வருடக்கடைசி வந்துவிட்டாலே எதையாவது ரீ-வைண்ட் செய்து பார்ப்பது மனித இயல்பு. தனது ‘விஸ்வரூபம்’ பட ரிலீஸின் பிக்கல் பிடுங்கல்களுக்கு மத்தியிலும், தான் எவ்வளவோ அட்வைஸ் பண்ணியபோதும், ‘இதுக்குப்போயி அலட்டிக்கலாமா?’ என்று நக்கல்பாட்டு பாடியபடியே ரஜினி செயின் ஸ்மோக்கராக நீடித்ததை
நினைவு கூர்கிறார் கமல்.
‘ என் பெற்றோர் என்னை வளர்த்த விதமோ அல்லது என்னை வழிநடத்தியவர்கள் என்மீது காட்டிய அக்கறையோ தெரியவில்லை. ஆரம்பகாலத்தில் இருந்து சிகரெட் புகைக்கும் பழக்கம் என்னைத் தொற்றிக்கொள்ளவே இல்லை. இன்றுவரை நான் ஆரோக்கியமாக இருக்க அது ஒரு முக்கியகாரணம் என்பதை மறக்க முடியாது. ஆனால் அப்போது செயின் ஸ்மோக்கராக இருந்த ரஜினியிடம் நான் எவ்வளவோ முறை சிகரெட்டை மட்டும் விட்டுவிடும்படி மன்றாடிக்க்கேட்டுக்கொண்டும் அவர் விடமுன்வரவில்லை. அன்றைய தேதியில் எனது வேண்டுகோளுக்கு அவரது பதில், ‘ இதுக்குப்போயி அலட்டிக்கலாமா, என்னடா பொல்லாத வாழ்க்கை’ என்று நாங்கள் இருவரும் இணைந்து நடித்த ‘தப்புத்தாளங்கள்’ படத்தின் பாடலாகவே இருந்தது.
சில மாதங்களுக்கு முன்பு ரஜினி, உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டிருந்தபோது, எனக்கு அவரது உதாசீனம்தான் ஞாபகத்துக்கு வந்தது. குணமாகி வந்து தனது பிறந்தநாளன்று ரசிகர்களிடம், ‘சிகரட் கொடியது. அதைக்கைவிடுங்கள்’ என்று அவர் வேண்டுகோள் வைத்தபோது அதிகம் மனம்மகிழ்ந்தவன் நான் தான். நாங்கள் இருவரும் ஏறத்தாழ ஒத்தவயதினராயிருந்தும், ரஜினி என்னை விட வயதானவராகத் தோற்றமளிக்கக் காரணமே அவரது சிகரட் பழக்கம் தான்’’ என்கிறார் கமல்.