சுமார் 7 வருடங்களுக்குப் பின் திரும்பவும் தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்கிறார் பூ பார்வதி மேனன்.
வந்தே மாதரம் ஆல்பத்தின் பாடல்களை படமாக்கிய பரத்பாலா இயக்கி வரும் படம் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் மரியான். இதற்கு
இசையமைப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான் தான். நாகர்கோவிலில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மரியானுக்குச் ஜோடியாக நடிக்கிறார் பூ பார்வதி. இதன் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் நுழைந்திருப்பது பற்றி அவரிடம் கேட்டபோது.
“கடந்த ஏழு வருடங்களில் மொத்தமே ஏழு படங்கள் தான் நடித்திருக்கிறேன். இவையும் மலையாளம் மற்றும் பிற மொழிப் படங்களே. ஏன் இவ்வளவு குறைவான படங்களில் நடித்தேன் என்று என் நண்பர்கள் பலர் என்னை கண்டித்துள்ளனர். வாய்ப்புக்கள் இருக்கும் போது கிடைக்கும் எல்லா படங்களிலும் நடித்துவிடுவது எனக்கு சரியாகப் பொருந்தவில்லை.
மேலும் நல்ல படங்கள், கதைகளுக்காக காத்திருப்பதில் ஒன்றும் தவறில்லை என்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை படத்தின் இயக்குநர்களைப் பொறுத்தே படத்தை நான் முடிவு செய்கிறேன். பெரிய ஹீரோக்களுடன் சேர்ந்து நடிக்கும் போது வளரலாம் தான். ஆனால் திருப்தியும் முக்கியம்.
நடித்து விட்டுப் போனால் இரவில் நிம்மதியாக தூங்க முடியவேண்டும். நாளை எனக்குத் திருமணமாகி குழந்தை பிறந்து, அது என் படத்தைப் பார்க்கும் போது பெருமைப் படவேண்டுமேயன்றி, ஏம்மா இந்தப் படத்துல நடிச்சேன்னு திட்டக்கூடாது. அது மாதிரி தான் நடிக்கனும்னு நினைக்கிறேன்.
இயக்குனர் சசி சார் இயக்கிய பூ படத்தில் வந்த மாரி கேரக்டர் ரொம்ப உயிர்ப்புள்ள கேரக்டர். அதற்குப் பின்னர் இப்போது மரியானில் நான் நடிக்கும் பனிமலர் என்கிற கேரக்டரும் அதே போன்று சவாலானது. அதற்காக கமர்ஷியல் படங்களில் நடிக்கமாட்டேன் என்றில்லை. கதையும், கதாபாத்திரமும் பிடிக்கும் பட்சத்தில் கண்டிப்பாக நடிப்பேன்.
படப்பிடிப்பின் போது ஒரு காட்சியில் தனுஷ் என்னை நிஜமாகவே உதைத்துவிட்டார். ஆனாலும் கஷ்டப்பட்டு ஒரு குடும்பமாக உழைத்து படப்பிடிப்பு செய்து கொண்டிருக்கையில் அனைவரது உழைப்பின் முன்னால் இந்த உதை பெரிதாக வலித்துவிடவில்லை. ஆனால் அந்தக் காட்சி சிறப்பாக வந்தது என்று தெரிந்த போது மனம் மகிழ்ந்தேன். ” என்கிறார் பார்வதி மேனன்.
பூ படம் சுமாராகப் போனாலும் உங்க நடிப்பை எல்லோரும் பாராட்டுனாங்க மேடம். அதைப் போல இந்தப் படத்துலேயும் உங்க பேர் நிலைச்சு நிற்கிற மாதிரி பண்ணுங்க; நீங்க நினைச்சிருக்கிற உயரத்துக்கு கண்டிப்பா போவீங்க.