சன் டி.வியில் ஆஹா என்ன ருசி என்கிற சமையல் தொடர் நடத்தி வரும் செப் ஜேக்கப் ஞாயிற்றுக்கிழமை மாலையில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வெறும் 38 வயது தான்.
இதில் சோகம் என்னவென்றால் நேற்று(ஞாயிறு) காலை தான் தனி ஒருவராகவே 485 வகையான உணவுகளை தொடர்ந்து சமைத்து புதிய கின்னஸ் சாதனை படைத்தார்.
தனது 14ஆம் வயதில் சமைக்க ஆரம்பித்த ஜேக்கப், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.எஸ்.சி இயற்பியல் பாடம் படித்திருந்தாலும் தனது கேட்டரிங் ஆசையால் கேட்டரிங் பட்டம் பெற்றார்.
கூடிய விரைவிலேயே தான் வேலை செய்த கேட்டரிங் கல்லூரியின் தலைமை புரபசராகவும் பின்னர் கல்லூரியின் முதல்வராகவும் உயர்ந்தார். தற்போது கோயம்புத்தூர் சங்கரா கல்லூரியின் கேட்டரிங் பிரிவின் இயக்குநராக உள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் இவரது சமையல் திறனில் அசந்து போய் ஒரு வாரம் ராஷ்டிரபதி பவனில் நடந்த தனது பிரிவு உபசார விழாவில் விருந்தினர்களுக்கு உணவு சமைத்துப் பரிமாறும்படி கேட்டுக்கொண்டார்.
இதுவரை சமையல் சம்பந்தமாக இரண்டு கின்னஸ் சாதனைகள் புரிந்திருக்கிறார் ஜேக்கப். சென்னையில் ஜேக்கப்ஸ் கிச்சன் என்கிற பெயரில் ஒரு உணவு விடுதி நடத்திவருகிறார்.
சங்ககாலத் தமிழர் உணவு மற்றும் கொங்கு உணவு பற்றி ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். செப்கள் பலரும் நுனிநாக்கில் ஆங்கிலம் பேசி மேற்கத்திய உணவுகளின் பின்னால் செல்லும் காலத்தில் ஜேக்கப் செய்தது தமிழர் உணவுப் பண்பாட்டை நமக்கே அறிமுகப்படுத்தியது முக்கியமானது.
இவ்வளவு இளம் வயதில் சமையல் துறையில் சாதனைகள் பல செய்த ஜேக்கப் மாரடைப்பால் இறந்தது அதிர்ச்சிகரமானது. துரதிர்ஷடமானதும் கூட.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுக்கு ஹலோதமிழ்சினிமா.காம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.