சென்ற ஆண்டு(2011) சிறந்த பிறமொழிப் படங்களுக்கான ஆஸ்கர் விருதை வென்றதாக குறிப்பிடப்பட்டிருந்ததைத் தவிர இப்படத்தைப் பற்றி நான் வெறெதுவும் கேள்விப்பட்டிருக்கவில்லை. கனடாவின் Denis Villeneuve (முடிந்தால் தமிழில் சொல்லிப் பார்த்துக் கொள்ளுங்கள்) இயக்கிய படம்.
தற்போதைய திரைப்படங்களில் மிக முக்கிய அம்சமாக இருப்பது திரைக்கதைதான். குறிப்பாகத் தாவித்தாவி கதைகூறுகிற முறையில் கதைக்குப் புதிய வடிவத்தை வழங்கி வருகிறார்கள் புதிய தலைமுறை இயக்குநர்கள். அந்த வகையில் இப்படம் கனமான உள்ளடக்கத்தையும் அதற்கு அவசியமான மிகக் கச்சிதமான வடிவத்தையும் பெற்றிருக்கிறது.
கனடாவில் வசிக்கும் நடுத்தரவயதைக் கடந்த பெண்ணொருத்தி பக்கவாதத்தால் படுத்த படுக்கையாகிறாள். அவளின் மகனும் மகளுமான இருவரிடம் கொடுக்கப்படும் உயிலில்.. அவர்கள் இதுவரை கேள்விப்பட்டிராத, அவர்களின் தந்தையும், இன்னொரு சகோதரனும் இருப்பது தெரியவருகிறது. மத்திய கிழக்கு நாடொன்றில் இருக்கும் அவ்இருவருக்கும் கொடுப்பதற்கான இரண்டு மூடப்பட்ட கவர்களை அவர்களிடம் ஒப்படைத்துவிட்ட பிறகே என் கல்லறையில் என் பெயரைப் பொறிக்க வேண்டும் என்ற அம்மாவின் கோரிக்கைகள் அவர்களை குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்துகின்றன. ம்கன் புறக்கணித்த அம்மாவின் கோரிக்கையை செயல்படுத்த மகள் கிளம்புகிறாள். பின் மகனும் இணைந்து கொள்கிறான்.
அம்மாவின் கடந்த காலம், மகளின் தேடுதல் என்பதாக கதை முன்பின் நகர்கிறது. இயக்குநர் திட்டமிட்டே கதை நடக்கும் இடத்தை அடையாளப் படுத்துவதைத் தவிர்க்கிறார். கதைச்சூழலை வைத்து லெபனானாக நாம் அதைக் கருதிக்கொள்ளலாம். ‘நவால் மார்வான்’ (Nawal Marwan) எனும் கிறித்தவப் பதின்வயதுப் பெண்ணான அவள் ஒரு இஸ்ஸாமியனோடு ஓடிப்போக முயலும் போது சகோதரர்கள் குறுக்கிட்டு காதலனைக் சுட்டுக் கொல்கிறார்கள். அப்போது அவள் வயிற்றில் அவன் குழந்தையைச் சுமந்து கொண்டிருக்கிறாள். பிறந்த குழந்தைக்கு குதிகாலில் மூன்று புள்ளிகளால் அடையாளமிட்டு, இதை வைத்து உன் குழந்தையை நீ அடையாளம் கண்டு கொள் என்று கூறி, அநாதை விடுதியொன்றில் சேர்த்துவிட்டு, நவாலை நகரத்துக்கு படிக்க அனுப்பிவைக்கிறாள் அவளின் பாட்டி. நகரத்தில் படித்துக் கொண்டிருக்கும் போது, மீண்டும் போர்ச்சூழலில் கல்வி நிலையங்கள் மூடப்படுகின்றன. தன் மக்னைத்தேடி நாட்டின் தெற்குப் பகுதியிலிருக்கும் அநாதை விடுதியைத் தேடிச்செல்கிறாள். இஸ்லாமியர்கள் பயணித்து வரும் பேருந்து ஒன்றில் இடம் பிடிக்கவேண்டி இஸ்லாமிய பெண்ணாக நடிக்கிறாள். வழியில் கிறித்தவ படையினரால் நிறுத்தப்படும் பேருந்து, குண்டுகளால் துளைக்கப்படுகிறது.
