யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ஆதிபகவனுடன் வந்திருக்கும் இன்னொரு படம். மொத்தம் நான்கு பாடல்கள். இரண்டு பாடல்கள் அருமை. மற்ற இரண்டும் கூட குறைவில்லை.
யுவனின் இசைக் கோர்வை இப்படத்திலும் மெருகேறியிருக்கிறது.
1. மெல்ல சிரித்தால் – யுவன். பாடல் – யுகபாரதி.
யுவன் பாடியுள்ள படத்தின் தலைப்பு வரும்படியான பாடல். எலெக்ட்ரானிக் இசைக் கோர்வை முதல் தடவை கேட்கும்போதே நிச்சயமான ஹிட் என்று அறிவிக்கிறது. யுவனின் குரலும் கொஞ்சம் மாற்றப்பட்டது போல அடையாளம் தெரியாமல் பாடியிருக்கிறார். யுகபாரதியின் ‘ஆதலால் காதல் செய்வீர்’ காரண வரிகள் ஓகே. பட் வரிகளில் பட்டையைக் கிளப்பியிருக்கக்கூடிய அருமையான சந்தர்ப்பத்தை தவறவிட்டிருக்கிறார் யுகபாரதி.
2. அலைபாயும் நெஞ்சிலே – உதித் நாராயண். பாடல் – யுகபாரதி.
உதித் நாராயண் குரலில் வந்துள்ள மெலடி வழக்கம் போல அவருடைய மேஜிக்கான குரல் மற்றும் யுவனின் நல்ல இசையமைப்பில் ஹிட் லிஸ்டில் வருகிறது. இப்பாடலிலும் யுகபாரதி ஓகே.
3. தப்புத் தண்டா – ஜாவேத் அலி, பவதாரிணி. பாடல் – வாலி.
ஆரம்ப காலத்தில் நல்ல கவிஞராயிருந்து பிற்காலத்தில் இளையராஜாவின் பெரும்பாலான பாடல்களை ‘மெட்டுக்கேத்த’ பாட்டுப் போட்டு ஒப்பேற்றி இசையையும் அர்த்தமில்லாமல் செய்தவரான வாலி (நீண்ட நாட்களுக்குப் பின்?) இந்த டூயட்டை எழுதியிருக்கிறார். பார்வை – வேர்வை, இடை – நூலகம் என்று காதலன் காதலி அவருடைய வழக்கம் போல் பாடுகிறார்கள். யுவனின் இசை என்னமோ நன்றாகத்தானிருக்கிறது.
4.பூவும் பூவும் – விஜய் யேசுதாஸ், வினைதா. பாடல் – ப்ரான்சிஸ் க்ருபா.
விஜய் யேசுதாஸும், வினைதாவும் கொஞ்சம் கஷ்டப்பட்டு பாடியிருக்கிறார்கள். நல்ல மெலடியான டூயட். எல்லோருக்கும் பிடிக்குமா? தெரியாது.
மொத்தத்தில் படத்தின் தலைப்பையும், நான்கு பாடல்களையும் வைத்துப் பார்த்தால் படம் ஒரு இளைய தலைமுறைக் காதல் கதை என்று தோன்றுகிறது. படம் ஹிட்டானால் பாடல்கள் எல்லாம் மீண்டும் ஹிட்டாகும்.
‘மெல்லச் சிரித்தால்’ ஏற்கனவே டாப் 10 சார்ட்டில் மேலே ஏற ஆரம்பித்துவிட்டது.
–மருதுபாண்டி.