bombay-talkies-movie-review

பாம்பே டாக்கீஸ் 1 (Bombay Talkies) : இந்திய சினிமாவின் நூறாண்டு நிறைவை நினைவுறுத்தும் விதமாக 2013 இல் வெளிவந்திருக்கும் நான்கு குறும்படங்களை உள்ளடக்கிய பாம்பே டாக்கீஸ், இந்தி சினிமா உலகிற்கு ஒரு நாகரீகமான சமர்ப்பணம். தலைப்பில்லாத இந்த நான்கு படங்களை கரன் ஜோஹர், தீபங்கர் பானர்ஜி, ஜோயா அக்தர், அனுராக் காஸ்யப் ஆகியோர் இயக்கி இருக்கிறார்கள்.

மும்பையின் நடுத்தர வர்க்க குடியிருப்பு. வேகமாக வீட்டுக்குள் நுழையும் இளைஞன் அவினாஷ் படுக்கையிலிருக்கும் தந்தையின் சட்டையைப் பிடித்து எழுப்பி சுவரோரமாய்ச் சார்த்தி ‘ நான் அலி அல்ல.. நான் ஒரு ஹோமோசெக்ஸுவல்… நான் அலி அல்ல…’ என்று அழுகையும் ஆக்ரோஷமுமாய் கத்திவிட்டு பெட்டியை தூக்கிக் கொண்டு வெளியேறுகிறான். அம்மா செய்வதறியாது திகைத்துப் பார்த்துக் கொண்டிக்கிறாள்.

ஒரு மேல்நடுத்தரக் குடியிருப்பு. தொலைக்காட்சி சேனலில் பணிபுரியும் தேவும் ஒரு பத்திரிக்கையில் பணிபுரியும் காயத்ரியும் கணவன் மனைவி. முதுகு முழுவதும் தெரியும் படியான கவர்ச்சியான உடையணிந்து அலுவலகத்திற்குப் புறப்பட தயாராகிக் கொண்டிருக்கும் மனைவியாகிய காயத்ரியை சட்டைசெய்யாமல் சம்பிரதாயமாக விடைபெற்று வெளியேறுகிறான் தேவ். இல்லறவாழ்வின் சலிப்பும் பரஸ்பர ஆர்வமின்மையும் அப்பட்டமாய் தெரிகிறது.

காயத்ரியின் அலுவலகத்தில் மூன்றுமாதத்திற்கு வேலைசெய்ய வந்திருக்கும் அவினாஷ், காயத்ரியிடம் எடுத்த எடுப்பில்… ‘பை த வே .. நான் ஒரு gay.. ‘ என்கிறான். அவளும் சற்றும் சளைக்காமல் ‘நீ ஒன்னும் டெர்ரிஸ்ட் இல்லையே…’ என்றவாறு சகஜமாகிறாள். இருவரும் நண்பர்களாக பழகத்தொடங்குகிறார்கள்.

சங்கோஜமில்லாமல் எல்லாவற்றையும் பேசிக்கொள்கிறார்கள். ஒருவனை ‘ gay’ என்று எப்படி அடையாளம் காண்பது? என்கிறாள். நீ மாதுரி ரசிகனா? ஸ்ரீதேவி ரசிகனா? என்று கேட்டால் தெரிந்துவிடும் என்கிறான். ஒருவன் ஸ்ரீதேவி ரசிகன் என்றால் அவன் ஒரு ‘gay’ ஆகத்தான் இருப்பான் என்கிறான். கொஞ்ச நேரத்தில் காயத்ரி அந்த அலுவலகத்தில் திடகாத்திரமான ஒருவனை அழைத்துவந்து, அவினாஷ் இவர் ஸ்ரீதேவி ரசிகராம்.. என்று நமட்டு சிரிப்பு சிரிக்கிறாள்.

ஒரு நாள் அலுவலகத்தின் நடுவில் வைத்து ‘ காயத்ரி.. எத்தனை தடவை நீங்க செக்ஸ் வைச்சுக்கிறீங்க.. என்கிறான்…. யோவ் நடு அலுவலகத்தில் என் செக்ஸ் வாழ்க்கையைப் பத்திச் சொல்லணுமா… என்று தணிந்த குரலில் கோபிக்கிறாள்.. அவினாஷ் தொடர்ந்து நச்சரிக்கிறான்… இரண்டு தடவை என்கிறாள்… வாரத்துக்கு ரென்டு தடவை… மோசமில்லை என்கிறான்.. இல்ல .. மாதத்திற்கு ரென்டு தடவை… என்கிறாள்..

