life-of-pi-movie-28nov12

யான் மார்ட்டெல்லின் லைப் ஆப் பை என்கிற புலிட்சர் விருது பெற்ற நாவல் தான் ஆங் லீ(Ang Lee)யின் லைப் ஆப் பை திரைப்படமாக விரிந்திருக்கிறது.

குழந்தைகள் படம் போல தோற்றம் தரும் இந்தப் படம் உண்மையில் பெரியவர்களையும் உறைய வைக்கும் படமே.

பை என்கிற பிஸ்ஸைன் படேல் என்கிற பாண்டிச்சேரியைச் சார்ந்த இளைஞனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களே லைப் ஆப் பை.
பையினுடைய அப்பா பாண்டிச்சேரியில் ஒரு சர்க்கஸ் கம்பெனியின் முதலாளி. பைக்கு விலங்குகளின் உளவியல் பற்றி அவர் கற்றுக் கொடுக்கிறார்.

அவன் வளர்ந்து பெரியவனாக மாறும் போது அவனது பெற்றோர்கள் சர்க்கஸ் கம்பெனியை விற்றுவிட்டு தங்களது சில மிருகங்களுடன் ஜப்பானைச் சேர்ந்த ஒரு சிறு கப்பலில் கனடாவை நோக்கிப் பயணிக்கிறார்கள்.

வழியில் கடலில் பெரும் புயலில் சிக்கி அந்தச் சிறு கப்பல் கவிழ்ந்து விட அதிலுள்ள எல்லோரும் மாண்டுவிடுகின்றனர்.

ஆனால் பை மட்டும் 227 (கணித எண் ‘பை’யின் மதிப்பு 22/7) நாட்கள் கழித்து ஒரு சிறிய படகில் மெக்சிகோ நாட்டின் கடலோரம் கரையொதுங்குகிறான்.

அந்தக் கப்பல் ஏன் கவிழ்ந்தது என்பது பற்றி ஆராயும் இருவர் அதில் தப்பிப் பிழைத்த ஒரே நபரான பையிடம் வந்து அதுபற்றி விசாரணை செய்கின்றனர்.

அப்போது பை சொல்வது ஒரு கதை. அதில் பையும், ஒரு கொடிய சிறுத்தையும், ஒரு காயமடைந்த வரிக்குதிரையும் மற்றும் ஒரு குரங்கும் கவிழ்ந்த கப்பலில் இருந்து தப்பிப் பிழைத்து ஒரு படகில் ஏறிக் கொள்கின்றன.
அவற்றிற்கிடையே யார் உயிர் வாழ்வது என்கிற போராட்டம் நடக்கிறது. சிறுத்தை குரங்கையும், வரிக்குதிரையையும் கொன்று தின்று விடுகிறது. அப்போது தான் அங்கே படகின் அடியில் ரிச்சர்ட் பார்க்கர் என்கிற பெயருடைய வங்காளப் புலி ஒன்று கவிழ்ந்த கப்பலில் இருந்து தப்பித்து பதுங்கி இருப்பது தெரியவருகிறது.

ரிச்சர்ட் பார்க்கர் சிறுத்தையைக் கொன்று தின்றுவிடுகிறது. இப்போது படகில் எஞ்சியிருப்பது பையும், ரிச்சர்ட் பார்க்கர் என்ற அந்தப் புலியும் மட்டுமே.
இப்போது பையையும் கொன்று விட்டால் புலி தப்புவதும் கடினம். எனவே இந்த கரையே தெரியாத கடலில் உயிர் தப்பிக் கரையேறும் வரை ஒருவரையொருவர் கொல்லாமல் பையும், புலியும் படகிலேயே வாழப் பழகுகின்றனர்.
இறுதியில் 227 நாட்களுக்குப் பின் படகு மெக்சிகோவில் கரையொதுங்கியதும் புலி குதித்தோடிச் சென்று காட்டுக்குள் மறைந்து விடுகிறது.

பை சொல்லும் இந்தக் கதையை நம்ப அந்த அதிகாரிகள் மறுத்துவிடுகின்றனர். உடனே பை அதே நிகழ்வைக் கதையாக திரும்பவும் மனிதர்களை வைத்துச் சொல்கிறான். அதில் படகில் பை, அவனுடைய அம்மா, ஒரு கால் ஊனமுற்ற மாலுமி மற்றும் கப்பலின் சமையல்காரன் போன்றவர்கள் தப்பிப் பிழைக்க ஏறிக் கொள்கின்றனர்.

மிருகங்களின் கதையில் நடந்த நிகழ்வுகளை விட மிக மோசமான நிகழ்வுகள் மனிதர்கள் கதையில் நடக்கிறது. இறுதியில் பை தப்பிப் பிழைக்கிறான். இரண்டு வித கதைகளையும் சொன்னதும் பை அந்த அதிகாரிகளிடம் எந்தக் கதையை அவர்கள் நம்ப விரும்புகிறார்கள் என்று கேட்கிறான்.

அவர்கள் மிருகங்கள் கதையே இதில் உண்மையிலேயே நடந்தது என்று ஏற்றுக் கொள்வதாகச் சொல்லிவிட்டுச் சென்று விடுகிறார்கள்.

இப்படிப் பட்ட ஒரு மேஜிக்கலான குழந்தைகள் கதையை இயக்குனர் ஆங் லீ அற்புதமாக 3D அனிமேஷனில் எடுத்திருக்கிறார். இவர் தான் ‘க்ரௌச்சிங் டைகர் அன்ட் ஹிட்டன் ட்ராகன்’ படத்தையும் இயக்கியவர்.ஜேம்ஸ் கேமரானின் அவதார் படத்துடன் ஒப்பிடத்தக்க அளவு சிறப்பானதாக இப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக விமர்சகர்கள் புகழ்கின்றனர்.

பையின் வாழ்க்கையைப் பாருங்கள் ஒருமுறை.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.