சமீபத்தில் எஸ்.எஸ்.குமரன் இசையில் வைரமுத்துவின் வரிகள் மீண்டும் சினிமாவில் ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன.
அது பற்றி அவரிடம் கேட்டபோது சினிமா பாட்டு எழுதுவது பற்றி அவர் நமக்கு நடத்திய பாடம் கீழே..
“பாடல் எழுதி மெட்டமைப்பது, மெட்டுக்குப் பாட்டு எழுதுவது என்று இரு மரபுகள் தமிழ்த் திரையிசையில் இருந்து வந்துள்ளன. காலப்போக்கில் எழுதிய பாட்டுக்கு மெட்டமைப்பது படிப்படியாகக் குறைந்து இன்றைக்கு அவ்வழக்கம் நின்றேவிட்டது.
நான் இதுவரை எழுதியுள்ள ஏழாயிரம் பாடல்களில் பத்து பாடல்களைத் தவிர அத்தனையும் மெட்டுக்கு எழுதிய பாடல்கள் தான். இரண்டு முறைகளும் இருந்தால் தான் இசையமைப்பாளரும், கவிஞரும் ரசிகனுக்கு இரு வேறு சுவை விருந்துகள் படைக்க முடியும்.
மெட்டு என்பது ஒலியின் பின்னால் சென்று கருத்து தேடுவது. எழுதிக் கொடுத்த பாட்டுக்கு மெட்டமையும் போது கருத்துதான் இசைக்கு தலைமை தாங்குகிறது. எல்லாப் பாடல்களும் எழுதிக் கொடுத்து மெட்டுப் போடப்படவேண்டும் என்று சொல்லவரவில்லை. ஆனால் இரண்டும் கலந்திருந்தால் தான் இசைப் பாட்டு இன்னும் செழுமை பெறும் என்பது என் எண்ணம்.
ஜி.ராமநாதன், எஸ்.வி.வெங்கட்ராமன், எம்.எஸ்.வி, இளையராஜா இவர்கள் எல்லாரையும் விட கே.வி.மகாதேவனைத் தான் பாடலாசிரியர்கள் மிகவும் நேசிப்பார்கள். ஏனென்றால் அவர் மட்டும் தான் எழுத்தை அதிகம் வாங்கி இசையமைத்தவர்.
அண்மையில் கடல் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் எனது இரண்டு கவிதைகளை எடுத்து இசையமைத்திருந்தார். பெரிதும் பாராட்டப்பட்ட பாடல்கள் அவை. எஸ்.எஸ்.குமரன் இசையமைக்கும் ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ படத்திற்கு அனைத்துப் பாடல்களையும் என்னிடம் எழுதி வாங்கிக் கொண்டு சென்று அதற்குத் தான் மெட்டமைத்திருக்கிறார்.
அவர் அடுத்தடுத்த படங்களிலும் என்னிடம் பாட்டுக்களை எழுதி வாங்கியே இசையமைத்தால் என் சம்பளத்தில் பாதியை குறைத்துக் கொள்கிறேன். “
வைரமுத்துவின் இசைக்கரிசனம் எல்லாம் சரிதான். கடைசி வரியின் பன்ச் டயலாக் தான் இதில் ஹைலைட்டானது. அதில் வைரமய்யா அடுத்த படத்திற்கு சான்ஸ் தேடும் சாமர்த்தியமும், பாட்டுக்கு மெட்டு போட்டால் ஐம்பது சதவீதம் தள்ளுபடி தந்து பிஸ்னெஸ்ஸை வளர்க்கும் உத்தியும் தெரிகிறது.
தள்ளுபடியில் பாடல் தேவைப்படுபவர்கள் உடனே விரையவும்..