உறுதியாக தீபாவளி ரிலீஸ், என்று முடிவு செய்யப்பட்ட, ஏ.ஆர். முருகதாஸ், விஜய் கூட்டணியின், ‘துப்பாக்கி’ ஆடியோ இன்று காலை சென்னை,அடையாறு பார்க், ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
விஜய், கே.வி.ஆனந்த், மிஷ்கின் போன்றவர்கள் போலல்லாது ஓரளவு சொந்த சரக்குள்ளவர் என்று கருதப்பட்ட முருகதாஸ், இரு தினங்களுக்கு முன் வெளியிட்ட ’உல்டா போஸ்டர்’ டிசைனிலேயே, ஏகத்துக்கும் எக்ஸ்போஸ் ஆகிவிட்டிருக்க, இன்றைய விழாவில், ‘’இது முழுக்க முழுக்க விஜய் ரசிகர்களுக்கான மசாலா படம். ஒரு டைரக்டரா எங்கிட்ட இருந்து எதுவும் எதிர்பார்த்திராதீங்க’ என்று சொல்லாமல் சொன்னார்.
சரி, விஜயாவது முருகதாசை ஒரு டைரக்டராக விட்டுக்கொடுக்காமல் பேசினாரா என்றால் அதுவும் இல்லை. தன் ‘இயக்குனர்’ ஆசனத்திலிருந்து இறங்கிவந்து என் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிற விதமாகவே முருகதாஸ் இயக்கியிருக்கிறார் என்கிறார் தன் பங்குக்கு.
‘நான் ‘குஷி’ படத்துல நடிச்சப்பவே முருகதாஸ் சாரை தெரியும். சந்திச்சது ‘குஷி’ படத்துலங்குறதுனாலயோ என்னவோ, இவ்வளவு நாளுமே ரெண்டுபேருமே மாத்தி,மாத்தி பிஸியா இருந்தோம். ஒண்ணு மண்ணா சேர்ந்து படம் பண்ண இப்பத்தான் அமைஞ்சது. என்னோட ரசிகர்கள் எங்கிட்ட என்ன எதிர்பார்ப்பாங்களோ, அதை துப்பாக்கி’யில அப்பிடியே படம் புடிச்சிருக்கார் முருகதாஸ்’ என்கிறார் விஜய்.
முருகதாஸ், விஜய் இருவருக்குமே, இவர்களிடமிருந்து, விஜய் ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது எப்படி தெரியும் என்பது நமக்கு சுத்தமாய் விளங்கவில்லை.
‘ஆறு பாட்டு, அஞ்சு ஃபைட்டு, காஜல் அகர்வாலுக்கும் விஜய்க்கும் கிளுகிளுப்பான நாலு சீனு, வெளிநாட்டு போஸ்டர் டிசைன்களை காப்பியடிச்சாவது நல்ல டிசைனு வேணும் என்றெல்லாம் கேட்டு கடிதம் மெயில் அனுப்புவார்களோ?
ஆகமொத்தம் விஜயும், முருகதாஸும், பேசுறதப் பாத்தா,அவரோட ரசிகருங்க தவிர வேற யாரும் தியேட்டர் பக்கம் எட்டிப்பாக்க வேண்டாம்னு சொல்ற மாதிரியே இருக்கே?’ ஒருவேளை அதுவே அவிங்களுக்கு போதுமோ??