bindu-madhavi-interview

ஆவக்காய் பிரியாணி என்கிற படத்தில் அறிமுகமாகி கேடி பில்லா கில்லாடி ரங்கா, ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் என்று பிஸி பிஸியாக மாறிவிட்ட நடிகை பிந்து மாதவியை ஒரு ஷூட்டிங் இடைவேளையில் சந்தித்துப் பேசினோம். கன்னக்குழி விழ சிரித்தபடியே பேசினார்.

சினிமாவில் நடிக்கவேண்டும் என்பது உங்கள் நீண்ட நாளைய கனவா?
இல்லை. எல்.கே.ஜி படிக்கும் சிறுவயதில் எனக்கு விமானப் பணிப்பெணாணாக வேண்டும் என்பதுதான் ஆசை. பள்ளிக்கூடம் போகும் வயதில் பைலட்டாக விரும்பினேன். காலேஜ் படிக்கும்போது ‘கையோட்டி அக்ளி’
என்ற ஆங்கிலப்படம் பார்த்து அதில் வரும் நாயகிபோல மதுபானம் விற்பனை செய்யும் பெண்ணாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் இது எதுவாகவும் மாறாமல் சினிமாவுக்கு வந்துவிட்டேன்.

சினிமாவுக்குள் நீங்கள் எப்படி வந்தீர்கள்?
காதல் தோல்வி தான் காரணம். நான் வேலூரில் கல்லூரியில் பயோடெக் படித்துக் கொண்டிருந்தபோது கூடப்படித்த ஒருவரை காதலித்தேன். அவரும் என்னை காதலித்தார். ஆனால் படிப்பு முடிந்து மேற்படிப்பிற்கு அமெரிக்கா சென்ற அவர் அங்கு போனதும் அங்கு வேறொரு பெண்ணை காதலிக்க ஆரம்பித்துவிட்டார்.

மிகவும் அதிர்ச்சிக்குள்ளான எனக்கு வாழ்க்கையே ஸ்தம்பித்துவிட்டது. என் காதல் தோல்வியை நினைத்து அழுதேன். எதிர்கால வாழ்க்கை பற்றி யோசித்தபோது பயம் வந்தது. எவ்வளவு ஏமாளியாக வாழ்ந்திருக்கிறேன் என்பதை நினைக்க நினைக்க என்மேலேயே எனக்கு வெறுப்பு வந்தது. அப்போது தான் எதையாவது சாதிக்கவேண்டும் என்கிற வெறியும் வந்தது. அதனைத் தொடர்ந்து நான் மாடலிங் துறைக்குப் போனேன். அது என்னை சினிமாவுக்குள் அறிமுகப்படுத்திவிட்டது.

இன்னும் மனதில் அந்தக் காதல் இருக்கிறதா?
அது எப்படிப் போகும் ? அதன் தாக்கமும் வலிகளும் கூட இன்னும் இருக்கின்றன. ஆனால் நான் வாழ்க்கையில் வெற்றிபெற ஒருவகையில் இந்தக் காதல் தோல்விதான் காரணமாக இருந்திருக்கிறது. எனவே இந்தக் காதல் தோல்விக்கு நான் நன்றியும் சொல்வேன்.

உங்களின் சினிமா வாய்ப்புக்கள் எப்படி அமைந்தன?
சினிமா வாய்ப்புக்காக நான் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்து இறங்கியபோது எனக்கு சென்னையில் யாரையுமே தெரியாது. ரயில் நிலையத்தில் இருந்த ஒரு டாக்சி டிரைவரிடம் பணத்தைக் கொடுத்து நான் இங்கு பாதுகாப்பாக தங்க ஒரு இடம் வேண்டும் என்று கேட்டேன். பெண்கள் தங்கும் விடுதி ஒன்றிற்கு அழைத்துப் போனார். விடுதியில் தங்கி வாய்ப்புக்கள் தேட ஆரம்பித்தேன். நான் சினிமாவில் நடிப்பதை கண்டித்து என் அப்பா என்னுடன் இரண்டு வருடங்கள் பேசாமலிருந்தார்.

