’தென்மேற்குப் பருவக்காற்று’ தேசிய விருது வாங்கியதிலிருந்தே மண்டையைச்சுற்றி ஒரு மாபெரும் ஒளிவட்டத்துடன் அலையும் சீனுராமசாமியாரின் ‘நீர்ப்பறவை’ ஆடியோ,ட்ரெயிலர் ரிலீஸுக்கான பிரஸ்மீட் நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.
நிகழ்ச்சி துவங்குவதற்கு சற்று நேரம் முன்பிலிருந்தே, வடகிழக்குப் பருவக்காற்று மாதிரியே சுற்றித்திரிந்த ஒரு பேரிளம்பெண்ணை பிரஸ் மக்கள் அனைவரும் பேராவல் கொண்டு பார்த்துக்கொண்டிருந்தார்கள். , ‘இதுல வெக்கப்பட என்ன இருக்கு?’ என்று ’இறங்கி’ விசாரித்தபோது, அது ‘நீர்ப்பறவை’ நாயகியின் தாய்ப்பறவை என்பது தெரிந்தது.
‘நீங்க சுனைனாவோட அம்மாவா, பாத்தா அவங்க அக்கா மாதிரியே இருக்கீங்க’ என்ற பழைய துருப்பிடித்த ஆயுதததை ஒரு மூத்த நிருபர் உபயோகிக்க ஆரம்பிக்க, நல்லவேளையாக அவரை முன் இருக்கைக்கு வரவைக்க அழைப்பு வந்தது.
தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் உட்பட அனைவரைப்பற்றியும் கடலளாவ புகழ்ந்த சீனு ராமசாமியார், ஏனோ வஜனகர்த்தா ஜெயமோகன் பெயரை மட்டும் சொல்லாமல் அமர்ந்துவிட்டார்.
பின்னர் நடிகர் ப்ளாக் பாண்டி நல்ல காமெடி உணர்வுடன் பேசிக்கொண்டிருந்தபோது, அதைவிட காமெடியாக, திடீரென்று ஜெயமோகன் ஞாபகம் வந்து ‘சாரி ஜெமோ பேரை சொல்ல மறந்துட்டேன். இந்தப்படத்துக்கு ‘அவரும்’ என்கூட சேர்ந்து வசனம் எழுதினார் என்று ஒற்றை வரியில் அமர்ந்தார். [எவ்வளவோ தடுத்தும் கேட்காம ’கடல்’ படத்துக்கும் ஜெமோ வசனம் எழுதப்போனதால, ரெண்டுபேரும் கட்டி உருண்ட கதை அது தனிக்கதை ]
பாலுமகேந்திராவின் உதவியாளர்னா கதாநாயகிகள் மேல கொஞ்சம் கரிசனம் அதிகமா இருந்துதான ஆகனும்? பட நாயகி சுனைனாவைப் பற்றி கன்னாபின்னவென்று புகழ்ந்த மீனு ராமசாமியார்,’’ ரேவதி, ஷோபாம்மா, அர்ச்சனாம்மாவுக்கு அப்புறமா சுனைனா சின்னம்மாவுக்கு தமிழ்சினிமாவுல தவிர்க்க முடியாத இடம் இருக்கு’’ என்று ஒரு தமிழ்சினிமாவின் நிலப்பரப்பில் ஒரு எரநூறு ஏக்கராவை எழுதிவைத்துவிட்டுத்தான் அமர்ந்தார்.