balas-paradesi-audio-review

முன் குறிப்பு; நண்பர்களே, இந்த ஆடியோ விமர்சனம், பொதுவான மனநிலை கொண்டவர்கள் படிக்க உகந்ததல்ல.  இசைஞானியின் ஒரு தீவிர ரசிகனாக பாரபட்ச மனநிலையில் எழுதப்பட்டது. எனவே ராஜா ரசிகர்கள் தவிர்த்து மற்றவர்கள், இதைப் படிப்பதை தவிர்த்து விடலாம்.

 தமிழ் சினிமா ரசிகன் சமீபகாலமாக அனுபவித்துவரும் கொடுமைகளில் தலையாயது, படங்களைப் பார்த்து அனுபவிப்பதை விடவும் கொடுமையானது, என்று நான் கருதுவது, பட ரிலீஸுக்கு முன்பு நடத்தப்படும் புரமோஷனல் விழாக்கள்.

அந்த விழாக்களில் படம் சம்பந்தப்பட்ட பார்ட்டிகள் ‘அவுத்து விடுவதை, ஒருவருக்கு ஒருவர் கொஞ்சமும் வெக்கமானமின்றி, பரஸ்பர ஜால்ரா தட்டிக்கொள்வதைப் பார்க்க நேருவது.

இதில் ஒவ்வொருவரின் அப்ரோச்சும், அவர்களது அறிவுக்கு ஏற்றவரை மாறுகிறதேயன்றி, உள்ளடக்கம் ஒன்றுதான்.

அப்படி நான் சமீபத்தில் பார்க்க நேர்ந்து நெளிந்த நிகழ்ச்சி, ‘நாங்க புதுசாக்கட்டிக்கிட்ட ’நரிக்குறவ’ ஜோடியான பாலா-வைரமுத்து கூட்டணியின் ‘பரதேசி’ ஆடியோ ரிலீஸ்.

’பட்டுக்குஞ்சங்களுக்கு இனி பப்ளிஸிட்டி எதற்கு?’ என்று எண்ணாமல் பாலாவும், வைரமுத்துவும் ஒருவருக்கு ஒருவர் அடித்துக்கொண்ட ஜால்ரா இருக்கிறதே, நிகழ்ச்சி முடிந்தவுடன் பாதிக்கும் மேற்பட்டோர் ஈ.என்.டி. ஸ்பெஷலிஸ்ட்டுகளை சந்தித்து காதுகளுக்கு ட்ரீட்மெண்ட் எடுத்துவிட்டே வீட்டுக்குச்சென்றதாக தகவல்.

வைரமுத்து ‘பரதேசி’ பாடல்களுக்குத் தேவையான அனைத்துப் பாடல்களையும் அவரது ரத்தத்தால்தான் எழுதினாராம். அதை முதலில் நக்கலாக ‘ஏன் மையி தீர்ந்து போச்சா?’ என்று நினைத்த பாலா பாடல்களைப் படித்து முடித்தபோது, ‘அடடா உண்மையிலேயே ரத்ததாலதான் எழுதியிருக்காரு’ என்று புரிந்துகொண்டாராம்.

இதைக்கேட்டவுடன் வடிவேலுவின் தக்காளிச் சட்னி காமெடிதான் தவிர்க்கமுடியாமல் ஞாபகத்துக்கு வந்துபோகிறது. வைரமுத்துவின் பாடல்களை தக்காளிச்சட்னி என்று நினைத்த பாலா, அதை திடீரென்று ரத்தம்தான் என்று முடிவு செய்யும்போது, நாம் ‘அடடா, ரெண்டு இட்லிக்கு சப்புக்கொட்டி சாப்புடவேண்டிய தக்காளிச்சட்னியை, ரத்தம்னு நெனச்சி பாலா அநியாயத்துக்கு மிஸ் பண்றாரே?’ என்ற பரிதாப உணர்வுதான் அவரிடம் மேலோங்குகிறது.

ஆக, ‘பரதேசி’க்கு தனது ரத்தத்தால் பாட்டெழுதி விட்ட வைரம், ஒருவேளை மறுபடியும் பாட்டெழுத வாய்ப்புத்தந்தால், அடுத்து தனது இரண்டு கிட்னிகளால்தான் எழுதக்கூடும் என்ற நம்பிக்கையோடு ‘பரதேசி’ப் பயலின் பாடல்களைக்கேட்போம்.

பாடல் 1. அவத்தப்பையா,சிவத்தைப்பையா..’   –  பாடியவர்கள் யாசின், வந்தனா ஸ்ரீனிவாசன்.

’சிரட்டையில் பேஞ்ச சிறுமழை போல நெஞ்சுக்கூட்டுக்குள்ள நெறஞ்சிருக்க’

’கூத்துப்பாக்க போகலாம் கூடமாட வாரியா? நெல்லுச்சோறு தாறியா?’

’ஒன் சூழ்ச்சி பலிச்சிருச்சி. நெல்லுச்சோத்துப் பானைக்குள்ள, பூனை விழுந்துடிச்சி’ என்ற, காலம் இதுகாறும் எழுத மறந்த காவிய வரிகளை யாசினும், வந்தனா ஸ்ரீனிவாசனும் பாடியிருக்கிறார்கள்.

