2008ல் வெளிவந்த பார்த்திபன் நடித்த ‘அம்முவாகிய நான்’ என்கிற படம். ஒரு பாலியல் தொழிலாளி குடும்ப வாழ்வில் நுழையும் போது சந்திக்கும் பிரச்சனைகளை அலசிய வித்தியாசமான படம். அதை இயக்கியவர் தான் பத்மாமகன். அப்படம் இந்தியன் பனோரமா விருதுக்கு தெரிவானது. கமல்ஹாசன் நடித்த நாயகன் படத்துக்கு அப்புறம் தமிழில் இருந்து இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட படம் இது மட்டுமே.
அக்காலகட்டத்தில் ‘கலைஞர்’களுக்கே உரித்தான ஸ்பெஷல் கெட்டபழக்கமான குடிக்கு அடிமையாயிருந்தார் பத்மாமகன். அம்முவிற்குப் பிறகு வேறு பட வாய்ப்புகள் வராததால் மேலும் குடிகாரராகிவிட்டார். குவார்ட்டரில் ஆரம்பித்து ஃபுல் வரை வந்துவிட்ட நிலையில் மூன்று ஆண்டுகள் ஓடிவிட புத்தாண்டன்று வந்து ஒரு குறுஞ்செய்தியை வாசிக்கிறார்.
“பிறப்பும், இறப்பும் தான் உன்னைத் தானே தேடி வரும். மற்றவைகளை நாம்தான் தேடிச் செல்லவேண்டும்”
“அப்படி தனது லட்சியத்தைத் தேடிச் செல்லாமல் இறப்பைத் தேடி ஓடிக் கொண்டிருந்த எனது மடத்தனத்தை எண்ணி அன்றிலிருந்து குடிப்பதையே விட்டுவிட்டேன்” என்கிறார் இவர். இவர் விட்டுவிட்டாலும் சமூகம் லேசில் விடவில்லை. படவாய்ப்புக் கேட்டு இவர் மீண்டும் செல்ல ஆரம்பித்தபோது எல்லோரும் “அவன் முழுநேர குடிகாரனாச்சே” என்றே மறுத்திருக்கிறார்கள்.
அப்போது கைகொடுத்தவர் அவரை எப்போதும் முழுமையாக நம்பிய அவர் மனைவியே. மனைவியின் நகைகளை அடகுவைத்து 10 ஆயிரம் ரூபாயில் படத்தை ஆரம்பிப்பதாக கிளம்பிய பத்மாமகனுக்கு பின்பு தயாரிப்பாளரும் கிடைத்தார்கள்.
இப்போது ‘நேற்று இன்று’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இப்படத்தை கமர்ஷியல் படமாக எடுத்திருக்கும் பத்மாமகன் மூன்று ஆண்டுகளாக மதுவும், சிகெரட்டும் குடிப்பதில்லை. இக்காலத்தில் இதைச் சொன்னால் யாரும் நம்ப மறுக்கிறார்கள் என்கிறார். வாஸ்தவம் தானே ! தெரு திரும்பினால், ரோட்டில் கால்தடுக்கி விழுந்து நிமிர்ந்தால் தெரியும் டாஸமாக்கைத் தாண்டி ஒருவன் கற்புடன் வாழ்வதென்பது அவ்வளவு சாதாரண விஷயமா என்ன?
கமர்ஷியலா படம் எடுத்தாச்சு. அடுத்து என்ன? ஓடுமா ? ஓடாதா ? கவலை மனசில் ஓட ஆரம்பிக்கும். எனவே பழையபடி டாஸ்மாக் பக்கமா? என்றால் “இல்லை” என்று தலையசைக்கிறார். அம்முவாகிய நான் போல 7 வயது சிறுவனின் வாழ்க்கையைத் தொடரும் வித்தியாசமான கதையொன்றை வைத்திருப்பதாகவும் அதை அடுத்து படமாக்க முயற்சிக்க இருப்பதாகவும் சொல்லிச் சிரிக்கிறார்.
“குடிப்பதை செலிப்ரேஷன் என்று சொல்லி எல்லாரையும் குனிய வைத்து கிணற்றில் எட்டி உதைக்கும் அறிவு ஜீவிகள் நிறைந்த உலகத்துல நீங்க நடமாடுறது ரொம்ப கஷ்டமாச்சே பத்மாமகன் சார்! சீக்கிரம் திரும்பி வந்து பேசாம நம்ம ஜோதியில் ஐக்கியமாயிடுங்க” என்று ‘டாஸ்மாக் டான்கிகள்’ சங்கத்தின் சார்பாக அன்பாய் அழைப்பு விடுக்கிறோம்..
வெற்றி தோல்வியெல்லாம் இயக்குனருக்கு ஜகஜம்.. வாங்க பாஸ்..