ஆட்டி என்றால் தலைவி அல்லது முதன்மையானவள் என்று பொருள்.அப்படி ஒரு தலைவியை மையமாகக் கொண்டு வெளியாகியிருக்கும் படம் ஆட்டி.

இன்றைக்கு ஐம்பத்தியாறு ஆண்டுகளுக்கு முன்பு 1970 களில் நடக்கும் ஒரு மலைகிராமத்தில் நடக்கும் கதை.படிப்பில்லாத தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்,ஓர் அஞ்சல் நிலையம்,ஒரு காவல்நிலையம் என்றிருக்கும் அந்த ஊருக்கு மாற்றலாகி வருகிறார் காவல்துறை ஆய்வாளர் இசக்கி கார்வண்ணன்.ஒரு வழக்குகூட வராத அந்த காவல்நிலையத்துக்கு இந்த ஆய்வாளர் வந்த நேரத்தில் ஒரு கொலைவழக்கு வருகிறது.

அந்த ஊருக்கு பள்ளிக்கூடம் வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று அங்கு ஆசிரியராக வருபவர் கொலை செய்யப்படுகிறார்.அவரைக் கொன்றது யார்? என்கிற விசாரணையில் விரிகிறது படம்.

காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் இசக்கி கார்வண்ணன்,அந்த வேடத்துக்குரிய கம்பீரம் காட்ட முயன்றிருக்கிறார்.துப்பாக்கி அவருக்குத் துணை நின்றிருக்கிறது.

கிராமத்து மனுசியாக நடித்திருக்கும் அபிநட்சத்திரா வேடமும் அவருடைய நடிப்பும் நன்று.சிறுவர்களுக்குப் பாடம் சொல்லித் தரும் நேரமும் ஆசிரியரிடம் சீறும் காட்சியும் சிறப்பு.

நகைச்சுவைக்கென இருக்கும் காதல் சுகுமார்,அஞ்சல்காரர் சௌந்தர்,பள்ளி ஆசிரியர் பிரவீன் பழனிசாமி,காவலராக வரும் செல்வகுமார் ஆகியோரும் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களுக்குப் பொருந்தியிருக்கிறார்கள்.

சிபி சதாசிவம் ஒளிப்பதிவில்,அந்தக்கால ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட நிலப்பகுதிகளைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.பழங்காலம் என்பதற்காக ஒளியமைப்பில் மெனக்கெட்டிருக்கிறார்.

பாடல்கள் இல்லாத படத்திலும் தன் இருப்பைப் பதிய வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் தீசன்.

படத்தின் நம்பகத்தன்மைக்கு முழுமையான பங்களிப்புச் செய்திருக்கிறார் கலை இயக்குநர் முஜிபுர் ரகுமான்.

சி.எம்.இளங்கோவனின் படத்தொகுப்பு,கதைக்களத்தைச் சிதைக்காமல் கவனத்துடன் இயங்கியிருக்கிறது.

அந்தக்கால சண்டைகள் எப்படியிருக்கும் என்று காட்டியிருக்கிறார் சண்டைப்பயிற்சி இயக்குநர் சுரேஷ்.

திருமுருகன் திரைக்கதையில் கிட்டு இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப்படம்,தமிழ்ச் சமுதாயத்தில் பெண்களின் உயரிய நிலை,சிறுதெய்வ வழிபாடுகள் ஆகியனவற்றைக் கலந்து தமிழினப்பெருமையைப் பேச முயன்றிருக்கிறது.மேலுடை அணியாத ஆண்கள், ரவிக்கை அணியாத பெண்கள் என்ற அந்தக்கால மனிதர்களைக் கண்முன் நிறுத்தியதன் வழக்கமான படம்போல் இல்லாமல் வேறுபட்டு நிற்கிறது.அதோடு பழந்தமிழ்ச் சமூகத்தின் கதைகள் வசனங்களாக வந்து வியப்பூட்டுகிறது.

வலிமையான அடித்தளம் கொண்ட கதை,நம்முடைய பெருமைமிகு வரலாற்றை நினைவுபடுத்திப் பார்த்துக்கொள்ள உதவும் படம்.

– ஆநிரையன்

YouTube player

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.