நம்ம வீட்டு கெழடிகள் காலத்திலிருந்தே கேட்டுச் சலித்த மெலடி… நெக்ஸ்ட்.

பாடல் 2. செங்காடே சிறுகரடே போய்வரவா?’

மதுபாலகிருஷணன், பிரகதி க்ருபிரசாத் குரலில், ஊரைவிட்டு அகதிகளாய் வெளியேறும் சனங்களின் அவலப் பாட்டு. ஏதோ வாயில் மெல்லுவதற்கு அவலைப் போட்டு பாடுவதுபோல் அத்தனை உணர்ச்சியற்ற உச்சரிப்பு. ‘ஏக் துஜே கே லி யே’வின் ‘தேரே மேரே பீச் ஹையில் துவங்கி, ஒரு பிட்சிலும் பிடிபடாமல், அந்த அகதிகளை விடவும் பரிதாபமாய் பயணிக்கிறது பாட்டு.

ரத்தத்தால் எழுதியவரும் தன் பங்குக்கு,’ புளியங்கொட்டையை அரச்சித்தின்னுதான் பொழச்சிக்கிடக்கிறோம் சாமி, பஞ்சம் பொழைக்கவும் பசியைத்தீர்க்கவும் பச்ச பூமியைக் காமி’ என்று எழுதி, நல்லவேளை அடுத்தவரியில் மாமியை அழைக்காமல் விட்டுவிட்டார்.

8.09 நிமிடங்கள் ஓடுவது, இந்தப்பாடலின், இன்னொரு சொல்லொண்ணாத்துயரம்.

நெக்ஸ்ட்.

பாடல் 3. ‘யாத்தே ஆழிக்கூத்தே,..’

வி.வி.பிரசன்னா, பிரகதி குருபிரசாத் குரலில் மெல்ல ஒரு கஜல் போல ஆரம்பித்து,பிற்பாதியில் ஒப்பாரியாக மாறி, காதைக் கவ்வ ஆரம்பிக்கும் இந்தப்பாடல்,’ ஓர் மிருகம் ஓர் மிருகம் தன்னை அடிமை செய்வதுமில்லை.ஓர் மனிதன், ஓர் அடிமை என்றால் அது மனிதன் செய்த வேலை’ என்ற இதுவரை மனிதகுலம், மிருக இனம் கேட்டிராத அபூர்வ வரிகளுடன் ஆராதனை செய்கிறது.

பாடல் 4. ’தன்னைத்தானே,..’

கானா’ பாலா பாடியிருக்கிறார். மனதைக் கொள்ளை கொள்ளும் குரலில் கர்த்தருக்கு, கானாவில் ஒரு குத்து குத்துகிறார் பாலா, அவர் கிளம்பி வந்து ’எனக்கு இது வேணா’ என்று சொல்லிவிட மாட்டார் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன்.

இப்பாடல் ரத்தத்தால் எழுதப்பட்டதல்ல. ஆடியோ கவரில் இப்பாடலை எழுதியவர் பெயர் இடம் பெறவில்லை. கர்த்தரை லேசாய் கலாய்த்திருப்பதைப் பார்த்தால் பாலா அண்ட் பாலாவே எழுதியிருப்பதற்கான அறிகுறி அதிகம் தெரிகிறது.

பாடல் 5. செந்நீர்தானா, செந்நீர்தானா,..?’

இப்பாடலை கங்கை அமரனும், ப்ரியா ஹேமேஷும் பாடியிருக்கிறார்கள். படத்தில் இளையராஜா இசை இல்லாத உறுத்தலை துரத்தும் முகமாக, அவரது குரலுக்கு எப்போதும், ஒரு அறுபதடி தள்ளி நிற்கும் கங்கை அமரனை அழைத்து ‘உண்டான சொந்தம் [ராஜா] உடைகின்ற போது, இல்லாத சொந்தம் [கங்.அமரர்] உறவாகுமே’ என்று கரையவிட்டிருக்கிறார்.

இந்தப்பாடலை கங்கை அமரனைப் பாடவிட்டதுமன்றி, பாடல்களில் பல இடங்களில் ‘ராஜாத்தனத்தை’ ஜி.வி.பிரகாஷ் மூலம் கொண்டுவர முயன்றிருப்பதை உணர முடிகிறது. அது ஒரு பிச்சைக் காரனுக்கு ராஜபாட்டை சூடமுயலும் முயற்சியைப் போலவே, தோல்வியில் முடிவதையும் அனுபவித்துத் தொலைக்கவேண்டியிருக்கிறது.

இறுதியாக பாலாவின் இந்தப் ’பரதேச’ இசைகுறித்து, அவரது புதிய கூட்டாளி வைரமுத்து, இந்தப்படத்துக்கு எழுதிய  ரத்தவரிகளிலேயே சொல்வதாக இருந்தால்,…

‘… இளையராஜா விட்டு, யுவன்ஷங்கர் ராஜா விட்டு, நாம்

எலியானோம் ஜீ.வி.ப்ரகாஷ் என்ற பூனைக்கு வாக்கப்பட்டு…

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.