குழந்தையுடன் பெண்ணொருத்தியும் நவால் மட்டுமே உயிருடன் இருக்கிறார்கள். பேருந்தை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்த முற்படும்போது, சிலுவையை காட்டி தப்புகிறாள். அப்போது உயிருடன் இருக்கும் பெண்ணின் குழந்தையைத் தன்னுடையதாகக் கூறி தூக்கிவருகிறாள். ஆனால் அழுதபடியே குழந்தை அம்மாவிடம் ஓடும்போது சுடப்படுகிறது. மகன் இருந்ததாகக் கூறப்படட விடுதிக்கட்டிடம் குண்டுகளால் சிதறடிக்கப்பட்டு எரிந்து கிடக்கிறது. குழந்தைகள் அப்புறப்படுத்தப் பட்டார்கள் என்ற தகவல் மட்டும் கிடைக்கிறது.
இதற்கிடையில் புரட்சிகர அரசியல் இயக்கம் ஒன்றில் இணைந்து, கிறித்தவ தலைவர் ஒருவரை சுட்டுக்கொல்கிறாள். பலனாக சிறையில் 13 வருடங்களைக் கழிக்க நேர்கிறது. அங்கே எப்போதும் பாடல்களை முணுமுணுப்பவளாக இருப்பதால் ‘பாடும் பெண்ணாக’ அறியப்படுகிறாள். அங்கே போர் வீரன் ஒருவனால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுகிறாள். ‘எங்கே இப்போது நீ பாடு’ என்றவாறு செல்கிறான். அத்தோடு அவள் பாடல் நின்றுவிடுகிறது. அங்கு இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கிறாள். ஆற்றில் வீசி கொல்லப்படக் கொண்டு செல்லப்படும் குழந்தைகளை செவிலிப் பெண் காப்பாற்றுகிறாள்.
இப்படிப் படம் நெடுகிலும் உணர்ச்சிகரமான சம்பவங்கள் தொடர, தாயின் கதையைப் பின்தொடர்கிறார்கள். இறுதியில் தாங்கள் தேடிக்கொண்டிருக்கும் அப்பாவும் சகோதரனும் ஒருவரே எனும் அதிர்ச்சியைக் கண்டடைகிறார்கள். ஒருவகையில் இருவரும் தங்களின் கதையைத்தான் தேடிக்கொண்டிருக்கிறோம் என்ற உண்மையையும் அப்போதுதான் உணர்கிறார்கள். சிறையில் அம்மாவைப் பாலியல் வன்முறைகுள்ளாக்கியவன் தன் சகோதரன் என்ற உண்மையைத் தொடர்ந்து, அவனும் தற்போது கனடாவில் வேறுபெயரில் வசித்துவருவதை கண்டு அவனிடம் இரண்டு கவர்களையும் ஒப்படைக்கிறார்கள்.
கிரேக்கத் தொன்மக் கதையைத் தழுவிய ‘இடிபஸ் ரெக்ஸ்’ நாடகத்தின் மையச்சரடை ஒத்திருக்கும் இப்படமும் ஒரு நாடகத்திலிருந்து தழுவப்பட்டது என்பது ஒரு தற்செயல் என்று என்னால் உறுதிசெய்ய முடியவில்லை. வாஜ்டி மொவாட் (Wajdi Mouawad) என்பவரால் எழுதப்பட்ட Scorched எனும் ப்ரஞ்ச் நாடகம்தான் Denis Villeneuve என்பவரால் திரைக்கதையாக்கப்பட்டு இயக்கப் பட்டு ’இன்செண்டிஸ்’ என்ற படமாக வெளிவந்துள்ளதாகத் தெரிகிறது. இரண்டு கதைகளுக்கும் உள்ள வேறுபாடு, இடிபஸ் வேந்தனில், தந்தையால் கொலைசெய்யப்பட அனுப்பப்பட்ட மகன் ராஜாவாகி பக்கத்து நாட்டைக் கைப்பற்றித் தந்தையைக் கொன்று, தாயைத் தாரமாக்குகிறான். இன்செண்டிஸில் தாயால் அநாதை இல்லத்திற்கு அனுப்பப் பட்ட மகன், யாரென்று தெரியாமலேயே தாயை வன்புணர்ச்சிக்குள்ளாக்குகிறான். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, இரண்டு கதைகளுமே நமக்கு முகச்சுளிப்பையோ, அசூயை உணர்வையோ உருவாக்குவதில்லை. வாய்மொழி மரபில் புழங்கிய இடிபஸ் கதையை ‘சோபாக்ளிஸ்’ எனும் கிரேக்க நாடகாசிரியன் நாடகமாக்கிய காலம் கி.மு. 5ஆம் நூற்றாண்டு. ப்ரஞ்ச் நாடகாசிரியன் நாடகமாக்கியது 2007. அதிலும் ஒரு காட்சி ஊடகத்தில் இத்தகைய கதைகளைக் கையாள்வது எளிதானதல்ல.
