ராஜாவின் பொன் வசந்தம்

முன் குறிப்பு: இசை ஞானியின் இசைக் கோர்வையை விமர்சனம் செய்ய எனக்கிருக்கும் இசைத்தகுதி பூஜ்ஜியம். எனவே இது இப்படத்தின் இசையைப் பற்றிய இசை-விமர்சகனின் இசை விமர்சனம் அல்ல. ஒரு சாதாரண சினிமா-இசை ரசிகனின் ரசனைக் குறிப்பு. அவ்வளவே.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்குள்ளான நீதானே என் பொன் வசந்தம் பாடல்கள் செப். 1 அன்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வெளியிடப்பட்டன. ராஜாவின் பாடல்களை ஹங்கேரியிலிருந்து வந்த இசைக் குழுவே பாடிக் காட்டினர். பழம்பெரும் இயக்குனர்கள் ராஜாவுடனான தங்களது படங்களை நினைவு கூர்ந்தனர்.

பழம்பெரும் இயக்குனர்களுடன் 70களில் தன் இசைப் பயணத்தை துவக்கியவர் இளையராஜா. இன்று, 2012 ல்(40 வருடங்கள் கழித்து) இளசுகளின் இயக்குனர் கௌதமுடன் கை கோர்த்துள்ளார். இது அவருடைய குன்றாத இசை ஞானத்தினாலேயே நிகழ்ந்திருக்கிறது. 40 வருடங்களுக்குப் பின்னேயுள்ள புதிய தலைமுறையின் பாப்கார்ன் இசை டேஸ்ட்டிற்கு அவர் தீனி போட்டிருக்கிறாரா? அவர்களை தனது இசையால் வளைத்திருக்கிறாரா?

நீதானே என் பொன் வசந்தத்தில் இளையராஜா பாடல்களுக்காக கொஞ்சம் புதிதாகச் செய்ய மெனக்கெட்டிருக்கிறார். கொஞ்சம் தான். முற்றிலும் இல்லை. ஏனென்றால் இப்பாடல்கள் 1992ல் ரஹ்மான் செய்தது போல ஒரு புது ட்ரெண்டை உருவாக்கவில்லை. அதே பழைய ராஜாவின் ட்ரெண்ட் தான். இசைக்கருவிகளில் கொஞ்சமாக சில புதிய கருவிகளை முயன்றிருக்கிறார்.

இளையராஜாவின் ஆயிரக்கணக்கான பாடல்களில் நீங்கள் கேட்டிருக்கும் விஷயங்கள் பெரும்பாலும் இதிலும் உண்டு.
ட்யூன்கள் வழக்கம் போல முணுமுணுக்க வைக்கும் அவருடைய ஸ்பெஷல் பிராண்ட் மெலடி மெட்டுக்கள்.
இப்படத்தில் நீண்ட நாட்களுக்குப் பின் ஒவ்வொரு பாடலிலும் அவரது சிரத்தை மிகுந்த கம்போசிங் தெரிகிறது (இதற்கான சரியான டெக்னிக்கல் வார்த்தை எனக்குத் தெரியவில்லை..ஸாரி..)

இரண்டாவது தலைமுறைக்கும் கூட மெலடிகளை சர்வசாதாரணமாக அள்ளித் தரும் அவருடைய திறன் அசாத்தியமானது.
நான்கு முறை கேட்ட பின்னரே பாடல்களுடன் பரிச்சயம் கூடி வருகிறது. என்றாலும் அவருடைய ஹிட்டான பல படங்களின் பாடல்கள் இந்தத் தன்மையை கொண்டிருந்திருக்கின்றன. படத்தின் கதை அழுத்தமுடையதாக இருக்கும் பட்சத்தில் பாடல்களின் அர்த்தம் மேலும் வலுப்பட்டு மேலும் ஹிட்டாகலாம். மணிரத்னத்தின் இதயத்தைத் திருடாதே பாடல்கள் இதே போல வெளியான தருணத்தில் பெரிதாக கவன ஈர்ப்பு அடையாமல் படம் வெளியானபின் படு ஹிட்டாக மாறின. கௌதம் மேனனின் பங்கு இந்தப் படத்தில் எப்படியிருக்கும் ? பார்க்கலாம்.

பாடல்களின் இசையின் மற்றொரு சிறப்பு அது அவருடைய வழக்கமான ஆர்க்கெஸ்ட்ரா டீமாக அல்லாமல் ஹங்கேரியிலுள்ள ஆர்க்கெஸ்ட்ராவைக் கொண்டு அரேஞ்ச் செய்திருக்கிறார்கள். இசை அமைப்பும் ரெக்கார்டிங்கும் துல்லிதம்.

படத்தின் அத்தனை பாடல்களையும் நா.முத்துக்குமார் எழுதியுள்ளார். ஆஹா அசத்திவிட்டார் என்று பாடல் வரிகளுக்காகவே எந்தப் பாடலையாவது திரும்ப கேட்க விரும்பும் வாய்ப்பு இப்படத்தின் பாடல்களில் இல்லை. நா.முத்துக்குமார் இன்னும் கூடுதலாய் முயற்சித்திருக்க வேண்டும்.

