சுமார் 5 வருடங்களுக்கு முன்பே, ஒரு பத்து நிமிட குறும்படமாக, ஒரு டி.விடி.யில், கோடம்பாக்கத்தின் அத்தனை ஆபீஸ்களுக்கும் படமாகும் வாய்ப்புக்காக அலைந்து திரிந்து கொண்டிருந்தது இந்த காத்து.

மிரட்டலான சில வசனங்களும்,திகைக்க வைத்த சில காட்சிகளுடன்,

’என்னிடம் கொஞ்சம் வித்தியாசமான சரக்கு இருக்கு’ என்பதை அந்த டி.வி.டி. சற்று உரக்கவே தெரிவித்தது.

சீமானையெல்லாம் தூக்கிச்சாப்பிடும், பச்சைத்தமிழில் தலைப்பு அட்டைகள், திரைமொழி, குரல், வண்ணக்கலவை, நளபாகம், களப்பணி, என்று ஆரம்பிக்க,.. பச்சை என்கிறவனின் மரணச்செய்தியோடு படம் துவங்குகிறது.

ஒரு கிராமம். பச்சை என்கிற குட்டி அரசியல்வாதி இறந்து கிடக்கிறான். அவன் உடலருகே யாரையோ எதிர்பார்த்தபடி அழுதுகொண்டிருக்கும் அவனது மனைவி, தனது அப்பா வந்தவுடன் அவரை நோக்கி, கூட்டத்தை விலக்கியபடி, வீட்டுக்குள் ஓடுகிறாள்.’’ஏம்பா ஒரு பிரியாணி வாங்கிட்டு வர்றதுக்கு இவ்வளவு நேரமா?’ என்றபடி லெக் பீஸை கையில் எடுத்தபடி, கணவனின் மரணத்தை ரசித்தபடி, ருசித்துச் சாப்பிட ஆரம்பிக்கிறாள்.

புருஷன் செத்துக்கிடக்குறப்ப, லெக்பீஸைக் கடிக்கிற அளவுக்கு குரூரமா என்னத்தைப் பண்ணிட்டான்?என்ற ஆர்வத்துடன் ரசிகன் படம் பார்க்க அமர்வான் என்று இயக்குனர் நினைத்திருக்கக்கூடும்.

படத்தின் ஆகப்பெரிய பலமும், பலவீனமும் முழுக்க வியாபித்திருக்கும் புதுமுக நடிகர்களே.பச்சையாக நடித்திருக்கும் வாசகர், இதுவரை தமிழ்சினிமா கண்டிராத ஈடு இணையற்ற குடிகாரராகவே வாழ்ந்திருக்கிறார்.

’எல்லோரும் மகிழ்ச்சியாக வாழவே ஆசைப்படுகிறார்கள். நான் இப்போது அதைத்தானே செய்துகொண்டிருக்கிறேன்?. நான் மட்டும் கொஞ்சம் முந்தி பிறந்திருந்தா, வரலாறுங்கிற பேரை மாத்தி பச்சைன்னு வச்சிருப்பாங்க’ என்பது போன்ற அதிமேதாவித்தனமான வசனங்கள் படம் முழுக்க பரவிக்கிடக்கின்றன.

நாயகி தேவதையும் அபாரமாக நடித்திருக்கிறார்.ஆனால் தனது நெஞ்சில் பச்சையின் பெயரை ‘பச்சை’ குத்திக்கொண்டபிறகும் அவரிடம் தன் காதலை சொல்லாமல் இருந்த திரைக்கதையின் ரகஸியம் நமக்கு புரியவில்லை?.

பச்சையின் அம்மாவாக வரும் சத்தியபாமாவின் பத்திரப்படைப்பு இதுவரை தமிழ்சினிமா கண்டிராத அற்புதப் படைப்பு. அந்த அம்மா உண்மையில் நடிப்பில் அசாத்திய பாமா.

படைப்பாளிகள் மிகவும் எளிமையானவர்கள், ஏழைப்பட்டவர்கள் என்பது கையாண்டிருக்கும் கதையிலும், தொழில் நுட்பத்திலும் அப்பட்டமாகத் தெரிவதால், அதுகுறித்து விமரிசிப்பது நியாயமாகப்படவில்லை.

ஆனால் இவ்வளவு இருந்தும், இது ஒரு நல்ல படமாக எந்த இடத்திலுமே மாறாமல் போனதன் காரணம் படம் முழுக்க வியாபித்திருந்த உச்சக்கட்ட குரூரத்தனம்.காதலிக்கிற பெண்ணை ஐ லவ் யூ சொல்லச்சொல்லி தண்ணித்தொட்டியில் முக்கிக்கொல்லுவது, அதன்பின் அடித்துக்கொண்டு அழுவது போன்ற காட்சிகள்தான் மொத்தப்படமும். அதிலும் க்ளைமேக்ஸ் காட்சியில், நாயகி பச்சையைக்கொல்கிற விதம் சொல்லவே அச்சமாக இருக்கிறது.

‘பச்சை என்கிற காத்து’ இப்படியெல்லாம் படம் எடுக்கனுமா? என்று பார்த்து திகைத்தேன் நேத்து.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.