அவினாஷின் பிறந்த நாளன்று அவனை தன் வீட்டுக்கு டின்னருக்குக் கூப்பிடுகிறாள். என்னவோ அவினாசின் பேச்சும் நடவடிக்கைகளும் தேவுக்குப் பிடிப்பதில்லை. ஆனால் இருவருக்கும் ஒரு விசயத்தில் ஒத்த ரசனை இருப்பது தெரியவருகிறது. இருவரும் பழைய இந்திப்படப்பாடல் ரசிகர்கள் என்பதுதான் அது. ஆனால் அவினாஷுக்கு தேவை பிடித்துப் போகிறது. இப்போது காயத்ரி – தேவ் எனும் தம்பதிகளுக்கிடையே தன்னை வெளிப்படையாக ‘gay‘ என்று அறிவித்துக் கொள்ளும் அவினாஷின் வருகை என்ன செய்யக் காத்திருக்கிறது என்பதுதான் கதை. (முழுவதும் கதையைச் சொல்லி படம் உண்டாக்கும் சுவாரஸ்யத்தை குறைக்கக் கூடாதென்பதால் இத்துடன் நிறுத்துகிறேன்)

ஒரு சிறுகதைக்குண்டான தன்மையில், இடையில் ஆரம்பித்து இடையிலேயே முடிவற்று விடும் இந்தக் கதை மாறிவரும் இந்தியாவின் மாற்றுப் பாலினத்தவரின் உணர்வுகளை வெளிப்படுத்தும் சிறு முயற்சியாக இருக்கிறது. தன்னை மாற்றுப் பாலினத்தவராக உணர்ந்தும் வெளிப்படுத்த முடியாமல், வெளிப்படுத்தி குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டு தற்கொலையைத் தீர்வாக்கும் இந்தியச் சூழலில் இத்தகைய படங்கள் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. மாற்றுப் பாலினத்தவரின் பிரச்சனைகளைப் பேசுகிற படம் இதுவல்ல என்றாலும் அவர்களை முக்கியப் பாத்திரங்களாக உலவவிடும்போது பொதுப்புத்தியில் அவர்களை சகஜமாக ஏற்றுக்கொள்கிற மனநிலை உருவாகும் என்று நம்பலாம்.

மனிதர்களில் எதிர்பால் (straight sex) அதாவது ஆண் x பெண் உறவு உள்ளவர்கள் 90% பேர். சுயபால் ஈர்ப்பு உள்ளவர்கள் (Homosexuals) 5% பேர் மட்டுமே. இருபால் ஈர்ப்புள்ளவர்கள் (By Sexual) 80% பேர் என்கின்றன ஆய்வுகள். ஒரு சுயபால் ஈர்ப்பு உள்ளவன் தன்னை வெளிப்படையாக வெளிப்படுத்திக் கொள்வதைச் சொல்லும் படமாக இருக்கும் அதே வேளையில் தான் இருபால் ஈர்ப்பு உள்ளவன் என்பதை ஒருவன் சந்தர்ப்பவசத்தால் கண்டுகொள்கிற படமாகவும் இதைக் கொள்ள முடியும். மொத்தத்தில் இந்திய சினிமா கையாளத் தயங்குகிற விசயத்தை எடுத்துக் கொண்டதற்காக இப்படத்தை ஆதரிக்க வேண்டும்.

மிக சுவாரஸ்யமான உரையாடல்களும் அழகான ஒளிப்பதிவும் மிகப் பொருத்தமான நடிகர்களும் சிறப்பான இசையும் அற்புதமான திரைப்பட அனுபவத்தைச் சாத்தியமாக்குகின்றன. இந்தியாவில் சிறந்த பின்னனி இசையை வழங்கக் கூடியவராக அமித் திரிவேதியைக் குறிப்பிடலாம் என்று தோன்றுகிறது. இந்தியப் படங்களின் சாபக்கேடு பின்னனி இசைதான். இந்திப் படங்களில் இந்நிலை மாறிவருகிறது. இப்படத்தின் நான்கு படங்களிலும் இசை மிகச் சிறப்பான பங்கு வகிக்கிறது. கரன் ஜோஹரின் நேர்த்தியான இயக்கத்தில் வெளிவந்துள்ள நல்ல குறும்படம் இது.

இரா.ப்ரபாகர்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.