valzakku-en18-review2

சென்னையில் சிறப்புக்காட்சி பார்த்தவுடன் நண்பர்கள் சிலர் புகழ்ந்த வேகத்தில் படத்தைப் பார்த்தே ஆகவேண்டுமென்று தோன்றியது. பற்றாக்குறைக்கு, ‘என் நாற்பது ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் நான் பார்த்த சிறந்த படம் இதுதான்’ என்று பாரதிராஜாவும், பாலுமகேந்திரா ஒருபடி மேலே போய், ’நான் மாரடைப்பிலிருந்து தப்பி உயிர் பிழைத்ததே இப்படத்தைப் பார்க்கத்தான் என்று

நினைக்கிறேன்’ என்றெல்லாம் பேசியதாகக் கேள்விப்பட்ட போது எனது ஆர்வம் உச்சகட்டத்தை அடைந்தது.

சமீபத்தில் பார்க்கக் கிடைக்கிற உலகப்படங்கள் நம் இயக்குநர்களை தொந்தரவு செய்யத் தொடங்கியிருப்பதற்கான வெளிச்சக் கீற்றுகள் தமிழ் சினிமாவில் தெரியத் தொடங்கியிருக்கின்றன. குறிப்பாக கதை சொல்வதில் இயக்குநர்கள் மாற்றங்களைச் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். அலைபாயுதேயில் மணிரத்னம், இன்று காலை 8மணி.. என்றெல்லாம் அலைபாய்ந்தார். உடனே பலரும் அதைப் பிடித்துக்கொண்டு தொங்கத் தொடங்கினார்கள். ஆனால் அதை அர்த்தப்பூர்வமாக யாரும் பயன்படுத்தவில்லை. முதன் முறையாக தமிழில் பாலாஜி சக்திவேல் கதைக்குத் தேவையான அல்லது இந்தக் கதைக்குப் பொருந்தக்கூடிய ஒரு கதைகூறலைப் பரிசோதித்திருக்கிறார். ஆனால் கதையைப் புத்திசாலித்தனமாகக் கூறிவிடுவது மட்டும் சினிமாவாகி விடுவதில்லையே?
உடனே உங்கள் மனக்குரல் (அதாங்க மைண்ட் வாய்ஸ்) ’இந்த விமர்சகர்கள் தொல்லை தாங்க முடியலப்பா! உருப்படியா படம் எடுக்க முயற்சிக்கிறதே சொற்பம். அவங்களையும் நொட்டை சொல்லியே ஓச்சுருவாங்க’ என்று சொல்வது கேட்காமல் இல்லை. ஆனால் இது குறை சொல்வதற்காகவே காத்திருப்பது அல்ல. வழக்கமாக ஒரு எதிர்பார்ப்புள்ள படம் படுத்துவிட்டால், திரையுலகிற்குள் சக சினிமாக்காரர்கள் பலர் நிம்மதிப் பெருமூச்சு விடுவர், அதற்காகவே காத்திருந்தது போல்.

அதற்குப் பொறாமை தவிர வேறு காரணம் இருக்க முடியாது. ஆனால் சினிமாவிற்கு வெளியே என்னைப் போல் பலர், தமிழ் சினிமாவில் ஏதாவது பாய்ச்சல் நிகழ்ந்துவிடாதா? என்ற பதைப்பில் புதிய முயற்சிகளை எதிர் நோக்கியபடியே காத்திருக்கிறோம் என்பதால் தான் இத்தகைய கடுமையான அணுகுமுறை. இந்தப்படம் உண்மையிலேயே மிகவும் எதிர்பார்க்கப்பட்டதற்குக் காரணங்கள் சில உண்டு..