மிகுந்த கலை நேர்மையுடனும் பொறுப்புடனும் இயக்குநர் இச்சூழலை எதிர்கொள்கிறார். போர்களும் புகலிட வாழ்க்கைச் சூழல்களும் மனித சமூகத்தின் அறவியல் சார்ந்த ஒழுக்க மதிப்பீடுகளைச் சூறையாடுகின்றபோது வெறும் பார்வையாளர்களாய் மௌனித்திருப்பதைத் தவிர நாம் செய்வதற்கு என்ன இருக்கிறது? சாதாரண மனிதர்கள் அசாதாரண சூழல்களில் சிக்குண்டு மீள்வதை/ தவிப்பதை பேசுவதுதானே கலை?
இன்னொரு விசயமும் இந்தப்படத்தைப் பார்க்கும் போது எனக்கு நினைவில் ஓடியது. ‘இடிபஸ்’ ஐரோப்பாவில் நாடகமாக்கப்பட்டபோது, அதில் இடிபஸ் வேந்தனாக நடித்த லாரன்ஸ் ஒலிவியர் என்ற நடிகருக்கு, தான் திருமணம் செய்திருப்பது தன் தாய் என்பது தெரியவரும்போது, அதை ஒரு நடிகனாக எப்படி வெளிப்படுத்துவது என்பது பெரும் சவாலாக முன்நின்றது. உலகில் அதுவரை அப்படி ஒரு சூழல் எந்த மனிதனுக்கும் ஏற்பட்டதில்லையல்லவா? அது போலவே ‘இன்சென்டிஸ்’, இரண்டு சவாலான இடங்கள் வருகின்றன. ஒன்று அந்தத் தாய், பொது நீச்சல் குளத்தில் குளித்துவிட்டு கரையேற வரும்போது, பின்புறம் தெரியும் விதத்தில் ஒரு ஆண் இன்னொருவனோடு பேசிக்கொண்டிருக்கிறான். அவனுடைய காலைப் பார்த்தாகவேண்டிய அருகாமை உருவாகிறது. அவனுடைய குதிகாலில் தன் பாட்டி அடையாளமிட்ட மூன்று புள்ளிகள். தொலைந்து போய்விட்ட தன்மகன் கிடைத்துவிட்டான் என்ற மகிழ்ச்சி கலந்த பதட்டத்துடன் அவன் முகத்தைப் பார்க்கிறாள். அது சிறைச்சாலையில் தன்னை… இரட்டைக் குழந்தைகளுக்கு தாயாக்கின அவன். அப்படியே பேச்சுமூச்சற்று உறைந்து போய்விடுகிறாள். அதோடு அவள் புலன்கள் முடங்கிப்போகின்றன.
இரண்டாவது இடம், தந்தையையும் சகோதரனையும் தேடும் இரட்டையர்களுக்கு நேர்வது. சகோதரனைப் பற்றிய தகவல்களைப் பின்தொடர்ந்து செல்கையில் ஒரு இடத்தில் சகோதரனுக்கு முழுவிபரமும் தெரிய வருகிறது. சகோதரியின் அருகாமையில் அமர்ந்திருக்கிறான். அவன் சகோதரியிடம் சொல்கிறான். ’நாம் நினைப்பதுபோல் ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் இரண்டு அல்ல’ என்கிறான். சகோதரிக்கு ஒன்றும் புரிவதில்லை. திரும்பவும் ’ ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் இரண்டு அல்ல’ என்கிறபோது சகோதரிக்குப் புரிந்துவிடுகிறது. நாம் தேடிவந்த தந்தையும் சகோதரனும் வேறு வேறு நபர்கள் அல்லவென்று. அவள் தன் அதிர்ச்சியை, ஒரு விக்கல்போன்ற ஒலியால் அந்த வெளிப்படுத்துகிறாள். மிகவும் அருமையான இடம்.
2010ன் சிறந்த அந்நிய மொழித்திரைப்படத்திற்காக ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது இப்படம். சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குநர், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, ஒட்டுமொத்த ஒலியமைப்பு மற்றும் ஒலித்தொகுப்பு, சிறந்த நடிகை ஆகிய 8 பிரிவுகளில் கனடாவின் ‘சினிமா மற்றும் டெலிவிஷன் அகாதமி’ வழங்கும் ஜெனி விருதுகளை அள்ளிக்கொண்ட படம். தொழில்நுட்ப நேர்த்திமிகுந்த்தாக இப்படம் இருந்தாலும், இப்படத்தின் கதையும் திரைக்கதையும் அதையெல்லாம் பொருட்டாகவிடாமல் செய்கின்றன. இன்னொருவிதத்தில் சொல்வதானால், பிற அம்சங்கள் அனைத்தும் கதையின் ஆன்மாவோடு இணைந்து பயணப்படுகின்றன.
– இரா.பிரபாகர்