இசைஞானி ரசிகர்களுக்கு நேற்று ஒரு பொன்வசந்தமான நாள் என்றுதான் சொல்லவேண்டும். ராஜாவிடம் நட்பும், உரிமையும் கொண்ட பாரதிராஜா, பாலா போன்ற இயக்குனர்கள் செய்யத்தவறிய அரிய காரியத்தை, தனது ‘நீ தானே என் பொன் வசந்தம்’ ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியை ஒட்டி, இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனன் செய்துமுடித்து, பெரும் புண்ணியம் கட்டிக்கொண்டார்.
இசைஞானியின் தேமதுரத்தமிழிசையை வெளிநாட்டு ஆர்கெஸ்ட்ராவினரைக்கொண்டு வாசிக்கவைத்து, ராஜாவின் ரசிகர்களுக்கு என்றும் மறக்கமுடியாத ஒரு இசைவிருந்தை அளித்தார்.
மாலை 6 மணிக்கே இளைஞர், இளைஞிகள் பட்டாளங்களால், நேரு ஸ்டேடியம் நிரம்பி வழிந்துகொண்டிருக்க, 7 மணிக்கு மேல் ஹங்கேரியிலிருந்து வந்திருந்த புதபெஸ்ட் ஆர்கெஸ்ட்ரா, ராஜாவின் ’எந்தப்பூவிலும் வாசம் உண்டு’ தென்பாண்டிச்சீமையிலே’ ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ போன்ற பாடல்களை, வெறுமனே இசைக்கருவிகளால் வாசிக்க ஆரம்பித்தபோதே உடலெங்கும் புல்லரித்தது நிஜம்.
ராஜாவின் இசையை ரசிக்கத்தெரிந்தவர்களெல்லாம், ஏறத்தாழ பாதி இசையமைப்பாளர்கள் தானோ என்று நினைக்குமளவுக்கு ஹங்கேரி குழுவினர் ஒரு பாடலின் துவக்கத்தை வாசிக்க ஆரம்பித்த சில நொடிகளிலேயே அப்பாடலை இனங்கண்டு, விசில்களாலும், கைதட்டல்களாலும் நேரு அரங்கத்தை அதிர வைத்து குதுகலமடைந்தனர்.
நிகழ்ச்சி துவங்கி சில நிமிடங்கள் வரை, ஏற்கனவே ரெகார்ட் செய்யப்பட்ட சில பேட்டிகள் ஓடிக்கொண்டிருக்க, சரியாய் 8 மணி அளவில் மேடைக்கு வந்த ராஜா, அங்கே திரண்டிருந்த ஆரவாரமான கூட்டத்தைப்பார்த்து சற்று மிரண்டுதான் போனார்.
ஸ்லோகத்துடன், ‘ஜனனி ஜனனி’ பாடலை ராஜா பாடத்துவங்கும்போது, சில விசில் சப்தங்கள் தொடர்ந்து இம்சையைக்கொடுத்துக்கொண்டிருக்க, பாட்டை இடையில் நிறுத்திய ராஜா,’’ நான் மேடையில இருந்து பாடனும்னு நினைச்சா. இனி யாரும் விசில் அடிக்கக்கூடாது. அப்பிடி மீறி அடிச்சா நான் பாட்டுக்கு போய்க்கிட்டே இருப்பேன்’’ என்று அன்பாய் மிரட்ட, அரங்கில் தியான அமைதி.
இதற்கு முந்தைய படங்களில் ஹாரிஸ் ஜெயராஜ், ரகுமான் போன்றவர்களுடன் வேலை செய்திருந்தாலும், கவுதம் மனதளவில் ராஜாவின் தீவிர ரசிகர் என்பதை நிகழ்ச்சி முழுக்க, அவரது நடவடிக்கைகளில் தரிசிக்க முடிந்தது.
பாரதிராஜா, பாலசந்தர், பாலுமகேந்திரா உட்பட்ட ராஜாவுடன் பணியாற்றிய பல இயக்குனர்களை நிகழ்ச்சிக்கு வரவழைத்து, அவர்களது வருகையை தனது படத்தின் விளம்பரத்துக்கு பயன்படுத்தாமல், பாடப்படவேண்டிய, ராஜாவின் புகழ்பாடுவதற்கு மட்டுமே பயன்படுத்திக்கொண்டதே அதற்கு அத்தாட்சி.
பேசிய இயக்குனர்கள் அனைவருமே ராஜா, தமிழனின் மூன்று தலைமுறைகளை தனது இசையால் தாலாட்டி, இன்றும் இசையின் ஒரே ராஜாவாக திகழ்வதை, நெகிழ்ச்சியாக குறிப்பிட்டனர்.
மொத்தத்தில், நீ தானே என் பொன் வசந்தம்’ ஆடியோ வெளியீட்டுவிழா, ராஜா ரசிகர்களுக்கு வெறும் நிகழ்ச்சி அல்ல,மனதை விட்டு என்றும் நீங்காத நெகிழ்ச்சி.
[ எச்சரிக்கை. இந்த நெகிழ்ச்சி தொடர்பாக, இன்னும் ஒரு ஏழெட்டு செய்திகள் தொடரும் ]