காதல் என்கிற மிக முக்கியமான படத்தை, கல்லூரி என்கிற எளிமையான சினிமாவை முயற்சித்த இயக்குநரின் அடுத்தபடம்…
இரண்டு வருடங்களாக எடுத்துக் கொண்டிருக்கிறார்…
மிக முக்கியமாக, புதிய டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் முழுக்க எடுக்கப்படுகிற படம்.. அதிலும் பிரபலமான ஒளிப்பதிவாளர். இந்தப்படம் வெற்றி பெற்றால், டிஜிட்டல் தொழில்நுட்பம் பரவலாகும். குறைந்த மூலதனத்தில் புதிய இயக்குநர்கள் புதிய கதைகளோடு களமிறங்குவார்கள். ஒரு புதிய டிஜிட்டல் சகாப்தம் உருவாகக் கூடும் என்ற எதிர்பார்ப்புகளெல்லாம் மேலோங்கி இருந்தது. ஏனென்றால் டிஜிட்டல் தொழில் நுட்பம் பற்றி தமிழ்ச் சினிமா உலகில் குழப்பமான கருத்துக்கள் நிலவி வருகின்றன.
’என்னதான் தலை கீழாய் நின்றாலும் பிலிம்மில் படம் எடுப்பதற்கு இணை எதுவுமில்லை’…
’எடுக்கத் தெரிந்தவர்கள்தான் அதை வைத்து எடுக்க முடியும். நம் ஒளிப்பதிவாளர்களுக்கு இதைக் கையாளத் தெரியவில்லை என்பதுதான் பிரச்சனை’ என்று எதிரும் புதிருமாகப் பேசிவருகிறார்கள். பி.சி.ஸ்ரீராம் முழுதாக ஒரு படம் முயற்சித்தார். கமல்ஹாசன் ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ என்று எடுத்துப்பார்த்தார். சேரன் அவர் படத்தின் சில பகுதிகளை முயற்சித்துப் பார்த்தார். எதுவும் கைகூடாத நிலையில் இப்போது விஜய்மில்டன் ‘வழக்கு எண்ணில்’.
ஒளிப்பதிவில் இரண்டு பிரச்சனைகள் தென்பட்டன. ஒன்று படத்தின் தெளிவின்மை. புரொஜெக்சன் சரியில்லையோ என்று எண்ணும்படி.
எப்படியும் அது தொழில் நுட்பத்தின் கோளாறாகத்தான் இருக்கமுடியும். குறிப்பாக ஒளியமைப்பு. காட்சிகள் மிகவும் தட்டையாகத்(flat) தோன்றியதற்கு இதுதான் காரணமாக இருக்க வேண்டும். ஒளியமைப்புதான் திரையின் இரு பரிமாண வெளியில் முப்பரிமாணமான போலித் தோற்றத்தை உருவாக்குகிறது.

வழக்கு எண்ணிலோ வீடியோத் தன்மை அப்படியே தென்படுகிறது. இரண்டாவது, யதார்த்தம் என்ற பெயரில் ’ப்ரேம்கள்’ பல இடங்களில் மிகவும் தளர்வாகவும், சில இடங்களில் மிக நெரிசலாகவும் ஏனோ தானோவென்று தென்பட்டன. நாங்கள் வேண்டுமென்றேதான் அப்படி அமைத்தோம் என்றும் சொல்லலாம். ஆனால் யதார்த்தத்தில் ‘சினிமா யதார்த்தம்’ என்று ஒன்று உண்டு. அதாவது சினிமாவில் என்ன செய்தாலும் ஒரு இயக்குநர் ‘யதார்த்தம் போன்ற’ ஒன்றைத்தான் முயற்சிக்கிறாரே தவிர புற உலகின் யதார்த்தத்தை அப்படியே பெயர்த்து வைத்துவிட முடிவதில்லை. நிஜக் கண்கள் பார்க்க இயலும் பெரும் பரப்பில் சினிமாவிற்கான ‘ப்ரேமை’ தேர்ந்தெடுக்கும்போதே, அங்கு ஒரு யதார்த்தம் ’செயற்கையாக’ கட்டமைக்கப்படுகிறதாகத்தான் அர்த்தமாகும். வழக்கு எண்ணில் காட்சிகள் ஒரு சினிமா அனுபவத்தைத் தரத் தவறிவிட்டன.