1.சாய்ந்து சாய்ந்து. யுவன், ரம்யா NSK பாடியுள்ள டூயட். கதையின் போக்கில் சீரியசாக ஏதோ ஒரு விஷயத்தைத் தொட்டுச் செல்லும் பாடல் போலத் தோன்றுகிறது. ரம்யா மேற்கத்திய பாணியில் தமிழைப் பாடுகிறார். யுவன் பாடலுள் கரைந்து பாடியிருக்கிறார். ஹிட்டாகும் பாடல் இது.

2.காற்றைக் கொஞ்சம். கார்த்திக் பாடியுள்ளார். ஹீரோ தனியாகப் பாடும் பாட்டு போல இருக்கிறது. அறிமுகப்பாடலோ? கார்த்திக் இன்னும் இழைந்து பாடியிருக்க வேண்டும். ஹிட்டாகும்.

3.முதல் முறை. சுனிதி சௌகான் பாடியுள்ள வெஸ்டர்ன் டைப் பாடல். நன்றாகப் பாடியுள்ளார். 2000த்துக்குப் பின்னான ரசிகர்களுக்கும் பிடிக்கும் வாய்ப்பு இந்தப் பாடலுக்கு உண்டு. நீதானே என் பொன் வசந்தம் என்கிற அந்த பழைய பாடலின் அதே வரிகள் வேறு மெட்டில் வருகின்றன. ஆனால் அந்தப் பொன் வசந்தம் அளவு இந்தப் பொன் வசந்தம் பசுமரத்தாணி போல நெஞ்சில் பதியவில்லை. எனினும் பாடல் ஹிட்டாகும்.

4வானம் மெல்ல. இளையராஜா, பெலி ஷென்டே பாடியுள்ள டூயட். ராஜா மெலடிக்கேற்ற வகையில் தனது கனமான குரலை மெல்லிதாக்கிப் பாடியுள்ளார். ஹிட் ரகம்(ராஜா ரசிகர்களுக்கு).

5.புடிக்கலை மாமு. சூரஜ் ஜகன், கார்த்திக் பாடியுள்ள காலேஜ் கலக்கல் பாடல். இத்துடன் இன்னொரு தனிப்பாடலோ என்று நினைக்கும்படி வீதி பத்தாதே.. என்று ஆரம்பிக்கும் டப்பாங்குத்து பாடல் நவீன வடிவில் வருகிறது. ஹிட்டாகும் வாய்ப்பு இருக்கிறது.

6.என்னோடு வா வா. கார்த்திக் பாடியுள்ள மெலடி. ஏற்கனவே கேட்டிருக்கும் வகை. ஓகே ரகம்.

7.பெண்கள் என்றால். காதலில் தோல்வி ஏற்படும் போது பாடுவதாக யுவன் பாடியுள்ள வெஸ்டர்ன் டைப் சோகப் பாடல். ஏற்கனவே கேட்ட பாடல் வகை.ஓகே.

8.சற்று முன்பு. ரம்யா NSK பாடியுள்ள மாடர்ன் சோகப் பாடல். ஓகே ரகம்.

இவை போக புல்லாங்குழலில் இழையோடும் ஒரு தீம் மியூசிக்கும் உண்டு.

தமிழ்நாட்டு இசை ரசிகர்கள் உலகளாவியத்தின் தாக்கத்தால் கடந்த 15 ஆண்டுகளில் உலகின் அனைத்து இசை வடிவங்களையும் கேட்கும் பாக்கியம் பெற்றிருக்கிறார்கள். தெரிந்தோ, தெரியாமலோ, காப்பியாகவோ, இன்ஸ்பிரேஷனாகவோ தற்போதைய இளம் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்கள் அனைவரும் உலகில் ஏதாவதொரு நாட்டின் புதுமையான இசையின் புதிய ஒலிகளை தமிழ் ரசிகர்களுக்கு நன்றாகவே அறிமுகம் செய்துவிட்டார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் தென்னமெரிக்க இசையை தமிழுக்கு கலந்து தந்ததைத் தொடர்ந்து இது நிகழ்ந்தது.

பலதரப்பட்ட இத்தகைய இசையொலிகளுக்குப் பழக்கப்பட்டுவிட்ட புதிய தலைமுறைத் தமிழ் ரசிகர்களை நீதானே என் பொன் வசந்தம் பாடல்கள் கவருமா என்பதில் சந்தேகம் உண்டு. இளையராஜாவின் இசை புதிய தலைமுறை ரசிகர்களை கட்டிப் போடும் வாய்ப்பு குறைவு தான்.

இந்த ஆல்பம் பற்றி எல்லோருக்கும் எழும் முக்கியமான கேள்வி இது.
ராஜாவின் நீ.எ.பொ.வ பாடல்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடு செய்திருக்கிறதா? இல்லையா?
எனக்குப் பட்ட பதில்…
ஆம். ராஜாவின் ரசிகர்களுக்கு. ஓரளவு தான். மற்றவர்களுக்கு. இல்லை. இன்றைய இளைய தலைமுறைக்கு.

இணையத்தில் பாடல்களைக் கேட்க இங்கே அல்லது இங்கே க்ளிக்குங்கள்.

இளையராஜா மீண்டும் ஒரு 20 வயது வாலிபனாக உருமாறி இசையுலகை மீண்டும் ஆட்டிப்படைக்கும் நாள் இன்று இல்லை. வேறு ஒரு நாள் அது நிகழலாம் என்கிற கனவு எனக்கு இன்னும் இருக்கிறது.

–மருதுபாண்டி.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.