வேலூரில் படித்தும் தமிழ் பேசத்தெரியவில்லையே உங்களுக்கு ?
வேலூரில் படிக்கும் காலத்தில் பெரும்பாலான பெண்களைப் போல நண்பர்களுடன் ஆங்கிலத்திலேயே பேசுவேன். பிரஸ்டீஜ் கருதி தமிழில் பேசவே மாட்டேன். தமிழில் இப்போது பேச ஆரம்பித்துவிட்டேன். ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் நடித்தபோது நடிகர் சூரி எனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தார். இப்போது ஓரளவு தமிழ் பேசுவேன். கூடிய விரைவில் சரளமாக தமிழ் பேசமுடியும் என்று நம்புகிறேன்.

‘சின்ன சில்க்’ என்று உங்களை அழைக்கிறார்களே..
நான் தோற்றத்தில் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா போலவே இருப்பதால் எனக்கு வந்த ஆரம்பகால வாய்ப்புக்கள் பெரும்பாலும் ஐட்டம் சாங்கிற்கு குத்து டான்ஸ் ஆடுகிற வாய்ப்புக்களாகவே இருந்தன. நான் அவற்றை பிடிவாதமாக மறுத்து வந்தேன். நான் நானாகவே இருக்க விரும்புகிறேன். சில்க் ஸ்மிதாவின் நிஜ வாழ்க்கை பற்றித் தெரியவந்தபோது எனக்கு அவர் மீது மிகுந்த இரக்கமும், அன்பும் ஏற்பட்டன.

ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் படத்தில் நடித்ததைப் பற்றி கூறுங்கள்..
சிம்புதேவன் படத்தின் கதையை என்னிடம் சொல்லிவிட்டு அருள் நிதியின் காதலி, நண்பி ஆகிய இருபாத்திரங்களில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து நடிக்கச் சொன்னார். நான் நண்பி பாத்திரத்தை தேர்ந்தெடுத்தேன். நான் இதுவரை நடித்த படங்களில் எனக்கு கிடைத்த வித்தியாசமான ரோல் அது. நண்பர்கள் கூட ஹீரோயின் பாத்திரத்தை ஏன் தேர்வு செய்யவில்லை என்று கண்டித்துவிட்டு பின்பு படம் பார்த்ததும் சரியான சாய்ஸ்தான் என்று பாராட்டினார்கள். இப்படத்தின் மூலம் எனக்கு அருள்நிதி பெஸ்ட் ப்ரண்ட் ஆனார்.

சி.காவுக்கும் உங்களுக்குமிடையே என்ன ?
அப்படியெல்லாம் எதுவுமில்லை. வலிந்து கதை கட்டுவது சுத்த முட்டாள்தனம்.

இயக்குனராகும் ஆசை உண்டா?
கே.பி.கி.ரா படத்தில் நடித்த போது இயக்குனர் பாண்டிராஜ் அவரது உதவியாளர்களுடன் ஜாலியாக வேலை செய்வதைப் பார்த்துவிட்டு ‘சார்.. நானும் உங்ககிட்டே அஸிஸ்டெண்டா வேலைக்குச் சேர்ந்துவிடுகிறேன்’ என்று விளையாட்டாக அவரிடம் சொல்லிக்கொண்டிருப்பேன். மற்றபடி நடிகையாகவே நான் எதுவும் பெரிதாக சாதித்துவிடவில்லை. இதில் எனக்குத் தெரியாத இயக்குனர் ஆசை எப்படி வரும் ?

உங்கள் எதிர்காலம் பற்றி..
என்னுடைய வாழ்க்கையை நானே அமைத்துக் கொள்ள முடிந்திருக்கிறது. அதை தொடர்ந்து வைத்திருப்பேன். என் நண்பர்களுக்கும், சொந்தங்களுக்கும் பக்கபலமாக எப்போதும் நிற்பேன். அப்புறம் எப்படியாவது ஒரு படத்தில் அஜீத்துடன் ஜோடியாக நடித்துவிடவேண்டும் என்பது எனது பெரும் லட்சியமாகவே இருந்து வருகிறது. ஏனென்றால் ‘ஐ லவ் தல’ என்று சொல்லியபடியே சிரிக்கிறார் இந்த கன்னக்குழி சிரிப்பழகி.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.