திரைக்கதையை ’அ–நேர்கோட்டு’ (non-linear ) பாணியில் சொல்வது போலவே, காமராவைக் கையாள்வதிலும் ஒரு ‘நான்–லீனியர்’ பாணி உண்டுதான். சிட்டி ஆஃப் காட் (City of God), பாட்டில் ஆஃப் அல்ஜீயர்ஸ் ( Battle of Algiers) போன்ற படங்கள் அதன் உச்சத்தை தொட்டவை. விஜய் மில்டன் கைக்குள் அடங்கும் கேமரா என்பதால் அபத்தமான கோணங்களில் சிலவற்றைக் காட்சிப்படுத்தியிருக்கிறார். குப்பை போடப் போனால் குப்பைத் தொட்டிக்குள்ளிருந்து கேமரா பார்ப்பது, பீரோவைத் திறந்தால் பீரோவுக்குள்ளிருந்து கேமரா பார்ப்பது என்பதாக இருந்ததை கண் இமைகளுக்குள்ளிருந்து கேமரா பார்ப்பதாக மில்டனின் கேமரா மெனக்கெட்டிருக்கிறது. இத்தகைய அபத்தமான கோணங்கள் பார்வையாளனின் சினிமா அனுபவத்தை எவ்வகையில் மேம்படுத்துகின்றன? அதுவும் ஒரு தீவிரமான கதையைச் சொல்ல முயற்சி செய்யும் சினிமாவில் இத்தகைய கேமரா கோணங்களும் அசைவுகளும் எவ்வளவு பாதகமாக முடியும் என்பதை ’வழக்கு எண்ணில்’ வெளிப்படையாகத் பார்க்க முடிந்தது.
இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் பிரசன்னா என்று அழைக்கப்படும் கிதார் பிரசன்னா. இதைக் கேள்விப்பட்டதிலிருந்தே எனக்கு படத்தைவிட இசையைப் பற்றிய எதிர்பார்ப்பு கூடுதலாக இருந்தது. அவருடைய இசை என்று தனியாக எதையும் கேட்டதில்லை என்றபோதும், உலகின் தலை சிறந்த கலைஞர்களுடன் இணைந்து இசை நிகழ்த்துபவர், கல்லூரி நாட்களிலிருந்து கிதாரை கர்நாடக இசைக்குப் பழக்கி பரிசோதனைகள் நிகழ்த்துபவர் என்ற வகையில் அவர் ஏதாவது செய்துவிடக்கூடும் என்று எதிர்பார்த்தேன்.
‘உன்னை யாருய்யா எதிர்பார்க்கச் சொன்னா?’ என்பதுபோல் இசை அமைந்திருந்தது. சினிமா இசை என்பதே பிடிபட்டதாகத் தெரியவில்லை. ‘வானத்தையே எட்டிப்பிடிப்பேன்..’ என்கிற நாலு வரிப்பாடல் தவிர சொல்லிக் கொள்ளும் படியாக எதுவும் நடந்துவிடவில்லை. அதுவும் அவருடையதா எனத் தெரியவில்லை. உலக சினிமாவில் பிண்ணனி இசை என்பது வெகுவாக மாறிவிட்டது என்பதை இயக்குநர்களும் இசையமைப்பாளர்களும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
இன்னும் தீம் மீயூசிக் போட்டுக்கொண்டிருக்கிறார்கள் நம் இசை அமைப்பாளர்கள்.
குறிப்பாக எங்கு எவ்வளவு இசை வேண்டும் என்பதைச் சரியாகத் தீர்மானித்தாலே பாதிப் பிரச்சனைகள் தீர்ந்து விடும். பொதுவாகவே இசைக்கருவிகளில் விற்பன்னர்களாக இருப்பவர்கள், மிகச்சிறந்த இசையமைப்பாளர்களாக மிளிர்ந்ததாக எனக்கு நினைவில்லை, பண்டிட் ரவிசங்கர் உட்பட.

பதேர் பாஞ்சாலியில் அவரின் இசையை ஆஹா.. ஓஹோவென்று சிலாகிப்பவர்கள் உண்டு. ஆனால் அது ஏனென்று எனக்கு இன்றுவரை புரிவதில்லை. மேலும் மனதை மயக்கும் அவருடைய ஒரு இசைக் கோர்ப்பையும் நான் கேட்டதில்லை.
பொதுவாக செவ்வியல் இசையில், கருவியிசையில் மேதைகளாக விளங்குபவர்கள், ராக தாள கணக்கு வழக்குகளில் சிக்கித் தவிக்கும் நேரத்தில், திறந்த சன்னலின் வழியே கேட்காமல் புகுந்து விடுகிற காற்றுப்போல, தன்னெழுச்சியாக தவழ்ந்து வரும் இசையைத் தவறவிடுபவர்களாகவே இருக்கிறார்கள். பிரசன்னாவுக்கு என்ன பிரச்சனையோ?

கதையும் மிக எளிதானதுதான். புதிய கதை என்று இருக்க வேண்டியதுமில்லை. ஒரு ஏழை, பாமரன் எல்லா இடங்களிலும் ஏமாற்றப்படுகிறான். வஞ்சிக்கப்படுகிறான். சீரழிந்த சமூக நிறுவனங்களின் ஊடான அவன் பயணம் உணர்ச்சிகரமானது. ஆனால் அவனுக்கு அவ்வளவு பெரிய முன்கதை சொன்னவர் நாயகியை பற்றிச் சுருங்கச் சொல்லி நிறுத்திக் கொள்கிறார். அவனுடைய பழைய கதை படத்தின் மையத்தையும் தூக்கி நிறுத்த உதவவில்லை. மிக ஆரம்பத்திலேயே பலியாடாக மாறப்போகிறவன் இவன் தான் என்பதும் ஊகிக்கக் கூடியதாகி விடுகிறது. எதிர்பாரா அம்சம் அந்தப் பெண்ணின் எதிர்வினை மட்டுமே.

மொத்தத்தில் இப்போதும் பாலஜி சக்திவேலின் சிறந்த படமாக ‘காதல்’ தான் கண் முன் நிற்கிறது.

–இரா. பிரபாகர்.
valzakku-en-18-rev2

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.