எஸ்.எம்.ஆர். கிரியேஷன்ஸ் சார்பில் புதுச்சேரி ஆர்.பன்னீர் செல்வம் தயாரிக்கும் படம் ‘நாலு பொண்ணு நாலு பசங்க’. இந்த படத்தின் கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி ஷங்கர் –என்பவருடன் இணைந்து இசையமைத்து படத்தை டைரக்ஷன் செய்துள்ளார் சிரஞ்சீவி அனீஸ்.
இந்தப் படத்தில் நான்கு கதாநாயகன், நான்கு கதாநாயகிகள் என புதுமுகங்கள் நடிக்க, இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், பவர் ஸ்டார் சீனிவாசன், நெல்லை சிவா, ஆர்த்தி, நான்ஸி, ராமசந்திரன், சுந்தரி, வீரா, உட்பட பலர் நடிக்கின்றனர். இணை தயாரிப்பு – ஆர்.மகேந்திர வர்மன்
இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள ஆர்கேவி ஸ்டூடியோவில் நடைபெற்றது. விழாவுக்கு தலைமை தாங்கி முதல் பாடல் சிடியை இயக்குனர் பி.வாசு வெளியிட, இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன் பெற்றுக்கொண்டார்
விழாவில் இயக்குனர் பி.வாசு பேசியதாவது:-
பெரிய படங்களின் விழாக்களுக்கு நிறைய விஐபிக்கள் வருவார்கள். சிறிய படங்களின் விழாக்களில்தான் நான் அதிகம் கலந்து கொள்ள வேண்டும் என நினைப்பேன். அதே போல சரியான நேரத்துக்கு வார வேண்டும் என்று நினைப்பேன். இந்த நேரம் தவறாமையை நான் ரஜினியிடம் இருந்து கற்றுக்கொண்டேன். அவர் படப்பிடிப்பில் சொன்ன நேரத்துக்கு முன்பே அரை மணி நேரம முன்பே மேக்கப்புடன் தயாராக இருப்பார்.
அவருடன் முதலில் பணக்காரன் படத்தில் இணைந்தேன். அந்தப் படத்தின் படப்பிடிப்பில் ஒரு நாள் வேறு நடிகர்களை வைத்து சில ஷாட்ஸ் எடுக்க வேண்டி இருந்தது. அதனால், ரஜினி சார் மேக்கப் அறையில் இருக்கட்டும். இவர்களை எடுத்துவிட்டு ரஜினி சாரை அழைக்கலாம் என்று உதவியாளர்களிடம் தெரிவித்தேன்.
அதற்குள் ரஜினி சார் ஸ்பாட்டில் ஆஜராகி விட்டார். அவரிடம் ‘’உங்களை வைத்துக்கொண்டு, மற்றவர்கள் நடிக்கும் காட்சியை எடுத்தால், தயாரிப்பாளர் என்னை தப்பாக நினைப்பார். அதுவரை நீங்கள் அறையில் இருங்கள்’’ என்று அவரிடம் கூறினேன்.
அதற்கு அவர் சொன்னார், ‘’ரஜினி நடிக்க வராமல் அறையில் இருக்கிறாரே என்று தயாரிப்பாளர் என்னை தப்பா நினைக்கா மாட்டாரா?’’ என்று திருப்பி கேட்டார். அதனால் சொன்ன நேரத்துக்கு முன்பே மேக்கப்புடன் வந்து ஸ்பாட்டில் இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினி. நேரத்தை சரியாக கடை பிடிப்பவர்.
நேரத்தை சிவாஜி சார் கடைபிடிப்பார் என்று கேள்வி பட்டிருக்கிறேன். அதே போல ரஜினி சாரும் கடைப்பிடிப்பதை நேரில் பார்த்திருக்கிறேன் ரஜினியிடம் இருந்துதான் நான், நேரத்தை கடை பிடிக்கும் பழக்கத்தை கற்றுக்கொண்டேன்
இந்தப் படம் அப்பர்ட்மெண்டில் குடியிருக்கும் மக்களின் வாழ்க்கையில் உள்ள சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பாக இருக்கும் என்பதை இதன் பாடலும் முன்னோட்ட காட்சியும் தெரிவிக்கிறது. இயக்குனர் அனீஸ், தயாரிப்பாளர் புதுச்சேரி பன்னீர் செல்வம், மகேந்திர வர்மன், ஒளிப்பதிவாளர் ஆலிவர் டேனிஸ்டன் என அனைவரும் வெற்றி பெற வாழ்துகிறேன்
இவ்வாறு இயக்குனர் பி,வாசு கூறினார்.
நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன், இயக்குனர்கள் பேரரசு, லியாகத் அலிகான் ஆகியோரும் வாழ்த்தி பேசினார்கள். விழாவுக்கு வந்த அனைவரையும் இயக்குனர் சிரஞ்சீவி அனீஸ் வரவேற்றார். முடிவில் தயாரிப்பாளர் புதுச்சேரி பன்னீர் செல்வம் நன்றி கூறினார். விழா நிகழ்ச்சிகளை படத்தின் வசன கர்த்தா த்ரேதா ரோஷினி தொகுத்து வழங்கினார்
கதாநாயகன் குமார், ஒளிப்பதிவாளர் ஆலிவர் டேனிஸ்டன், வசனகர்த்தா த்ரேதா ரோஷினி, நடன இயக்குனர் சிவா உள்ளிட்டோருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார் இயக்குனர் பி.வாசு