ghost-shortfilm

நடிப்பு – சித்தார்த், நவீன், சுரேஷ், திலிப். எடிட்டிங் – ஜே விஜய். இசை – ப்ரியதர்ஷன்.
SFX – ஜோ. ஒளிப்பதிவு – திலீப் குமார். திரைக்கதை, காட்சியமைப்பு, இயக்கம் – சங்கீத்.

வெளியீடு – ஐகனோ எப் எக்ஸ் ஸ்டுடியோ. வெளிவந்த ஆண்டு – 2012. ஓடும் நேரம் – 15 நிமிடங்கள்.

2012ன் தேசிய அளவிலான கேட்வே குறும்படப் போட்டியில்(Gateway National Level Short Film Competition) சிறந்த எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவிற்கான விருதுகளைப் பெற்ற படம்.

விது என்கிற என்ஜினியர் காலேஜ் மாணவன் சொல்வது போல நகரும் கதை. கோடைகால விடுமுறைக்கு எங்காவது செல்லலாம் என்று இணையத்தில் தேடுகிற விது தற்செயலாக வர்மா என்கிற ஆவி ஆராய்ச்சியாளரின் ப்ளாக்கில் அவரது அனுபவத்தைக் கேட்கிறான். வேலூருக்கு பக்கத்தில் இருக்கும் பாலமதி என்கிற மலைப்பகுதியில் பேய்கள் இருப்பதாகவும், அவரது உதவியாளர்களுடன் அவர் சென்றபோது அவர்கள் எல்லோரும் புதிரான முறையில் இறந்து போனதாகவும் அவர் சொல்கிறார்.

ஆவிகள் மேல் நம்பிக்கை இல்லாத விது, பாலமதி பற்றி மேலும் அறிய ஆர்வம் கொண்டு தனது நண்பர்கள் மூவருடன் சேர்ந்து அங்கு செல்கிறான். அவர்களை மர்மமான ஏதோ பின் தொடர்கிறது. துரத்துகிறது. முடிவில் அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தான் கதை.

நிறைய ஹாலிவுட் படங்கள், ராம்கோபால் வர்மாவின் படம், ஹிந்தி பேய்ப் படங்கள் இந்த பாணியில் வந்திருக்கின்றன. கதையின் முடிவு நன்று ஆனால் அதில் இயக்குனர் முழுமையான திகிலை வெளிக்கொணரத் தவறிவிட்டார்.

அவார்டு கொடுக்கப்பட்டது சரிதான் என்பதற்கேற்ப படத்தில் ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் அருமை. கேமரா கோணங்கள், நகர்த்தல்கள், துரத்தும் காட்சிகளில் திலீப் குமார் தான் ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராக வரும் வாய்ப்பு இருப்பதை வெளிப்படுத்துகிறார். ஜே விஜய்யின் எடிட்டிங் ஹாலிவுட் பேய்ப் படங்களில் வரும் எடிட்டிங் முறைகளை தமிழில் முயற்சி செய்கிறது.

ப்ரியதர்ஷனின் இசை ஆச்சரியப்படுத்தும் விதமாக படத்திற்கு பலம் சேர்க்கிறது. ஸ்பெஷல் எபெக்ட்களை கச்சிதமாக பயன்படுத்தியதற்காக இயக்குனர் சங்கீத்தை பாராட்டலாம். கதைக் களமான காடு, அதில் உருவகித்த காட்சியமைப்புகள் இவற்றில் சங்கீத் தேறிவிடுகிறார்.

ஆனால் இயக்கத்தில் மட்டும் பார்டர் மார்க்கில் பெயிலாகி விடுகிறார். படத்தின் நடிகர்கள் யாருடைய முகமும் பார்ப்பவர்கள் மனதில் உறுதியாகப் பதியுமுன் அவர்கள் நான்கு பேரும் பேய்களால் விரட்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். திகிலில் அவர்கள் அடையும் உணர்வுகளைக் காட்ட க்ளோஷப் ஷாட்கள் குறைவு. சங்கீத் ரத்தம் வழியும் கோரமுகங்களை காட்டும் அவசியமில்லாமலேயே த்ரில்லை கதையின் போக்கில் உருவாக்க முயற்சித்து வெற்றியும் பெறுகிறார்.

அப்படி வந்த படத்தின் த்ரில்லான கணங்களை பாதி டம்மியாக்கிய இன்னொரு விஷயம் டப்பிங். டப்பிங் பேசிய நால்வரும் பாடத்தை வாசிக்கும் மாணவர்கள் போல வாசிக்கிறார்கள். இது இயக்குனரின் தவறே. பதட்டத்தில் ஓடும் போது வாடா.. வாடா.. ஓடு.. ஓடு.. என்று ஸ்டுடியோவுக்குள் உக்கார்ந்து கொண்டு சொல்கிற மாதிரியில்லாமல் ஸ்பாட் ரெக்கார்டிங்கில் கிடைத்த ஒலிகளை மேம்படுத்தி சேர்த்திருக்கலாம்.

ஒளிப்பதிவு, எடிட்டிங், காட்சியமைப்பு, இசை மற்றும் கதையின் பலத்தில் 100 சதம் மெருகேறிய படம் டப்பிங் மற்றும் நடிப்பு விஷயத்தில் 30 சதவீதத்தை கழித்து 70 சதவீதம் ஓகே படமாக நிற்கிறது.

இந்தக் குழு அடுத்த முறை நிஜமாகவே பயமுறுத்துவார்கள் என்று எதிர்பார்ப்போம்.

‘ஆவி’யை கீழே பாருங்கள்.

அல்லது இந்த சுட்டியை தொடருங்கள்.

முந்தைய குறும்பட விமர்சனங்களை படிக்க..

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.