நாளைய இயக்குனர் சீசன் – 3ல் முதல் பரிசு பெற்ற குறும்படம்.
ஓடும் நேரம் சுமார் 12 நிமிடங்கள்.
கலைஞர் டி.வியில் நடந்த நிகழ்ச்சியில் கமல், பாலசந்தர், வெற்றி மாறன், பிரபு சாலமன், விக்ரமன் போன்ற பெரும் கலைஞர்களின் பாராட்டைப் பெற்ற படம். இவ்வளவு பாராட்டுக்களை பெறுவதற்கு படம் உண்மையிலேயே தகுதியான
படமே. இது ஒரு உண்மைச் சம்பவத்திலிருந்து உருவாக்கப்பட்டது என்று படத் துவக்கத்தில் டைட்டில் காட்டப்படுகிறது.
கதையின் களம் வித்தியாசமானது. அழுத்தமானது. ராம் சமூகத்தில் முக்கிய பிரமுகர். சீர்திருத்தவாதி மற்றும் பேச்சாளர். அவருடைய வயதான தாய் அவருடன் வசித்து வருகிறார். ராமின் மகள் இரண்டாவது பிரசவத்துக்காக வீட்டுக்கு வருகின்ற நிலையில் தான் பேரிடியாக அந்த விஷயம் இறங்குகிறது. ராமின் வயதான அம்மாவின் வயிற்றில் ஒரு சிசு வளர்கிறது.(ராமின் அப்பா வயதானாலும் இளமை பொங்க(!) வாழ்ந்து சில மாதங்களுக்கு முன்பு தான் இறந்து போனார்).
பேத்திக்கு கல்யாணமாகி குழந்தை பிறக்கும் நேரத்தில் பாட்டியும் இப்படி கர்ப்பிணியாக நிற்பது ராமுக்கும் அவர் மனைவிக்கும் பெரும் அசிங்கமாகப் படுகிறது. வெளியில் பக்கத்து வீட்டில் கூட யாரிடமும் சொல்லாமல் அம்மாவை அறையில் ஒதுக்கி வைக்கிறார் ராம்.
வயிற்றைத் தள்ளிக்கொண்டு நிற்கும் தன் தாயை என்ன செய்வது என்று தவிக்கும் ராம் என்னென்னவோ யோசனைகள் முயன்று முடிவில் அந்தப் பாவகரமான முடிவை எடுக்கிறார். என்ன செய்தார் ? பாருங்கள் படத்தில்.
நித்திலன் எழுதி இயக்கியுள்ளார். கதை, திரைக்கதை அமைப்பில் மிகக் கவனமாக இருந்திருக்கிறார். அவருக்கு ஒரு சபாஷ். (உங்களுக்கு இந்நேரத்திற்குள் நிச்சயமாக சினிமா இயக்கும் வாய்ப்பு வந்திருக்க வேண்டும்). ஒரு இடத்தில் கூட பிசிறின்றி காட்சிகள் நகர்கின்றன. நடிகர்களை நடிக்க வைத்ததில் பெரும் பங்கு இயக்குநருக்கே உண்டு.
முக்கியமாக ராமின் வயதான தாயாக நடித்த சாந்தா பாட்டியம்மாள். சரியான தேர்வு. யதார்த்தமான நடிப்பும் கூட. ‘நான் திரும்பி வந்தா நீ இருப்பியாப்பா’ என்று கேட்கும் போது மனதைக் கலங்கடித்து விடுகிறார்.
அவர் மட்டுமல்ல மகன் ராமாக வருபவரும் நன்றாகச் செய்திருக்கிறார். குறிப்பாக காரில் சாப்பிட்டுவிட்டு கைகழுவிக் கொண்டிருக்கும் அம்மாவைப் பார்த்தபடி போனில் மனைவியிடம் உரையாடும் அந்த இடம்.
ராமின், மனைவி, மகன் மற்றும் மகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் யதார்த்தமாக காட்டப்பட்டிருக்க வேண்டும். டப்பிங்கோ எதுவோ குறைகிறது.
குறும்படம் என்பதால் ஒரு சின்ன ஷாட்டில் மகள், பேத்தி போன்ற விஷயங்களை விளக்கிவிடுவது பல நேரங்களில் போதாமல் போய்விடுகிறது. கூடுதலாக சிறு சிறு ஷாட்கள் வைக்கப் பட்டிருக்கலாம்.
இவ்வளவு அழுத்தமான கதை 12 நிமிடங்கள் மட்டுமே ஓடியிருக்க வேண்டியதில்லை. ஆனாலும் படம் செய்யும் தாக்கத்திற்கு குறைவில்லை.
இறுதியில் ராமிடம் வந்து பணத்தைக் கொடுத்துச் செல்லும் காட்சியில் இன்னும் தெளிவு இருந்திருக்கலாம்.
ஒளிப்பதிவாளர் ஷங்கர் வெங்கட் நித்திலனின் கதைப் போக்கிற்கேற்றபடி உறுத்தாமல் கச்சிதமாக ஷாட்களை வைக்கிறார். அநாவசியமான டெக்னிக்கல் கேமரா நகர்த்தல்களை சரியாகத் தவிர்த்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பார்வையாளர்களை முற்றிலும் கலைத்துப்போடும் சோகமான இடங்களில் கூட கவனமாக மெல்லியதாக இசையமைத்து படத்தின் உணர்வுப் பூர்வமான உரையாடலை மேம்படுத்துகிறார்.
இயக்குநர் நித்திலன் பாலுமகேந்திராவின் யதார்த்த சினிமாவின் கோணங்களை பல இடங்களில் நமக்கு நினைவூட்டுகிறார். நிச்சயம் ஒரு நல்ல படம் கொடுப்பார் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
இது போன்ற தரமான குறும் படங்கள் நாளைய தமிழ் சினிமாவின் முழுநீளப் படங்களை முழுதும் ஆக்கிரமிக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை. தயாரிப்பாளர்களும் தைரியமாக புதுமுக இயக்குநர்களுக்கு டெஸ்ட் போல சிறு செலவில் குறும்படங்களை எடுக்க வைத்து இயக்குநர்களின் திறமையை அளவிட்டு பின் தைரியமாக நம்பி படமெடுக்கலாம்.
மன்னாரு, அட்டகத்தி, காதலில் சொதப்புவது எப்படி போன்ற பல படங்களின் இயக்குநர்கள் குறும்பட இயக்குநர்களாயிருந்து திரைக்கு வந்தவர்களே.
புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசத்தை கீழே பாருங்கள். அல்லது யூ ட்யூப்பில் சென்று காணுங்கள்.
–ஷாலினி ப்ரபாகர்.
எழுதி இயக்கியவர் – நித்திலன். உதவி– முரளி, அர்ஜூன், பாஸ்கி.
தயாரிப்பு – சையது முகம்மது.
இசை – ஜஸ்டின் பிரபாகரன்
ஒளிப்பதிவு இயக்குநர் – ஷங்கர் வெங்கட். உதவி – முத்து, குணா.
எடிட்டிங் – ஜோமின் மாத்யூ. உதவி – ரெஜித்.
வி.எப்.எக்ஸ் – சீனிவாசன் , எஸ்.எப்.எக்ஸ் – சந்திரகாந்த்
நடிப்பு – பாண்டியன், சாந்தா பாட்டி, கீர்த்தனா, மகேஸ்வரி, மதுரை மோகன், ப்ரியா, குமார், ராஜி, பாஸ்கி, சுல்பியா.
வெளியீடு – ஆகஸ்ட் 2012.
————————————————————