வித்தியாசமான கதை வித்தியாசமான கதை என்று எல்லாப்படங்களிலும் சொல்வார்கள்.உண்மையிலேயே வித்தியாசமான கதையோடு வந்திருக்கும் படம் டபுள் ஆக்குபன்சி.இருவர் தங்கும் வசதி எனப்பொருள்.

இந்தப் பொருளுக்கு மிகப் பொருத்தமான கதை.

ஒரே உடல்,ஒரே உயிர்.ஆண்,பெண் என இருவேறு உருவங்கள் அதற்கேற்ற குணங்கள் என்பதுதான் கதை.

ஓருடல் காலை ஆறுமணி முதல் மாலை ஆறுமணிவரை பெண்ணாகவும் மாலை ஆறுமணி முதல் காலை ஆறுமணி வரை ஆணாகவும் இயங்குகிறது.இருவரும் தனித்தனி வேலை செய்கிறார்கள்.தனித்தனி காதல் செய்கிறார்கள் என்றால் எப்படி இருக்கும்?

கேட்கவே சுவாரசியமாக இருக்கும் இந்தக்கதையைக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

ரஜினி என்ற பெயரில் பகலில் பெண்ணாக ரேஷ்மா வெங்கடேஷ் நடித்திருக்கிறார்.அதேபெயரில் இரவு நேரத்தில் ஆணாக நடித்திருக்கிறார் அறிமுகநடிகர் சந்தோஷ்.

இருவரும் தங்களுக்குள் இருக்கும் இன்னொருவரை மறைத்து வாழ்கிற கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்திருப்பதால் இரசிக்கத்தக்க வகையில் அமைந்திருக்கிறது.

ரேஷ்மாவின் காதலராக வினோத்கிஷனும் சந்தோஷின் காதலியாக சம்யுக்தா விஸ்வநாதனும் நடித்திருக்கிறார்கள்.ஆறு மணிக்கு மேல் என்ன நடக்கும்? என்கிற படபடப்பில் படம் பார்க்க வைத்திருக்கிறார்கள்.சிரிப்பும் கும்மாளமுமாகக் காட்சிகள் நகர்கின்றன.

தங்கள் பிறப்பில் உள்ள சிக்கலை தங்கள் இணையரிடம் தெரிவித்தாலே சிக்கல் வரலாம் எனும் நிலையில்,ஒரு வில்லன் வேறு வந்துவிடுகிறார்.மரபணு ஆராய்ச்சி நிபுணராக வரும் பக்ஸ்,இவர்களைக் காட்சிப்பொருளாக்கிப் பணம் சம்பாதிக்க எண்ணுகிறார்.
அதை அவர்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்? என்பது இன்னொரு சவால்.

வில்லத்தனம் கலந்த அந்த வேடத்துக்கு தன் ந்டிப்பால் மேலும் பலமூட்டியிருக்கிறார் பக்ஸ்.

விடிவி.கணேஷ் சிரிக்க வைக்கிறார்.அவருக்கேற்ப காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிரிப்பு.

சந்தகுமார் சக்ரவர்த்தியின் ஒளிப்பதிவு படத்தை வண்ணமயமாகவும் துடிப்புடனும் கொண்டு செல்ல உதவியிருக்கிறது.

சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.பாடல்கள் கேட்டு இரசிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன.பின்னணி இசையில் திரைக்கதையின் உணர்வுகளுக்கு உயிரூட்டியிருக்கிறார்.

பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு செய்திருக்கிறார்.கத்தி மேல் நடக்கிற மாதிரியான வேலையைச் சரியாகச் செய்து படத்தை குழப்பமின்றி நகர்த்தியிருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கிறார் அஸ்வின் கந்தசாமி.மிகவும் மாறுபட்ட சிந்தனையை மக்கள் கேள்வி கேட்காமல் ஒப்புக்கொள்ள ஒரு உத்தியைப் பிடித்திருக்கிறார்.

போஸ் வெங்கட் வினோதினி தம்பதியினருக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு குழந்தை பிறக்கிறது.பிறந்த சில நிமிடங்களிலேயே குழந்தை இறந்தும் விடுகிறது.அந்தநேரத்தில் இயற்கைக்கு மீறிய ஓர் அற்புதம் நிகழ்வதாகவும் அதனால் அக்குழந்தை மீண்டும் உயிர்பெறுவதாகவும் எழுதிய அஸ்வின் கந்தசாமி,அதோடு,பகலில் பெண் இரவில் ஆண் என்கிற மாறுபட்ட சக்தியையும் சேர்த்து எழுதிவிட்டார்.அதுவே வலுவான அடித்தளமாக அமைந்து படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறது.

வலுவான கதைக்குள் வணிகப்படங்களுக்குரிய காதல்,மோதல்,பாசம்,நகைச்சுவை,சண்டை ஆகிய அனைத்து அம்சங்களையும் சரிவிகிதத்தில் கலந்து ஒரு சுவையான படைப்பைக் கொடுத்திருக்கிறார்.

– கதிரோன்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.