சிவா மனசுல சக்தி’ பாஸ் [எ] பாஸ்கரன்’ படங்களை இயக்கிய அதே ராஜேஷ் , ஒரே கதையை மூன்றாவது முறையாக, நடிகர்களை ஜீவாவுக்கு பதில் ஆர்யா, ஆர்யாவுக்கு பதில் உதயநிதி என்று ஆள் மாறாட்டம் செய்து இயக்கியிருக்கும் படம்.
ஹீரோ அல்லது ஹீரோயினுக்கு ஈகோ. முதல் பத்து சீன்களுக்கு லவ் சேஸிங். ஒரு பாட்டு, நடு நடுவே ’தேனே மானே’ போட்டுக்கிற மாதிரி சந்தானத்தை வைத்து காமெடி, பிறகு காதல், டூயட், அப்புறம் ஊடல், காதலைப்பற்றி சில சாடல், ரசிகர்கள் கதை எங்கேடா என்று தேடல் இப்படி ராஜேஷின் முந்தைய இரு படங்களிலிருந்து சற்றும் விலகிவிடாமல் பயணிக்கிறது ’ஒரு கல் ஒரு கண்ணாடி.
கூடவே சந்தானம் என்கிற சத்தான ‘பானத்தை வைத்துக்கொண்டு, கோ-கோ கோலா, பெப்ஸி போன்ற பானங்களை பல கோடி செலவில் லான்ச் பண்ணுவதுபோலவே, கதாநாயகன் உதயநிதியை களமிறக்கியிருக்கிறார்கள்.
படத்தில் நடிக்க வேண்டிய வேலை என்று ஒன்று இல்லவே இல்லை என்றாலும், முதல் நாள் எல்.கே.ஜி. செல்லும் பள்ளிக்குழந்தையின் பதட்டம் படம் முழுக்க உதயநிதியிடம் தெரிகிறது.பேஸ்மெண்ட் என்னவோ ஸ்ட்ராங் என்றாலும் இவருக்கு நடிப்பு என்கிற பாடி கொஞ்சம் வீக்தான்.
அதே போல பாடல்காட்சிகளில் பல இடங்களில் சாக்பீஸில் கோடு கிழித்துக்கொண்டு ஆடிய்து அப்பட்டமாகத்தெரிகிறது.
இந்த மாதிரி பணக்கார ஹீரோக்கள் அதிகமாக ‘லாஞ்ச்’ ஆவதை முன்னிட்டு அவர்களுக்கென்றே டான்ஸ் மாஸ்டர்கள் சட்டையை ஆட்டுவது, லுங்கியை தூக்கி காட்டுவது, ஆய் போகப்போவதுபோல் பிருஷ்டத்தை ஆட்டுவது சமீபகால டான்ஸ் மூவ்மெண்ட்களில் அதிகரித்து வருவதை, எந்த மூவ்மெண்ட்டாவது கொஞ்சம் கண்டித்து வைத்தால் எதிர்கால தமிழ்சந்ததி தப்பிப்பிழைக்கும்.
நன்கு பூரித்த சோளாபூரியாகவே காட்சியளிக்கும் ஹன்ஷிகா மோத்துவாணி என்கிற குந்தாணி, படத்தில் சிரிக்கிற காட்சிகளில் எல்லாம் அழுவது போலவும், அழுகிற காட்சிகளில் எல்லாம் சிரிப்பது போலவும் தெரிவதுதான் பாரதியார் சொன்ன காட்சிப்பிழை போலும்.
பாலசுப்பிரமணியெத்தின் பணக்காரத்தனமான ஒளிப்பதிவும், ஹாரிஸ் ஜெயராஜின் இசையும் படத்துக்கு பக்கா பலம். அதிலும் ‘வேணாம் மச்சான் வேணாம் இந்தப் பொண்ணுங்க காதலு’ பாடல் கொஞ்ச நாளைக்கு தேவதாஸ்களின் தேசிய கீதமாக ஒலித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. [ சந்தானம் வசனமா எழுதிக்கொடுத்ததைத்தான் நா.மு. பாடலாக்கி நாமம் போட்டதா ஒரு ’ரூமர்’ ரூம் போட்டு அலையிதே உண்மையா? ]
காமெடிப் படத்தில் ஒரு சீரியஸ் மேட்டராவது இருக்கட்டுமே என்ற நினைப்பில் டைரக்டர் ராஜேஷால் வைக்கப்பட்ட சரண்யா டிகிரி வாங்காததால் கணவன் 20 வருஷமாக பேசாம இருப்பது உச்சக்கட்ட காமெடி.
’அடுத்த படத்துல நான் இருக்கனா மச்சான்? என்று கேட்க வந்ததைப்போல், ஆர்யா,ஸ்நேகா,ஆண்ட்ரியா ஆகியோர் தலா ஆளுக்கு அரை காட்சிகளில் த’ யைக்காட்டுகிறார்கள்.
படத்தின் ஒரிஜினல் ஹீரோ சந்தானம் தான். முழுப்படத்தையும் தனது தோளில் தூக்கிக்கொண்டு, உதயநிதியையும் பல காட்சிகளில் காப்பாற்றுகிறார்.
‘’நீயெல்லாம் நல்லா வருவேடா’ என்று நண்பனை வயிற்றெரிச்சலுடன் வாழ்த்துவதில் துவங்கி,’கேக்குறவன் கேணயனா இருந்தா கேரம் போர்டைக் கண்டு பிடிச்சவர் கே.எஸ்.ரவிக்குமார்னு சொல்லுவீங்கடா’ போல் சுமார் நூறு பஞ்ச்களாவது தியேட்டரை அதிர வைக்கிறது.
நேற்று நடந்த ‘கண்டுபுடி கண்டுபுடி’ ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குனர் மாரிமுத்து படங்களை நான்கு வகைகளாகப் பிரித்தார். 1. ஓடும் நல்ல படம். 2.ஓடாத நல்ல படம்.3. ஓடும் கெட்ட படம்.4. ஓடாத கெட்ட படம்.
மேற்படி வகையறாவில் ‘ஓகே. ஓகே’ சந்தேகமின்றி மூன்றாவது வகையைச்சேர்ந்தது.
இதை மட்டும் சந்தானம் குரலில் படித்துக்கொள்ளுங்கள்.’டைரக்டர் ராஜேஷ் நீங்கள்லாம் நல்லா வருவீங்க பாஸ்’