்கும்.

பாடல் காற்றில் கரைந்து போனாலும் காதிலும், மனதிலும் நீண்ட நேரம் நிலைத்திருப்பதை உணரலாம். அந்த அளவுக்கு இசை மகத்துவம் வாய்ந்தது. ஜீவனும், மனதும் ஒரே நிலையில் இருக்க இசை பயன்படும். ஆகவே பள்ளிகளில் இசையை ஒரு கட்டாயப் பாடமாக்குவது அவசியம் என்றே சொல்லலாம்” என்றார்.

கல்லூரியின் தலைவர் கருமுத்து.கண்ணன் பேசும் போது “இளையராஜாவிடம் அவருக்கு எப்படி இசையார்வம் வந்தது என்று கேட்டேன். அதற்கு அவர் என் அண்ணன் பாடியதை கேட்டுக் கொண்டிருந்தேன்.. அப்படியே விபத்துபோல நான் இசையமக்க வந்து விட்டேன் என்றார்.” பின்னர் இசைக்கல்லூரி ஆரம்பித்தது பற்றி கூறுகையில் “இயல் தமிழ், நாடகத்தமிழுக்கு கல்லூரிகளில் கொடுக்கப்பட்ட இடம் இசைக்கு இல்லை தான். அக்குறையே போக்க இந்த ஆய்வு மையம் மூலம் முயல்வோம் ” என்றார்.

கு.ஞான சம்பந்தன் ஆய்வாளராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் இதில் பணியாற்றி இருக்கிறார். அமெரிக்காவில் உள்ள பால்.சி.பாண்டியன் என்பவர் உதவியால் நா.மம்மூது இசைப் பேரகராதி ஒன்றை தொகுத்திருக்கிறார். அது ஆய்வு மையத்துக்கு பெரிதும் பயன்படும் என்றார். தொ.பரமசிவன் பேசுகையில் சங்க இலக்கியங்கள் இவ்வளவு காலம் பாதுகாக்கப்பட்டிருக்க முக்கிய காரணம் அவை  இசைப்பாடல்கள் என்பதால் என்றார்.

திரைப்பட இயக்குநர் சுகா பேசும்போது “ஒரு காலத்தில் சபாக்களில் துக்கடா என்று ஒரு சின்னப் பகுதியாக தமிழ்ப் பாடல்கள் பாடப்பட்டன. இன்று தமிழிலேயே இசைக் கச்சேரிகள் செய்யப்படுகின்ற அளவு தமிழிசை வந்திருக்கிறது. நாதஸ்வரத்துக்கு இன்னும் போதுமான அங்கீகாரம் தரப்படவேண்டும்.  இளையராஜா இப்படிப்பட்ட இசைக் கலைஞர்களை 30 வருடங்களாக வாழவைத்துக் கொண்டிருக்கிறார்.  கணியன் கூத்து எனப்படும் மகுட இசைக் கலைஞர்களை தனது இசைக் கோர்ப்பில் வாசிக்க வைத்து அங்கீகாரமளித்தார்.” என்றார்.

இவ்வாறாக தமிழ்ச்சங்கம் வைத்த மதுரை தமிழிசைக்கும் தனது பங்கை செய்யவிருப்பது மதுரைக்கும் ஒரு பெருமைதான்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.