படம் ஓடும் நேரம் : 149 நிமிடங்கள் மற்றும் 26 விநாடிகள்
தயாரிப்பு- குஷ்புவின் அவ்னி சினி மேக்கர்ஸ் .
படத்தின் பட்ஜெட் சுமார் 3கோடி.
விலைக்கு வாங்கி வெளியிடும் நிறுவனம்: தொடர்ந்து தமிழ்சினிமாவில் மோசம் போகும் யூ.டி.வி. மோஷன் பிக்ஷர்ஸ்.
வாங்கிய விலை : 5.50 கோடி.
தயாரிப்பாளர் குஷ்ஷுக்கு கிடைத்த ஜாக்கெட் மணி 2.50 கோடி.
வசூலாகப்போகும் தொகை : இந்த விமர்சனம் படித்து
முடிக்கும்போது, உங்களுக்கே பிடிபட்டுவிடும்.
பத்திரிகை செய்திகளின் மூலம் இந்த ‘மசாலா க்ஃபே’ இயக்குனர் சுந்தர்.சி.யின் 25 வது படம் என்று அறியப்படுகிறது.
அதில் நல்ல படம்-0 [அன்பே சிவம்’ கமல் லேபிளில் வந்த சு.சி.யின் படம்.எனவே அது கணக்கில் வராது]
ஓடிய படங்கள் மூன்று எனும்போது எப்படி இவரால் 26 படங்களை இயக்க முடிந்த்து என்பது மில்லியன் டாலர் கேள்வி.
இயக்குனர் சுந்தர்.சி.யின் மனைவி குஷ்புவாகப்பட்டவர் இடையில் சிலகாலம் சின்னத்திரையிலும், அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, வீட்டில் மிகவும் பொறுப்புடன் சுந்தர்.சி குழந்தைகளை கவனித்துக்கொண்ட செய்தியை நான் பல பத்திரிகைகளில் படித்திருக்கிறேன்.
அவ்வாறான தருணங்களில் குழந்தைகளை கவனித்துக்கொண்ட நேரம் போக மீதிநேரங்களில், உலக சினிமா வேண்டாம்,இந்திய சினிமாகூட வேண்டாம். அட்லீஸ்ட் தமிழ்ப்பட உலகில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்வதற்காக சில தமிழ்ப்படங்களை பார்த்திருக்கலாம் சுந்தர்.சி.
ஒரு 20 வருடங்களுக்கும் மேலாக கோமாவில் இருந்து வந்தவர் நேராக ஷூட்டிங் கிளம்பியது போல் பட்த்தின் எல்லா அம்சங்களிலும் ஒரு மொன்னைத்தனம் நிரம்பி வழிகிறது.
சரி, படத்தின் கதைகளை பார்ப்போம். அது என்ன ‘கதைகள் என்று குழம்பாதீர்கள்.டிஸ்கசனில் நம்ம கேபிள்சங்கர் உடபட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்திருக்கக்கூடும் என நினைக்கிறேன். சொல்லி மாளமுடியாத அளவுக்கு படம் முழுக்க கதைகளும் சீன்களும் நிரம்பி வழிகின்றன.
பாட்டன்,பூட்டன் நடத்திவந்த மசாலா கபேவை, வம்ச பெருமையை காக்கும்பொருட்டு நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை என்று விமல் பிடிவாதமாக நட்த்துகிறார். இன்னொரு பக்கம் அவரது தம்பி மிர்ச்சி சிவா, சிவனே என்று கடையில் வேலை பார்த்த ஓவியவை லவ்வுகிறார்.
இதே சமயம் கடையை இன்ஸ்பெக்ஷன் செய்ய வந்த அஞ்சலியை விமல் லவ் பண்ணுகிறார். கடையை பிக்-அப் பண்ணுவதைவிட அஞ்சலியை பிக்-அப் பண்ணுவதில் இவர் ஆர்வம் அதிகம் போகிறது. அவரது ஆர்வத்தை புரிந்துகொண்டோ என்னவோ அடுத்து அஞ்சலி அரசாங்க வேலைக்கு லீவு போட்டுவிட்டு, மசாலா கபேயில் சப்ஜாடாக குடியேறிவிடுகிறார்.
இன்னொரு ஏரியாவில் இளவரசு, கடையை நடத்துவதற்காக விமலுக்கு 2லட்சம் கடன் கொடுத்துவிட்டு அதை வசூலிக்க, தசாவதாரம் கமல் நெனப்பில், பதினோரு கெட்ட கெட்டப்புகளில் அலைகிறார்.
இதற்கும் அடுத்த ஒரு ஏரியாவில், தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தின் பிஞ்சு மகன் சுப்பு, ஒரு கத்தியையும் , வைரங்கள் அடங்கிய செல்போனையும் தனது உறவினர் ஒருவர் கையில் கொடுத்துவிட்டு,அதை தொலைத்துவிட்டு அலைகிறார்.
இதற்கெல்லாம் அடுத்த ஏரியாவில், பக்கத்து ஊரில் அஞ்சலியின் தாய்மாமன் சந்தானம் ’கட்டுனா அஞ்சலியைத்தான் கட்டுவேன்’ என்று ஒத்தைக்காலில் நிற்கிறார்.
இவைகளுக்கு மத்தியில், சந்தில் சிந்து பாட நினைக்கும் போலீஸ்காரர் ஒருவர் விமலின் மசாலா கபே கடையை ரியல் எஸ்டேட் பார்ட்டிக்கு வாங்கித்தருவதாக ப்ராமிஸ் பண்ணி, விமலின் தம்பி சிவாவை சீட்டாட வைத்து தோற்கடித்து பாண்டு பேப்பரோடு பாண்டி ஆடுகிறார்.
படத்தில் மீதியுள்ள கதைகளை பேச ஆரம்பித்தால், என் போன் நம்பரையும் விலாசத்தையும் விசாரிக்க ஆரம்பித்து விடுவீர்கள் என்கிற அடிப்படை அறிவுகூட இல்லாதவனா நான் ?
எனவே கதைகளை முடிக்கிறேன்.
கதை கோடைகாலத்தில் நடக்கிறதோ என்னவோ அஞ்சலியும்,ஓவியாவும் பட்த்தின் பல காட்சிகளில் குளித்துக்கொண்டே இருக்கிறார்கள்.[ நீங்க குளிக்கிறப்ப எங்க மனசு ஏன் அழுக்காகுது ?- கவிதை ]
இந்த குப்பை கதைக்கு இது போதாதா என்பதுபோலவே, அனைத்து தொழில் நுட்பங்களும் அரதப்பழசாய், படம் பார்க்க வந்தவர்களை அனுதாபத்துக்குரியவர்களாக்குகின்றன.
குறிப்பாய் இசையும் பாடல்களும்.’ ஜவ்வுமிட்டாய் சாப்புட்டுக்கிட்டே லவ்வு பண்ணுவமா? லவ்வுமிட்டாய் சாப்புட்டுக்கிட்டே ஜவ்வு பண்ணுவமா.. ?’ அட போங்கப்பா நீங்களும் உங்க பாடல் வரிகளும்…
பட்த்தின் ஒரே ஆறுதல் அம்சம் இடைவேளைக்கு அப்புறம் வரும் சந்தானத்தின் சில காமெடிகள். அதுவும் படம் முடியும் தறுவாயில்,அவரது அள்ளக்கைகள் அவரது ‘மேட்டரில்’ நெருப்பை வைத்து விளையாடும்போது நமக்கு சந்தானத்தின் மீதும் கூட வெறுப்பு வந்துவிடுகிறது.[வடிவேலு ‘அதை’ச்சுத்தி பந்தல் போட்டதையே பாத்து ரசிச்சவங்கடா நாங்க]
இதை தனது 25 படம் என்று போட்டு பெருமைப்பட்டுக்கொள்ளும் சுந்தர்.சி., தனது அடுத்த படத்தை 50- வது படம் என்று தைரியமாக போட்டுக்கொள்ளலாம் இதில் 25க்கும் மேற்பட்ட கதைகள் இருப்பதால்.
மசாலா கஃபே, சென்னை மாநகராட்சி வண்டியிலே, உடனே கொட்டவேண்டிய குப்பே.